பஞ்சாப்  சிறையில் இருந்து தப்பித்த காலிஸ்தானி தலைவர்

0

பஞ்சாபின் உயர் பாதுகாப்பு சிறையில் ஞாயிறு காலை காவலர்கள் உடையில் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் காலிஸ்தானி இயக்க தலைவரான ஹர்மிந்தர் சிங் மிண்டு உட்பட ஆறு பேரை விடுவித்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறை அதிகாரிகள் மீது அவர்கள் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தில் ஐந்து பேர் ஈடுபட்டதாக நம்பப்படுவதாகவும் ஆனால் இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கக் கூடும் என்றும் பஞ்சாப் காவல்துறை டைரக்டர் ஜெனரல் சுரேஷ் அரோரா தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பஞ்சாப் சிறைக்கு ஒரு கைதியை ஒப்படைக்க வந்தாத கூறி சிறையினுள் புகுந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சுக்விந்தர் சிங், “ஏறத்தாள 10 பேர் சிறை கதவுக்கு அருகே காத்திருந்தனர். அவர்கள் தங்கள் வாகனத்தில் இருந்து போர்வைகளை எடுத்து சிறை கதவருகே வீசினர். சிறையின் உள்ளிருந்து ஓடி வந்த ஒருவர் அந்த போர்வைகளில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுத்து கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.” என்று கூறியுள்ளார்.

அம்ரிஸ்டரில் வருகிற டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடக்கவிருந்த ஆசிய உச்சி மாநாட்டிற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் வேலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவத்தில் ஹர்மிந்தர் சிங் மிண்டு உடன் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்பட்ட கஷ்மிரா சிங், ரவுடிகள் என்று குற்றம் சுமத்தப்பட்ட விக்கி கவுண்டர், அமன்தீப் தோடியான், குர்பீத் செகோன் மற்றும் நிடா டியோல் ஆகியோரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சதிச் செயலின் மூளையாக செயல்பட்ட பர்மிந்தர் சிங் என்பவரை சில மணி நேரங்களிலேயே உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து பல துப்பாக்கிகளும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹர்மிந்தர் மிண்டுவும் டில்லி ரயில் நிலையம் அருகே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

Comments are closed.