பசு பாதுகாவல் குழுக்களை தடை செய்ய வேண்டுமா: உச்ச நீதிமன்றம் ஆராய முடிவு

0

பசு பாதுகப்பு குழுக்கள் அடிக்கடி வன்முறைகளில் ஈடுபடுவதால் இத்தகைய குழுக்களை தடை செய்ய வேண்டுமா என்பது குறித்து ஆராய நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பென்ச் முடிவு செய்துள்ளது.

சமூக ஆர்வலர் தஹ்சீன் பூனாவாலா என்பவரது பொதுநலவழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவிடம் நீதிபதிகள் இதனை தெரிவித்துள்ளனர். இந்த பொதுநல வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம், தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது பசு பாதுகாவலர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை கட்டுப்படுத்த  மத்திய அரசும் சில மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்ளுமாறு மனு அளித்திருந்தார் பூனாவாலா. அதில், இந்த பசு பாதுகாவலர்களின் வன்முறை, பிரதமர் நரேந்திர மோடியே “இவர்கள் சமூகத்தை சிதைக்கின்றனர்” என்று கூறும் அளவிற்கு மோசமாகியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

தனது மனுவில் அவர், இந்த பசு பாதுகாப்பு குழுக்கள் பசு பாதுகாவல் என்கிற பெயரில் சிறுபான்மை மக்கள் மீதும் தலித்கள் மீதும் அராஜகப்போக்கை கையாண்டு வருகிறார்கள் என்றும், சமூக நல்லிணக்கத்தையும் சட்டம் ஒழுங்கையும் கருத்தில் கொண்டு இவர்களை தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து, “பசு பாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் இவர்களால் ஏற்படும் அச்சுறுத்தல் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இது பல்வேறு சமுதாய மக்களிடையே நிலவி வரும் நல்லிணக்கத்தை குலைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர் தனது மனுவில் பசு பாதுகாவல் குழுக்களால் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வன்முறை பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குஜராத் மிருக தடுப்பு சட்டம் 1954 பிரிவு 12, மகாராஷ்டிர மிருகவதை தடுப்புச் சட்டம் 1976 பிரவு 13, கர்நாடக பசுவதை மற்றும் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 1964 பிரிவு 15 ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த பிரிவுகள் இந்த சட்டத்தின் கீழ் செயல்படுபவர்களை நல்லெண்ண அடிப்படையில் பாதுகாக்க வழிவகுப்பது ஆகும். இத்தகைய சட்டங்களும் இதன் மூலம் கிடைக்கும் பாதுகாப்பும் தான் இவர்கள் வன்முறை சம்பவங்களில் எந்த கவலையும் இன்றி ஈடுபட ஒரு உந்துகோலாக இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசு பாதுகாவலர்கள செய்யும் வன்முறைகள் அனைத்தும் IPC இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரியவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல வழக்குகளில் காவல்துறையினர் இத்தகைய வன்முறைகளுக்கு துணை போகின்றனர் அல்லது வெறும் பார்வையாளர்களாக இருக்கின்றனர் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழுக்களின் செயல்பாடுகள் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21 இன் கீழ் வழங்கப்படும் வாழ்வுரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

இவ்வழக்கில் வழக்கறிஞர் சஞ்சய் ஹெட்கேவுக்கு வழக்கறிஞர் அனஸ் தன்வீர் உதவி புரிகிறார்.

Comments are closed.