பசு பாதுகாவல் கும்பலின் போராட்டத்தை படம் எடுக்காத மாணவருக்கு கத்திக் குத்து

0

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதை மத்திய அரசு தடை செய்ததை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெர்வித்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் இந்த செயல் இந்திய மக்களின் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாட்டிறைச்சி திருவிழாக்களும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டங்களும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து மாட்டிறைச்சி திருவிழா நடத்திய காங்கிரஸ் தொண்டர்கள் மீது தேச விரோத குற்றம் சுமத்த வேண்டும் என்று காவ் ரக்ஷா சேவா தள் என்கிற அமைப்பு ஹரியானாவில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தின் போது அப்பகுதியில் இருந்த மாணவர் ஒருவரை பத்திரிகையாளர் என்று நினைத்த இந்த கும்பல் தங்களின் போராட்டத்தை அவர் படம் பிடிக்கவில்லை என்று கூறி அவரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர்.

ஹரியானாவின் சோனாபட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் சிவம் புது டில்லி மருத்துவமனையில் தன் உயிருக்காக போராடி வருகிறார். இவர் இந்த போராட்டத்தை காண பத்திரிகையாளர் நண்பர் ஒருவருடன் சென்ற மாணவர் சிவம் அவரது நண்பரின் கேமராவை தன்னிடம் வைத்திருந்தது இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மாணவர் சிவமிடம் போராட்டத்தின் தங்களது கோரிக்கையை மாவட்ட அதிகாரிகளிடம் கொடுப்பதை படம் பிடிக்குமாறு பசு பாதுகாவல் கும்பல் கூறியுள்ளது. தான் ஒரு பத்திரிகையாளர் அல்ல என்பதனால் சிவம் புகைப்படம் எடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து சிவமிடம் வாக்குவாதம் செய்த அந்த கும்பலை அருகில் இருந்தோர் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

இந்த போராட்டம் முடிவுற்ற பின்னர் மாணவரை பின் தொடர்ந்து சென்ற அந்த பசு பாதுகாவல் குண்டர்கள் அவரை மார்பிலும் வயிற்றிலும் பல முறை கத்தியால் குத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிவம் முதலில் அப்பகுதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது நிலைமை மிகவும் மோசமாக இருந்ததை அடுத்து அவர் டில்லி எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறை ஆய்வாளர் அஜய்ப் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியான 19 வயது மோஹித் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினர்களும் இந்த தாக்குதலில் மொஹிதிற்கு உடந்தையாக செயல்பட்டவர்களுமான மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை காவல்துறை தேடி வருகிறது. இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரில் இவர்கள் பசு பாதுகாவல் கும்பல் என்று குரிப்பிடப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கும் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கைவிரித்துள்ளது பசு பாதுகாவல் கும்பல்.

Comments are closed.