பசுக்களை கடத்தினால் கொலை செய்யப்படுவீர்கள்: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ

0

கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் ஆழ்வார் பகுதியில் ஒருவர் பசுவை கடத்தினார் என்று கூறப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் பசுக்களை கடத்துபவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று ராஜஸ்தான் எம்.எல்.ஏ. கயான் தேவ் அஹுஜா தெரிவித்துள்ளார். (இவர் தான் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் 3000 ஆணுறைகள் இருப்பதாக எண்ணிக் கூறியவர்.)

இது குறித்து அவர் கூறுகையில், “நான் ஒன்று மற்றும் தான் கூறுவேன். நீங்கள் பசுக்களை கடத்தினாலோ, அறுத்தாலோ நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள்.” என்று கூறியுள்ளார். ஜாகிர் என்ற ஒருவர் பசுக்களை கடத்தினார் என்று கூறப்பட்டு கைது செய்யப்பட்ட செய்திக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் ஜாகிரை காவல்துறையினர் கைது செய்வதற்கு முன்னர் வன்முறை கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆழ்வார் மியோ பஞ்சாயத் பகுதியின் தலைவர் ஷேர் முகம்மத் கூறுகையில், “தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாகிரை நான் காணச் சென்றேன். அவரது காயங்களில் இருந்து அவர் மிக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் இந்த வன்முறைக் கும்பல் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கிறது.” என்று அவர் கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், “சட்டத்தை பாதுகாக்க காவல்துறைக்கு பசு பாதுகாவளர்களின் துணை தேவைப்படுவது அதிசயமாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.

ஆனால் இவர்களின் இந்த கூற்றிற்கு மாற்றமாக, காவலர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த போது தவறி விழுந்து ஜாகிருக்கு காயம் ஏற்பட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை அறிக்கையின்படி அப்பகுதியில் சிலர் பசுக்களை கடத்துகின்றனர் என்ற தகவல் கிடைத்ததும் சாலைகளை மறித்து தடுப்புகள் வைக்கப்பட்டது என்றும், பசுக்களை வாகனத்தில் ஏற்றி வந்தவர்களை காவல்துறை மரித்ததும் அவர்கள் காவலர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் பதில் தாக்குதலில் இருந்து இருவர் தப்பிவிட்டனர் என்றும் இதில் ஏற்பட்ட சப்தத்தை கேட்டு அருகில் இருந்த மக்கள் அங்கு கூடி விட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.