நீதிமன்றங்கள் யாரை பாதுகாக்கின்றன?

0

2002 குஜராத் கலவரத்தில் கொலை வெறியும் காம வெறியும் தலைக்கேறி அலைந்த மிருகங்களில் ஒன்று சுரேஷ் ரிச்சர்ட். குஜராத் கலவரத்தை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம், “நான் முஸ்லிம் பெண்களை அவர்கள் ஊறுகாய் போல நசுக்கப்படும் வரை கற்பழித்தேன்” என்று பெருமையாக கூறிய இவன் பின்னர் அவனது குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு கலவரம் நடந்து பத்து வருடங்கள் கழித்து 2012 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இவனது 31 வருட சிறை தண்டனையின் நடுவில் 2015 ஆம் ஆண்டு பரோலுக்கு விண்ணப்பித்து வெளியே வந்துள்ளான். பொதுவாக ஒரு கைது பரோலில் வெளியே அனுப்பப் படுகிறார் என்றால் அவர் பரோலில் வெளியே அனுப்ப தகுதியானவரா என்றும் அவரால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்றும் நீதிமன்றம் ஆராய்ந்து பின்னர் பரோல் வழங்கும். அப்படி பரோல் வழங்கும் பட்சத்தில் குறிப்பிட்ட பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கும். இதனால் அப்பகுதி காவல்துறையினர் கூடுதல் கவனத்துடன் செயல் டுவார்கள் என்பதற்காக.

2015 ஜூலை மாதம் பரோலில் வெளிவந்த சுரேஷ், அவனது மனைவியின் கைகளை கட்டி அவருடன் வல்லுறவு மேற்கொண்டுள்ளான். மேலும் சிகரட் துண்டுகளால் அவருக்கு தீக்காயமும் ஏற்படுத்தியுள்ளான். இதில் பாதிக்கப்பட்ட அவனது மனைவி அவன் மீது நீதிமன்றத்தில் புகார் செய்து அவனிடம் இருந்து விவாகரத்தும் கோரினார்.

இவனின் இந்த நடவடிக்கையை கருத்தில் கொண்டு அவன் அக்டோபர் 2015 இல் பரோலுக்கு விண்ணப்பிக்கும் போது நீதிமன்றம் அதனை நிராகரித்தது. ஆனால் மீண்டும் ஜனவரி 2016  இல் சுரேஷ் பரோலுக்கு விண்ணப்பித்தான். அப்போது தனது மகளை காணவில்லை என்றும் அவளை தேட வேண்டும் என்று கூறி பரோலுக்கு விண்ணப்பித்ததால் நீதிமன்றம் அவன் பரோலில் வெளிவர சம்மதித்தது.

அந்த நேரம் சுரேஷ் போன்ற நபர்களைப் பற்றி ஆய்வு நடத்திக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் அவனை சந்தித்துள்ளார். அவரை கடுமையாக தாக்கிய சுரேஷ் அவரது கண்களில் ரத்தம் வரும் வரை தாக்கியுள்ளான். பின்னர் அருகிலிருந்தோர் அந்த பத்திரிகையாளரை அவனிடம் இருந்து காப்பாற்றியுள்ளனர்.

இந்த நிகழ்வு தொடர்பாக அந்த பத்திரிகையாளர் காவல்துறையிடம் புகாரளிக்கவே அவனது பரோல் ரத்து செய்யப்பட்டது. மேலும் இது போல் இனி நிகழாது என்று காவல்துறை தரப்பில் இருந்து உறுதியளிக்கப்பட்டது. அன்றிலிருந்து சுரேஷின் பரோல் விண்ணப்பங்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டது.

ஆனால் நவம்பர் 29 ஆம் தேதி மீண்டும் பரோலில் வந்த சுரேஷ் அவனது முன்னாள் மனைவியின் சகோதரருக்கு அழைப்பு விடுத்து அவர்களிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளான். இதனை அறிந்த அவனது மனைவி அச்சத்தில் உள்ளார். அவனால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் அப்பகுதி காவல்துறைக்கு அழைப்பு விடுத்து சுரேஷ் பரோல் குறித்து விசாரிக்க அவர்கள் அப்படி தங்களுக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை என்று கூறியுள்ளனர். மீண்டும் அவர் காவல்துறையினரை வற்புறுத்தி சுரேஷின் வீட்டிற்கு யாரையும் அனுப்பி இந்த தகவலை சரிபார்க்க முடியுமா என்று கேட்க காவல்துறையினர் சம்மதித்துள்ளனர். இறுதியில் சுரேஷ் பரோலில் வெளிவந்துள்ளது உண்மை என்று தெரியவந்துள்ளது. ஆனால் அவன் பரோலில் வந்தது குறித்தோ எப்போது வந்தான் என்பது குறித்தோ நீதிமன்றம் காவல்துறைக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. அவனுக்கு பரோல் வழங்கிய நீதிபதி யாரெண்டும் தெரியவில்லை. ஏனென்றால் இது தொடர்பான ஆவணங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தான் செய்த கொடூரக் குற்றங்களை தனது பெருமையின் அடையாளமாக கொண்ட ஒருவன், மீண்டும் மீண்டும் வன்முறையை தனது வழக்கமாக்கிக் கொண்ட ஒருவனை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி அவனால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு குறித்து எந்த ஒரு கவலையும் கொள்ளாமல் நீதிமன்றம் செயல்பட்டுள்ளது குறித்து அந்த பத்திரிக்கையாளர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து நீதிமன்றங்கள் யாரை பாதுகாக்கின்றன? குற்றவாளிகளையா? அல்லது பாதிப்புக்குள்ளானவர்களையா? என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

Comments are closed.