படேல் இனத்தவர்கள் மீது பதியப்பட்ட 95% வழக்குகளை வாபஸ் பெற்ற குஜராத் அரசு

0

தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு குஜராத் அரசிற்கு எதிராக போராட்டங்கள் நடத்திய படேல் இனத்தவர்களை திருப்தி படுத்தும்  வேலைகளை குஜராத் அரசு செய்து வருகிறது. இவ்வகையில் 2015 ஆம் ஆண்டு போராட்டங்களில் ஈடுபட்ட படேல் இனத்தவர்கள் மீது பதியப்பட்ட 95% வழக்குகளை குஜராத் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

குஜராத் பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கைக்கு 2017 டிசம்பர் மாதம் வர இருக்கும் தேர்தல் விரைவாக வர இருப்பதை காரணம் காட்டுகின்றனர் அரசியல் நிபுணர்கள். இதனை மோடியின் பல குஜராத் பயணங்களும் பா.ஜ.க தேசிய தலைவரான அமித்ஷா குஜராத் பா.ஜ.க. தொண்டர்களுடன் நடத்தும் சந்திப்புகளும் உறுதி படுத்தும் விதமாய் உள்ளது. .

படேல் சமூகத்தினர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அரசு அதிகாரி ஒருவர், மீதம் உள்ள வழக்குகளை திரும்பப் பெரும் நடவடிக்கைகளும் திபாவளிக்கு முன்னதாக தொடங்கப்பட்டுவிடும் என்று கூறியுள்ளார். இவ்வழக்குகளில் பெரும்பான்மையானவை அஹமதாபாத், சூரத், ராஜ்கோட், மேஹ்சானா மற்றும் பனஸ்கந்தா பகுதியில் பதியப்பட்டவை.

இது குறித்து குஜராத் அரசின் துணை முதல்வர் நிதின் படேல் கருத்து தெரிவிக்கையில், மொத்தமாக பதியப்பட்ட 438  வழக்குகளில் 416 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன என்று கூறியுள்ளார். மேலும் படேல் சமூகத்தவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மீதம் உள்ள வழக்குகளையும் திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இன்னும் படேல் சமூகத்தவர் மீது குஜராத் அரசு அனுதாபம் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் மட்டுமே 40  வழக்குகள் படேல் இனத்தவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 37 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறை, தீவைப்பு, காவல்துறையினரை தாக்கியது என படேல் இனத்தவர்கள் மீது பதியப்பட்ட 438 வழக்குகளில் 230 வழக்குகள் காவல்துறையினரே புகாரளித்து பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் தேர்தல் அடுத்த வருடம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

Comments are closed.