பசு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பெஹ்லு கான் உடனிருந்த அனைவர் மீதும் பசு கடத்தல் வழக்கு பதிவு

0

கடந்த 2017  ஏப்ரல் மாதம் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் பசு பாதுகாவல் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லு கான் உடன் இருந்த அனைவர் மீதும் பசு கடத்தல் வழக்கை பதிவு செய்துள்ளது ஆழ்வார் காவல்துறை.

பெஹ்லு கானுடன் சென்ற அஸ்மத் மற்றும் ரஃபீக் ஆகியோர் பசுக்களை கொண்டு செல்ல முறையான அனுமதி பெற்றிருக்கவில்லை என்று இவர்கள் மீது ஜனவரி 24 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது ஆழ்வார் காவல்துறை. பெஹ்லு கான் கொலை சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் பசு பயங்கரவாதிகள் ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள்  மீது காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்தது. ஆனால் 2017 செப்டெம்பர் மாதம் இந்த ஒன்பது பேரில் ஆறு நபர்களை, அவர்களின் அலைபேசி பதிவு மற்றும் அப்பகுதி கோசாலை ஊழியர் ஒருவரின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வழக்கில் இருந்து காவல்துறை விடுவித்தது. இவர்கள் பெஹ்லு கானால் அவரது மரண வாக்குமூலத்தில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் என்பது குறிப்பித்தக்கது. இவ்வழக்கில் இருந்து இவர்களை காவல்துறை விடுவித்தது பல தரப்பு கண்டனங்களையும் பெற்றது.

2017  ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெஹ்லு கான் மற்றும் அவரது இரு மகன்கள் கால்நடை சந்தைக்குச் சென்று இரண்டு பசுக்களையும் இரண்டு கன்றுகளையும் பெற்று திரும்பிய வேலை அவர்களை பசு பயங்கரவாதிகள் வழிமறித்து தாக்கினர். இவர்களுடன் சென்ற பெஹ்லு கானின் கூட்டாளிகளான அஸ்மத் மற்றும் ரஃபீக் ஆகியோரும் பசு பாதுகாவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். இத்தாக்குதலில் பசடுகாயமுற்ற பெஹ்லு கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தனது மரண தருவாயில் தன்னை தாக்கிய ஹுகும் சந்த், நவீன் ஷர்மா, ஜக்மல் யாதவ், ஓம் பிரகாஷ், சுதீர் மற்றும் ராகுல் சைனி ஆகிய ஆறு நபர்களின் பெயர்களை காவல்துறையிடம் வாக்குமூலமாக கொடுத்தார்.

இந்த ஆறு நம்பர்களை காவல்துறை ஏதேதோ காரணங்கள் கூறி இவ்வழக்கில் இருந்து விடுவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த இர்ஷத் கான், “இது முற்றிலும் தவறானது. இந்த விசாரணை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த நபர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பு உறுப்பினர்கள், அதனால் தான் அரசு அவர்களை பாதுகாக்கப் பார்கிறது.” என்று கூறியுள்ளார்.

ஆனால் குற்றப்பிரிவு கூடுதல் டைரக்டர் ஜெனெரல் பங்கஜ் சிங், பெஹ்லு கான் பெயர் குறிப்பிட்ட இவர்களை கைது செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார். இத்துடன் பெஹ்லு கானுடன் சென்றவர்கள் கால்நடைகளை ஏற்றிச் செல்ல முறையான ஆவணங்கள் வைத்திருக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் இருந்து தற்போது கூறப்படுகிறது. ஆனால் அஸ்மத், தங்களை வெகு நேரமாக பசு பயங்கரவாத கும்பல் தாக்கியது என்றும் அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஜெய்பூர் முனிசிபல் கார்பரேஷன் வழங்கிய ஆவணங்களை கிழித்து எறிந்தனர் என்றும் கூறியுள்ளனர்.

இந்த ஆறு பேரின் விடுதலையை எதிர்த்து தாங்கள் இறுதி வரை போராடப்போவதாக இர்ஷத் கான் தெரிவித்துள்ளார்.

Comments are closed.