பசுவதை தடை சட்டம்: உணவு பழக்க முறைகளில் தலையிடும் பாசிசம்

0

 

– செய்யது அலீ

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. சிவசேனா கூட்டணி அரசு அமல்படுத்தியுள்ள முழுமையான பசுவதை தடைச் சட்டம் சூடான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. இவ்விவகாரத்தில் சமூக, பொருளாதார, கலாச்சார ரீதியான கூறுகள் நம்மைப்போன்ற மதச்சõர்பாற்ற ஜனநாயக சமூகத்தில் சில அடிப்படை பிரச்சனைகளை எழுப்புகிறது. கடந்த 19 ஆண்டுகளாக குடியரசு தலைவரின் அங்கீகாரத்திற்கு காத்திருந்த, பசுவதையை முழுமையாக தடை செய்யவும், அதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டணையை அளிக்கவும், இச்சட்டம் வழிவகுக்கும். மஹாராஷ்டிரா மிருக பாதுகாப்பு சட்ட (திருத்தப்பட்டது) மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கூடுதலாக ஏதும் ஆலோசிக்காமல் ஏன் கையெழுத்திட்டார்? என்ற கேள்விக்கு, மாறிய அரசியல் சூழல், எதிர் தீர்மானம் எடுப்பதில் இருந்து அவரைத் தடுத்திருக்கலாம் என்றுதான் அனுமானிக்க முடியும்.

இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். பசு, காளை, எருது என அனைத்தும் இந்த சட்டதின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. எருமை மாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சில பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து மசோதாவிற்கு அங்கீகாரம் வழங்க கோரிக்கை விடுத்தபோது, மஹாராஷ்டிரா போன்றதொரு மாநிலத்தில் இத்தகையதொரு சட்டம் அமலுக்கு வந்தால் ஏற்படும் விளைவுகளை குறித்து முன்பின் யோசிக்காமல் புனித பசுவை மட்டுமே மனதில் எண்ணி குடியரசுத்தலைவர் கையெழுத்திட்டது, நிகழ்கால இந்தியாவின் அரசியல் சமூக சூழலில் கொடுஞ் செயலாகும்.

பசு அல்லது மாட்டின் இறைச்சியை கைவசம் வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, ஐந்தாண்டு சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். பா.ஜ.க.வில் சிவசேனா ஆளும் மஹாராஷ்டிரா இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் சட்டம்  ஒழுங்கை பாதுகாப்பவர்களாக இருக்க மாட்டார்கள். மாறாக, சிவசேனா  சங்பரிவார குண்டர்களே என்பது தெளிவாகியுள்ளது.

பசுவதை தடைச் சட்டத்தைக் குறித்து சுதந்திரத்திற்கு முன்பே இந்தியாவில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறது. பசுவை தெய்வமாகவோ, புனித மிருகமாகவோ கருதும் பிராமண சமூகம் கோமாதாவை கொலை செய்வதை பாவமாக நம்பலாம். அத்தகைய நம்பிக்கையின் மத ரீதியான பின்புலம் குறித்து அதிகாரப்பூர்வ வரலாற்றாசிரியர்களும், அறிஞர்களும் கேள்வி எழுப்பினர். விவசாயத்திற்கு முதுகெலும்பாக திகழ்ந்த பசு இனத்தின் பாதுகாப்பிற்காகவே அவற்றிற்கு புனிதம் கற்பிக்க காரணமானது என்றும் சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.

பண்டைய இந்தியாவில் பசுவின் இறைச்சி சிறப்பு உணவாக இருந்துள்ளது. பிராமணர்களுக்கு, யாகத்தின் போது தட்சணையாக கொடுக்கப்பட்ட ‘அக்னா’ என்ற இளம் பசுக்களை அவர்கள் கொன்று தின்பது வழக்கம். ரந்தி தேவன் தினமும் 2,000 பசுக்களை அரண்மனையில் கசாப்பு செய்து பிராமணர்களுக்கு விநியோகம் செய்ததாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் எப்பொழுது, உயர்சாதியினர் மாமிசம் சாப்பிடாத புனித பசுக்களாக மாறினர்? இவ்விவகாரம் தொடர்பான விவாதம் கல்வியாளர்கள் மத்தியில் முடிவில்லாமல் தொடரலாம். ஆனால், ஒரு பிரிவினரின் நம்பிக்கையையும், சடங்கு ரீதியான அம்சங்களையும் இதர சமூகத்தினர் மீது திணிக்கும் ஜனநாயக, மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு எதிரான அம்சங்களே இவ்விவகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

உண்மையில் இது மத ரீதியானது அல்ல. பசுவதை தடையின் பின்னணியில் உள்ளது அரசியலாகும். சைவர்களுக்கும், அசைவர்களுக்கும் உணவு சாப்பிடுவதற்கான சுதந்திரமும், வசதிகளும் இந்நாட்டில் உண்டு. இந்நிலையில் மாட்டிறைச்சியை சாப்பிடுபவர்கள் மீது தண்டனை விதிக்கும் சட்டம் பாசிசம் அன்றி வேறு என்ன? பசுவதை தடைச் சட்டம் மூலம் பெரும்பான்மை குடிமக்களின் உணவை தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தில் அரசு தலையிடுகிறது.

பசுவின் மாமிசம், சாதாரண மனிதர்களுக்கு குறைந்த செலவில் கிடைக்கும் ஊட்டச்சத்து உணவாகும். மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உலகிலேயே பிரேசிலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. பசுவதை தடைச் சட்டம் அமலில் இல்லாத மாநிலங்களில் கூட பிரசவிக்கும், பால் சுரக்கும்  பசுக்களை அறுப்பது கிடையாது. காட்டுப்பசுக்களும், மாடுகளுமே மாமிசத்திற்கு உபயோகிக்கப்படுகிறது.2014-07-31_13-31-08

1958ம் ஆண்டு அன்றைய தலைமை நீதிபதி எஸ்.ஆர். தாஸ் தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமர்வின் முன்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்திய பசுவதை தடைச்சட்டம் ஆய்வுக்கு வந்தபோது, பசு மற்றும் மாட்டின் இறைச்சி ஏழைகளின் உணவாகும், உபயோகமற்ற மிருகங்களை அறுப்பதை தடை செய்ய இயலாது என்று திட்டவட்டமாக தீர்ப்பளிக்கப்பட்டது. ஒரு பருவம் முடிந்துவிட்டால் பசுவையும், மாட்டையும் விலக்குவது அதன் உரிமையாளரின் தேவையாகும்.

1966ம் ஆண்டு ஹைதராபாத்தில் பசுவதை தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் ‘நாம் பசுக்களை சாப்பிடாவிட்டால், பசுக்கள் நம்மை தின்றுவிடும்” என்று உரையாற்றிய அறிவியலாளருடன், ஆர்.எஸ்.எஸ்.ஸின் அன்றைய தலைவர் கோல்வால்கர் பிணங்கிக் கொண்டாராம். இத்தகைய சட்டங்கள் மூலம் சம்பவிக்கப்போவது இதுதான். வயோதிகம் பாதித்த பசுக்களை மக்கள் கைவிடுவதால் அவை வீதிகளில் கவனிப்பாரற்று அலைந்து திரியும். பசுக்களை பாதுகாப்பதற்கான கோகுலங்களின் மோசமான நிலை அனைவருக்கும் தெரியும். அவை மிருக நேயமும், மனித நேயமும் இன்றி இயங்கி வருகின்றன.

இந்தியாவுக்கு மிக அதிகமான வெளிநாட்டு நாணயத்தை பெற்றுத் தரக்கூடிய மாட்டிறைச்சிக்கு தடை விதித்தால் லட்சக்கணக்கான விவசாயிகள், இறைச்சி தொழிலாளர்கள் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுவர். முஸ்லிம்களையும், தலித்துகளையும் மட்டும் இத்தடை பாதிக்கும் என்று கூறுவது தவறு.

ஏனெனில் அதிகமாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் ‘அல்கபீர்’ உள்ளிட்ட நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கு சொந்தமானவை அல்ல. இத்தடை சமூக ரீதியான மோதல்களுக்கு வழிவகுக்கும் என்பதை இத்தடை அமலில் உள்ள மாநிலங்களின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆறு வடகிழக்கு மாநிலங்களிலும், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பசுவதை தடைச் சட்டம் அமலில் இருந்தாலும் மாட்டிறைச்சி மீதான மக்களின் விருப்பத்தை முன்னிட்டு ஜம்மு கஷ்மீர் போன்ற மாநிலங்களில் இச்சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதில்லை என்பதை அம்மாநிலங்களின் மாதாந்திர மாட்டிறைச்சி உபயோகத்தின் கணக்குகளை ஆராய்ந்தால் தெரியவரும்.

அதே வேளையில், இந்துத்துவ சக்திகளின் செல்வாக்கு மிகுந்த பகுதிகளில், மாமிசம் சாப்பிடுவோரை தேசத்துரோகிகளாக சித்தரித்து சட்டத்தை கையில் எடுக்கும்போக்கு, சங்பரிவாரத்தின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது. குடிமக்களின் உணவு பழக்கவழக்கங்களில் தலையிட்டால், அது அரசாக இருந்தாலும் பாசிசமே. அதனை குடிமக்கள் மீதான போர்ப்பிரகடனமாக கருத வேண்டும். எந்த சூழலிலும் பசுவதை தடைச் சட்டம் நாட்டிற்கோ, மக்களுக்கோ நலன் தராது. ஆனால், மதப்பிரிவினையை தூண்ட இதனைவிட சிறந்த ஆயுதம் பா.ஜ.க.வுக் கிடைக்காது என்பது உண்மை.

அதிகளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நான்கு நிறுவனங்கள் இந்துகளால் நடத்தப்படுபவை என்பது ஆச்சர்யமளிக்கும் உண்மை. அந்த நிறுவனங்களின் விபரங்கள்.

  1. அல் கபீர் எக்ஸ்போர்ட்ஸ், உரிமையாளர்கள்: சதீஷ் மற்றும் அதுல் சபர்வால், மும்பை
  2. அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ், உரிமையாளர்: சுனில் கபூர், மும்பை
  3. எம்.ஆர்.கே. ஃபுரோஷன் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ், உரிமையாளர்: மதன் அபாட், புது டெல்லி
  4. பி.எம்.எல். இண்டஸ்டிரீஸ், உரிமையாளர்: ஏ.எஸ். பிந்த்ரா, சண்டிகார்.

 

மஹாராஷ்டிராவை தொடர்ந்து ஹரியானாவிலும் மாட்டிறைச்சிக்கு தடை

மஹாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சி செய்யும் ஹரியானாவிலும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் மாட்டிறைச்சியை விற்பனை செய்வது மாநிலத்தில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில் உள்ள சட்டத்தின்படி மாடு அறுப்பவர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கால்நடைகள் துறை அமைச்சர் ஓ.பி. தன்கர் தெரிவித்துள்ளார்.

மாட்டிறைச்சியை கொண்டு செல்லும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுனர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 (ஏப்ரல் 2015 புதிய விடியல் இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.