நெடுவாசல் பெண் போராளிகள் திருச்சி சிறையில் நிர்வாணப் படுத்தப்பட்டதாக புகார்

0

நெடுவாசலில் மத்திய பாஜக அரசின் மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும் அப்பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் போராடிய ஏழுபேர் கொண்ட மாணவர் குழுவில் உள்ள இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட போது அங்கு சோதனை என்கிற பெயரில் பலமுறை நிர்வாணப் படுத்தப்பட்டதாக புகார் எழுத்துள்ளது.

இந்த மாணவிகள் வளர்மதி மற்றும் சுவாதி ஆகியோர் இன்னும் திருச்சி சிறையில் உள்ளனர். இது குறித்து அந்த மாணவிகளின் வழக்கறிஞர் எஸ்.ராஜா கூறுகையில், அந்த மாணவிகள் கைது செய்யப்பட்ட ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் சுமார் ஆறு முறை சோதனை என்கிற பெயரில் நிர்வாணப் படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். தங்களால் இயன்ற அளவு இதனை எதிர்த்து அவர்கள் போராடியதாகவும் ஆனால் காவல்துறை அவர்களிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டது என்று வழக்கறிஞர் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த மாணவிகள் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோவையில் இருந்து நெடுவாசலுக்கு ரயிலில் சென்றுள்ளனர். வழியில் இரயிலிலும் பறை இசைத்து தங்களது பிரச்சாரங்களை செய்தவண்ணம் சென்றுள்ளனர். இவர்களை கரூரில் கைது செய்வதாக காவல்துறை திட்டமிட்டிருந்தது என்றும் ஆனால் அங்கு ஊடகங்கள் கூடியிருந்த காரணத்தால் அவர்களை அங்கு கைது செய்யாமல் குளித்தலையில் வைத்து கைது செய்துள்ளது என்று ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை, இந்த ஏழு மாணவர்களும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்றும் பொது மக்களிடையே இவர்கள் வன்முறையை தூண்டியதாகவும் தெரிவித்துள்ளனர். மாணவிகள் நிர்வாண படுத்தப்பட்டது குறித்து குளித்தலை காவல்துறை ஆய்வாளர் குருநாதன் கருத்து தெரிவிக்கையில், அவர்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டு  நிர்வாணமாக்கப் படவில்லை என்று கூறியுள்ளார்.

இது காவல்துறை மீதான அவர்களின் போலியான குற்றச்சாட்டு என்றும் அதுபோன்ற எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அந்த மாணவர்கள் மத்திய சிறையில் வைத்து தாக்கப்படவோ, நிர்வாணப் படுத்தப்படவோ இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களை ஏப்ரல் 15  ஆம் தேதி கைது செய்து அதே நாளில் நீதிமன்றத்தில் ரிமான்ட் செய்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவில் ஐந்து ஆண்களும் இரு பெண்களும் இருந்ததாகவும், அதில் மூன்று ஆண்கள் மத்திய சிறைக்கு அனுப்பப் பட்டதாகவும் இரண்டு பெண்கள் திருச்சி பெண்கள் சிறைக்கு அனுப்பப் பட்டதாகவும், இன்னும் இருவர் அரியலூர் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டைச் சட்டப் பிரிவு 153, 505 1(B), மற்றும் 7(1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் இந்த கூற்று குறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் ராஜா, மாணவிகள் சிறையில் இருந்து வெளியானதும் சிறை ஜெயிலர் மீது இது தொடர்பான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைக்கப்படும் என்று கூறியுள்ளார். இவ்வழக்கில் குற்றச்சாட்டுக்கள் போலியானது என்றும் அதனை எதிர்த்து தாங்கள் வழக்கு நடத்துவதாகவும் கூறிய அவர், ஆனால் இது எப்படி ஒருவரை நிர்வாணமாக்க காரணமாக அமையும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திருச்சி பெண்கள் சிறையில் இது வெகு சாதரணமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் சிறையில் உள்ள ஒரு பெண் இத்துனை வருட காலங்களில் இந்த பழக்கத்தை இதுவரை எந்த பெண்ணும் எதிர்த்து தான் பார்த்ததில்லை என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான சுகாதாரப் பொருட்கள் கூட மறுக்கப்படுகின்றது என்று அவர் கூறியுள்ளார். முதலில் அந்த மாணவிகளை பிணையில் எடுப்பது தொடர்பான வேலைகளை தாங்கள் நடத்தி வருவதாகவும் அதன் பின்னரே திருச்சி பெண்கள் சிறையின் ஜெயிலர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று வழக்கறிஞர் ராஜா தெரிவித்துள்ளார்.

Comments are closed.