பசிக்கும் இந்தியா!

0

பசிக்கும் இந்தியா!

சர்வதேச பட்டினி குறியீட்டில் 117 நாடுகளின் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு வெளியான ஐரிஸ் உதவி நிறுவனமான கன்ஸேன் வேல்ட் வைடு (நீஷீஸீநீமீக்ஷீஸீ கீஷீக்ஷீறீபீ கீவீபீமீ) மற்றும் ஜெர்மனைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபேவும் (கீமீறீt பிuஸீரீமீக்ஷீ பிவீறீயீமீ) இணைந்து தயாரித்த அறிக்கை கூறுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு, ஐந்து வயதுக்கு கீழான குழந்தைகளின் குறைவான எடை, வளர்ச்சி பாதிப்பு, குழந்தை மரணவிகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டினி குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தைகளின் எடைக்குறைவு 2008–2012 காலக்கட்டத்தில் 16.5 சதவீதமாக இருந்தது. 2014–2018 காலக்கட்டத்தில் 20.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. சர்வதேச பட்டினிக்குறியீட்டில் இலங்கை (66-வது இடம்), மியான்மர் (69), நேபாளம் (74), பாகிஸ்தான் (94), வங்காளதேசம் (88) முதலான நாடுகளுக்கு கீழ் இந்தியா இடம் பிடித்துள்ளது வெட்கப்பட வேண்டிய விஷயம். அடிப்படை வளர்ச்சிக்கு சவாலான பட்டினியை குறைப்பதில் அண்டை நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கூட நம்மால் எட்ட முடியவில்லை என்பதையே இந்த குறியீடு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. பட்டினியை ஒழிப்பது என்பது ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்தே ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசின் வாக்குறுதியாக இருந்து வருகிறது. எனினும் நாட்டில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை குறையவில்லை. பசியில்லாத உலகை உருவாக்குவோம் என்பதே ஐக்கிய நாடுகள் அவையின் நிலையான வளர்ச்சி நோக்கங்களில் இரண்டாவதாகும். உலகம் முழுவதுமுள்ள பட்டினியிலிருந்து விடுபடாத 82 கோடி மக்களில் 24 சதவீதத்தினர் இந்தியாவில் வாழ்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்தின் போதாமையோ, உணவு உற்பத்தியில் குறைபாடோ இந்த நிலைக்கு காரணமல்ல. 2017—2018ல் 283.4 மில்லியன் டன் உணவுப்பொருட்களை உற்பத்திச் செய்து தன்னிறைவை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றார்கள். 20.4 மில்லியன் டன் விவசாய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆனால், உணவுப் பொருட்களை வாங்குவதற்கு பெரும்பகுதியினருக்கு பொருளாதார வசதி கிடையாது. இந்தியாவில் 132 கோடி மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் பெரும் பகுதியினரின் பசியை போக்கவும் தேவையான வளம் இந்தியாவில் உள்ளது. ஆனால், இவற்றின் பெரும்பகுதி சிலருடைய கையில் மட்டுமே தங்கியுள்ளது என்பதுதான் உண்மை நிலை. சர்வதேச நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையின்படி இந்திய செல்வ வளத்தின் 73 சதவீதம், ஒரு சதவீதம் அளவிலான பணக்காரர்களின் வசமே உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இது 58 சதவீதமாக இருந்தது. நாட்டின் பொருளாதார கட்டமைப்பு ஒரு சில பணக்காரர்களையே சார்ந்துள்ளது. சாதாரண அடித்தட்டு மக்கள் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் துயருறும்போது பெரும் பணக்காரர்கள் ஆட்சியாளர்களின் அரவணைப்பில் செழித்து வளருகிறார்கள். இவர்களுக்காக அடிக்கடி வரி சலுகை மற்றும் கடன்களை தள்ளுபடி செய்யும் ஆட்சியாளர்கள் சாதாரண மக்களை புறக்கணித்து வருகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அண்மையில் அளித்துள்ள வரிச்சலுகை 1.45 லட்சம் கோடியாகும்.

நாட்டின் கொள்கை மற்றும் செயல்திட்டங்களிலும், சீர்திருத்த நடவடிக்கைகளிலும் முழுமையான மாற்றம் தேவைப்படுகிறது. சாதாரண மக்களையும் உள்ளடக்கிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளால் மட்டுமே வறுமையை ஓரளவுக்கு ஒழிக்க முடியும். ஆனால், தீவிர மதவாத சர்வாதிகாரத்தையே குறிக்கோளாக கொண்ட தற்போதைய அரசு இதைக் குறித்தெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இனியும் பட்டினியும், சமத்துவமின்மையும் அதிகரித்தால் மக்களிடையே அதிருப்தியும், தவறான எண்ணங்களும் அதிகரித்து நாடு அமைதியை இழக்கும் சூழல் உருவாகும். பட்டினியும், சமத்துவமின்மையுமே உலகின் பல நாடுகளையும் உள்நாட்டு கலவரத்தை நோக்கி தள்ளியது என்பதை மறந்துவிட வேண்டாம். தீவிரவாத அச்சுறுத்தல், இந்தியா-பாகிஸ்தான் போர் பீதி, மதவாத வெறுப்பு பிரச்சாரம் முதலானவற்றை கிளப்பி மக்களை எல்லா காலக்கட்டங்களிலும் திசை திருப்ப முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

Comments are closed.