பசு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட உமர் கான் குடும்பத்திற்கு போலீஸ் நெருக்கடி

0

சமீபத்தில் பசு பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பால் பண்ணை உரிமையாளர் உமர் கானின் இழப்பிலிருந்து அவரது குடும்பம் மீண்டு வருவதற்குள் காவல்துறையின் நெருக்கடிக்கு அக்குடும்பம் ஆளாகியுள்ளது. உமர் கான் உடலின் பிரேத பரிசோதனைக்கு தங்களின் ஒப்புதலை உடனடியாக தருமாறு காவல்துறை அவர்களை நிர்பந்தித்து வரும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. காவல்துறையினரின் இந்த செயல் அந்த கிராம மக்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.

பசு பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட உமர் கானுடன் சென்ற இருவர் மீது காவல்துறை பசு கடத்தல் வழக்கு பதிவு செய்தது. இவர்கள் தாங்கள் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்தில் அவர்களின் கிராமங்களுக்கு திரும்பாமல் உள்ளனர்.

உமரின் கொலை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக 50லட்ச ரூபாயும் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் உமரின் உறவினர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவரை அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ராஜஸ்தான் காவல்துறையோ உமரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உமர் குடும்பத்தார் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தாங்கள் பிரேத பரிசோதனை செய்து இறுதிச் சடங்குகளை முடித்து அவரது உடலை அடக்கம் செய்து விடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உமரின் தந்தை சஹாபுதீன், “நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளோம். என் மகன் எந்த தவறும் செய்யாத நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளான். தனது நண்பர்களிடம் இருந்து ரூபாய் 15000 கடனாக பெற்று தனது குழந்தைகளுக்காக கறவை பசு ஒன்றை வாங்கச் சென்றான். ஆனால் அவன் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டுள்ளான்.” என்று அவர் கூறியுள்ளார்.

உமரின் 18 வயது மகனான மக்சூதின் பொறுப்பில் தற்போது உமரின் குடும்பம் உள்ளது. தனது தந்தையின் இறப்பு செய்தி கேட்டு தனது கிராமத்திற்கு விரைந்துள்ளார் மக்சூத். குறைந்தபட்சமாக தனது பேரணிற்கு அரசு வேலை ஒன்றை தான் எதிர்ப்பார்ப்பதாக சஹாபுதின் தெரிவித்துள்ளார்.

மேலும் பசுக்களை அறுப்பதற்காக தனது மகன் பசுவை கடத்தினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து கூறிய அவர், “எங்கள் கிராமத்தில் பசு, எருமை, ஆடு என்று இங்கிருக்கும் 400 வீடுகளில் உங்களால் காண முடியும். நாங்கள் மாட்டிறைச்சி உண்பவர்கள் அல்ல.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கத்மிகா கிராம தலைவர் சவ்கத் கான், உமரின் கொலையில் காவல்துறையினருக்கும் பங்கு உள்ளது என்று கிராம மக்கள் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். “உமருடன் சென்ற தாகிர் கான் மற்றும் ஜாவித் மீது காவல்துறையினர் பசு கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் உமர் கானின் நிலை குறித்து அவர்கள் இரண்டு நாட்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. கோவிந்த்கர்க் மற்றும் ராம்கர்க் காவல் நிலையத்தை மீண்டும் மீண்டும் நாங்கள் அணுகவே உமரின் உடல் ரயில் தண்டவாளம் அருகே கிடந்ததாகவும் அதனை ஆழ்வாருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.