நீர்த்துப்போகும் அஜ்மீர் தர்கா வழக்கு விசாரணை

0

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நிதானமான போக்கை கையாளுமாறு தேசிய புலனாய்வு குழுமமான என்.ஐ.ஏ.வின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக மூத்த அரசு வழக்கறிஞர் ரோஹினி சால்யான் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கும் திசை மாறி செல்வது தெரிய வந்துள்ளது.
கடந்த ஓராண்டில் அஜ்மீர்; தர்கா வழக்கில் 14 முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். அவர்களில் ஒருவர் தற்போது ஜார்கண்ட் மாநில அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 முதல் இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ. மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் பதினான்கு சாட்சிகள் தாங்கள் முன்னர் வழங்கிய சாட்சியத்தை தற்போது மாற்றி வருவது தெரியவந்துள்ளது.
‘ஜூன் 2014 விசாரணை முதல் 14 சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர். இவர்கள் அனைவரும் இதற்கு முன்னர் சி.ஆர்.பி.சி. பிரிவு 164ன் கீழ் நீதிபதி முன் சாட்சியம் வழங்கியவர்கள். இவர்கள்தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சிகள்’ என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அஸ்வினி சர்மா தெரிவித்துள்ளார்.
ரன்தீர் சிங், ரோஹித் குமார் ஜா, பானு சிங், சோனு பாண்டே, விஷ்ணு படிதார், ஸ்வப்னில் ஜோஷி, இஷான் சாவ்லா, வினோத் குமார் ஷாவ், பரிமல் பால், கௌதம் பால், விமல் பால், சுகந்தி தேவி, கோவர்தன் சிங் மற்றும் ஹரி நாராயண் ஆகியோரே இந்த பதினான்கு சாட்சிகள். இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் சங் பரிவார் இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் ஆவர்.
இவர்களில் ரன்தீர் சிங் என்பவர் ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. அமைச்சராக உள்ளார். மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு என்கௌண்டர் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வருவது வாடிக்கையாக இருந்தது. தற்போது குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரணையும் நீர்த்து போவதையே இந்த வழக்கின் விசாரணை போக்கு காட்டுகிறது.

Comments are closed.