பக்ரீத் பெருநாள் தினத்தில் ரத்த தான முகாம்:ராஜஸ்தான் அரசு உத்தரவுக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு

0

ஜெய்ப்பூர்:பக்ரீத் பெருநாள் தினத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ரத்த தான முகாம் நடத்தவேண்டும் என்ற ராஜஸ்தான் மாநில பா.ஜ.க அரசின் உத்தரவுக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக அவை அறிவித்துள்ளன.
ஜனசங்க தலைவரான தீனதயாள் உபாத்யாவின் பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 25-ஆம் தேதி ரத்த தான முகாம் நடத்துமாறு கல்லூரி முதல்வர்களுக்கு இம்மாதம் 2-ஆம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆயிரக்கணக்கான முஸ்லிம் அரசு ஊழியர்கள் பக்ரீத் பெருநாள் தினத்தை கொண்டாடும் வகையில் தேசிய அளவில் வழங்கப்பட்ட விடுமுறை தினத்தை ரத்துச் செய்யும் நடவடிக்கை என்று முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன.மேலும் செப்டம்பர் 24-ஆம் தேதி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கு எதிராக விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்களின் முக்கியமான புனித தினமான பக்ரீத் பெருநாள் கொண்டாட்டத்தில் இருந்து முஸ்லிம் ஊழியர்களுக்கு தடை விதிப்பது கடுமையான மனித உரிமை மீறல் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேசிய செயலாளர் ஸலீம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.