பஞ்சாப்: குர்ஆன் அவமதிப்பு வழக்கில் இருவர் கைது. கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டதாக ஒப்புதல்

0

கடந்த ஜூன் 24 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் சில விஷமிகளால் குர்ஆன் தீயிட்டு எரித்து சேதப்படுத்தப்பட்டது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக முஸ்லிம்கள் பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர் ஃபர்ஸானா நிசாரா காத்தூனின் வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த குற்றம் புரிந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடா நாட்டில் இருந்து நாடு திரும்பியவரான விஜய் குமார் என்ற தொழிலதிபர், நந் கிஷோர் கோல்டி மற்றும் அவரது மகனுடன் சேர்ந்து அப்பகுதியில் மதக்கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டு இந்த செயலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில்  கிஷோர் மற்றும் அவரது மகன் கவ்ரவ் பதான்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர்கள் நடத்திய பதான்கோட், குர்தாஸ்பூர் ஆகிய தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையில் மதக்கலவரம் ஏற்படுத்த தாங்கள் திட்டமிட்டதாகவும் அதனால் குர்ஆன் எரித்ததாகவும் கூறியுள்ளனர்.

இவர்கள் எந்த இந்துத்வா அமைப்புடனும் தொடர்பில் இல்லை என்றும் தாங்களாக முன் வந்து இத்தகைய செயலை செய்துள்ளனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. விஜய் குமார் இஸ்லாமியர்களுக்கு எதிராக அதிகப்படியான வன்மம் கொண்டவர் என்றும் உத்திர பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியில் நடந்த இத்தகைய சம்பவத்தின் பின்னால் இருந்தவரும் இவர் தான் என்றும் கவால்துரையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது பின்பலம் குறித்து தீவிரமான விசாரணை செய்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.