பங்கஜா முண்டேவின் துறை வெளியிட்ட முறைகேடான 6300 கோடி மதிப்புள்ள டெண்டர் ரத்து 

0

பா.ஜ.க வின் பங்கஜா முண்டே தலைமை வகிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை வெளியிட்ட 6300 கோடி ரூபாய் மதிப்புடைய டெண்டர்களை பாம்பே உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. இந்த டெண்டர்கள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக பெண்கள் சுய உதவிக்குழு புகாரளித்திருந்ததின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டர்கள் குறிப்பிட்ட பெரும் நிறுவனங்களுக்கு நேரடி பயனளிக்கும் வகையில் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது என்று சுமார் 25 பெண்கள் சுய உதவிக் குழுக்கள் புகாரளித்திருந்தன. மேலும் இந்த டெண்டர் வெளியிட்டத்தில் உச்ச நீதி மன்ற விதிமுறைகளும் மீரப்பட்டிருகின்றன என்று இந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் டெண்டர் எடுக்கும் நிறுவனங்களுக்கான பொருளாதார தகுதி மற்றும் வேலை அனுபவ தகுதி ஆகியவையும் இந்த டெண்டரில் திருத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனங்கள் கூறியுள்ளது.

பங்கஜா முண்டே சிங்கப்பூரில் நடக்கும் உலக நீர் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி தலைவர் சச்சின் சாவந்த் கூறியதாவது, “உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பங்கஜா முண்டேவின் துறையை மாஃபியாக்கள் தான் நடத்துகின்றன என்பதை உறுதி படுத்துகிறது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த முறைகேட்டிற்கு பொறுப்பேற்று பங்கஜா முண்டே தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது காங்கிரஸ் கட்சி. கடந்த 2015 இல் கடலை மிட்டாய் வாங்கியதில் பெரும் ஊழல் செய்ததாக இவர் மேல் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தான் இரண்டு முக்கிய பொறுப்புகளில் இருந்து பங்கஜா முண்டே நீக்கப்பட்டார். இது குறித்து தனது அதிருப்தியை பங்கஜா முண்டே ட்விட்டர் தளத்தில் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் அவரது ஆதரவாளர்கள் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

Comments are closed.