பசுமாட்டை பின்தொடர்ந்து சென்றதால் முதியவர் மீது தாக்குதல்

0

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் குந்தா கிராமத்தை சேர்ந்த நாடோடி குஜ்ஜார் முதியவர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் தனது வீட்டில் இருந்து வங்கிக்கு தன்னுடைய கால்நடைகளை விற்ற பணத்தை செலுத்த கிளம்பியுள்ளார் ஹுசைன். அவர் தான் செல்லும் பாதையில் தனக்கு முன்னர் இரண்டு இளைஞர்கள் பசுவுடன் செல்வதை கண்டுள்ளார். அவர்களுக்கு பின்னால் இவர் செல்லவே எங்கிருந்தோ மறைந்து இருந்த சிலர் திடீரென அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஹுசைனை தாக்கியவர்கள் அவரிடம் இருந்த 1.5லட்ச ரூபாயை பரித்துக்கொண்டதோடு அவரின் செல்போன் மற்றும் குளிருக்கு அவர் வைத்திருந்த சால்வையையும் பறித்துக்கொண்டு சென்றுள்ளனர். தலை முதல் கால் வரை கடுமையாக தாக்கப்பட்டு ரத்தம் வடிந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த முதியவரை அருகில் உள்ள சாக்கடை ஒன்றில் வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளது அந்த கும்பல். சுயநினைவற்ற நிலையில் சாக்கடையில் ஒரு முதியவர் கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

ராஜவ்ரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனியில் தனது காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஹுசைன் பத்திரிகையாளர்களிடம் தன்னை தாக்கியவர்கள் பசு பாதுகாவல் குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தன்னை தாக்கியவர்கள் தங்களுக்குள் செய்து கொண்ட உரையாடலில் இருந்து அவர்கள் பசு பாதுகாவல் குழுவை சேர்ந்தவர்கள் என்று தன்னால் உணர முடிந்தது என்று கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக குந்தா கிராமத்தை சேர்ந்த குல்திப் ராஜ் என்பவரை கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்த தாக்குதலில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்களை கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்த ஹுசைன் முதலில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரின் நிலையை கண்டு அங்கிருந்து அவரை ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட ஹுசைணிற்கு பணி மருத்துவர் X-ray எடுத்த பின் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனது மருத்துவமனை கோப்புகள் மற்றும் X-Ray அறிக்கைகளை தன்னுடன் எடுத்துக்கொண்டு ஹுசைன் ராஜவ்ரிக்கு திரும்பியுள்ளார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறிக்கையின்படி ஹுசைனின் உடம்பில் தலை, இரண்டு கால்கள், மண்டை ஓடு, வலது மணிக்கட்டு ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் அவருக்கு உடலில் பல உராய்வுகள் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜவ்ரி மருத்துவமனை மருத்துவர்கள் ஹுசைனின் காயங்களுக்கு சிகிச்சையளிக்க தங்களிடம் போதிய வசதிகள் இல்லை என்று கூறி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கே திரும்பச் செல்லும்படி அவரிடம் கூறியுள்ளனர். ஆனால் அவரோ அங்கு செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ரியாசி மாவட்டத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட ஒரு குஜ்ஜார் குடும்பத்தினர் மீது பசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தினர். தாற்போது தான் தாக்கப்பட்டதற்கு காரணம் பசுவுடன் சென்ற இரண்டு இளைஞர்களை பின்தொடர்ந்து சென்றது தான் என்று ஹுசைன் தெரிவித்துள்ளார். இவ்வருடத்தில் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட இரண்டாவது குஜ்ஜார் இவர்.

Comments are closed.