பணக்காரர்களின் கைகளில் தேசம்!

0

பணக்காரர்களின் கைகளில் தேசம்!

சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் சோசியலிசத்தை அடிப்படை தத்துவமாக அங்கீகரித்த தேசம் இந்தியா.1976ல் இந்திரா காந்தி அரசு அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் இந்தியாவை சோசியலிச குடியரசாக மாற்றியது. ஆனால், சோசியலிச பிரகடனத்திற்கு பின் நாற்பது ஆண்டுகள் கடந்த பிறகும் சமூகத்தில் பொருளாதார சமமின்மை சிறிதளவு கூட குறையவில்லை. மாறாக பணக்காரர்கள்– ஏழைகள் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதன் அண்மைய ஆதாரம்தான் சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெறவிருக்கும் உலக பொருளாதார பேரவையின் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக ஆக்ஸ்ஃபாம் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை.

இந்தியாவின் 28 லட்சம் கோடி சொத்தில் 77.4 சதவீதம் 10 சதவீத பணக்காரர்களின் கைகளில் உள்ளது; அடிமட்டத்தில் உள்ள 60 சதவிகித மக்களிடம் நாட்டின் 4.8 சதவிகித சொத்துக்கள் மட்டுமே உள்ளன என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இவற்றில் 50 சதவீத சொத்துக்கள் 9 பெரும் பணக்காரர்களிடம் மட்டும் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு சர்வதேச உணவுக் கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை உலக அளவில் பசி, பட்டினி இல்லாத 119 நாடுகளின் பட்டியலில் இந்தியா 103-வது இடத்தில் இருப்பதாகக் கூறுகிறது. 2017ல் 100-வது இடத்திலும், 2014ல் 55-வது இடத்திலும் இருந்த நமது நாடு தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் பட்டினி கடுமையாக உள்ளது என்பதை இந்த புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுவதாகவும், இந்தியாவில் உள்ள குழந்தைகள் கடுமையான ஆரோக்கிய பிரச்சனையை சந்திப்பதாகவும் அந்த அறிக்கை மதிப்பீடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிபரப்படி இந்தியாவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தேசிய வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.

நமது அரசின் புள்ளிவிபரப்படி வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் குறைவாகும். வறுமையை நிர்ணயிப்பதில் கடைபிடிக்கப்படும் அளவுகோல்களில் காணப்படும் மாறுபாடே இதற்கு காரணம். தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் ஒரு குடும்பத்தின் செலவுகளின் கணக்குகளை குறித்து நடத்தும் ஆய்வின் அடிப்படையில் இந்தியாவின் வறுமை நிலை அளவிடப்படுகிறது. கிராமத்தில் நாள் ஒன்றிற்கு ரூ.27.2ம் நகரத்தில் ரூ.33.3ம் செலவழிப்பவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழேயும், அதைவிட கூடுதல் வருமானம் உள்ளவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேலேயும் இருப்பார்கள் என்று 2011ல் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் நிர்ணயித்தது. இதனடிப்படையில் 5 பேர் கொண்ட குடும்பம் மாதம் ரூ.4,080 அல்லது அதற்கும் அதிகமாக செலவழித்தால் வறுமைக்கோட்டிற்கு மேலே இருப்பவர்கள் ஆவர். அத்தியாவசியப் பொருட்களின் விலையும், கல்வி மற்றும் மருத்துவ செலவுகளும் கடுமையாக அதிகரித்துள்ள இன்றைய சூழலில் ஒரு குடும்பத்திற்கு ரூ.4,080 என்பது பொருத்தமான வரம்பு கிடையாது. அரசின் இந்த அளவுகோல் குறித்து கடுமையான விமர்சனம் எழுந்தது.

நாட்டின் பெரும்பான்மை மக்கள் வறுமைக்கோட்டிற்கு மேலே இருப்பதற்கான உரிமையை கோரவே இத்தகைய அளவுகோலை அரசு நிர்ணயித்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் தேசிய சராசரியுடன் ஒப்பிட்டே வறுமைக்கோட்டின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. அங்கெல்லாம் ஒரு குடும்பத்திற்கு வாரத்திற்கு 250 பவுண்ட், அதாவது ரூ.22,500 சம்பாதிக்க இயலவில்லை என்றால் அவர்கள் ஏழைகளின் பட்டியலில் இடம்பெறுவர். அரசின் தவறான கொள்கைகளால்தான் நாட்டில் பொருளாதார சமமின்மை தீவிரமடைகிறது. தொழில் வளர்ச்சியின் பெயரால் பெரும் நிறுவனங்களுக்கு வரி சலுகை, கடன் தள்ளுபடி முதலான பல சலுகைகளுடன் ஒப்பிடும் போது வறுமையை ஒழிப்பதற்கும், ஏழைகளின் ஆரோக்கியம், கல்வி முதலான பொதுத்துறைகளுக்கு ஒதுக்கும் நிதி விகிதம் மிகவும் குறைவாகும். பொது மக்களின் ஆரோக்கியம், சிகிட்சை, துப்புரவு, குடிநீர் விநியோகம் ஆகியவற்றிற்கான மத்திய, மாநில அரசுகளின் மொத்த வருவாயின் மூலதன செலவு முகேஷ் அம்பானியின் மொத்த சொத்துக்களை விட குறைவாகும். குடிமக்களில் பாதிபேருடைய வாழ்வாதாரம் விவசாய துறையை சார்ந்துள்ளது. ஆனால், விவசாய துறையின் வளர்ச்சிக்கு அரசு போதிய கவனம் செலுத்துவதில்லை. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் குதித்ததற்கு காரணம், விவசாயத்தின் மீதான அரசின் பாரா முகமாகும்.

“இந்தியாவில் உள்ள ஒரு சதவீத கோடீஸ்வரர்களுக்கும், மீதமுள்ள இந்திய மக்களுக்கும் இடையிலான வெறுப்பூட்டும் வகையிலான இடைவெளி அதிகரித்தால், நாட்டின் சமூக, ஜனநாயகக் கட்டமைப்பு முழுமையாக சிதைந்துவிடும்” என்று சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபாம் நிர்வாக இயக்குநர் வின்னி பான்யிமா எச்சரித்துள்ளார். இந்தியா அதனை அனுபவித்து வருகிறது. பொருளாதார சமமின்மை நாட்டின் அமைதியான வாழ்விற்கு கடுமையான சவால்களை எழுப்பக்கூடியது. ஆனால், மக்கள் நலனில் அக்கறை இல்லாத, வன்முறை சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அமைதியான வாழ்வு என்பது கேள்விக்குறியே!

Comments are closed.