பணத்திற்காக இந்துத்வா ஆதரவு செய்திகளை வெளியிட சம்மதித்த இந்திய ஊடகங்கள்

0

பணத்திற்காக இந்துத்வா ஆதரவு செய்திகளை வெளியிட சம்மதித்த இந்திய ஊடகங்கள்

ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கைத்துறை பணத்திற்கான செய்தி வெளியிடுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் பிரபல செய்தித்தளமான கோப்ரா போஸ்ட் நடத்திய ஆய்வில் 17 இந்திய செய்தி நிறுவனங்கள் பணத்திற்காக இந்துத்வ ஆதரவு செய்திகளை வெளியிட தயாராக உள்ளது தெரியவந்துள்ளது.

ஆப்பரேஷன் 136 என்ற பெயரில் கோப்ரா போஸ்ட் நடத்திய இந்த புலனாய்வில் ஒவ்வொரு செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செய்திகளுக்காக பேரம் பேசுவது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரகசிய ஸ்டிங் ஆபெரேஷன் மூலம் அவர்கள் சேகரித்த தகவல்களை திங்கள் கிழமையன்று டில்லி பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக இந்திய ஊடகங்களில் பல, சமூக பிரிவினையை ஏற்படுத்தும் செய்திகளையும் அரசிற்கு கண்மூடித்தாமான ஆதரவையும் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோப்ரா போஸ்ட்-ஐ சேர்ந்த ஒருவர் ஏழு செய்தித் தொலைக்காட்சிகள், ஆறு செய்தித்தாள்கள், மூன்று செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட 17 நிறுவன அதிகாரிகளிடம் தாங்கள் கொடுக்கும் இந்துத்வா ஆதரவு செய்திகளை வெளியிட்டால் அவர்களுக்கு பெரும் தொகை வழங்கப்படும் என்றும் இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ச்சியாக அவர்களுக்கு விளம்பரங்களும் கொடுக்கப்படும் என்றும் கூறுவதும் அதனை தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகள் இதற்கான தொகை குறித்தும் முன்பணம் குறித்தும் பேரம் பேசுவதும் கோப்ரா போஸ்ட்டின் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் 2019 தேர்தலையொட்டி, எதிர்க்கட்சி தலைவர்களான ராகுல் காந்தி, முலாயம் சிங் யாதவ், மாயாவதி, போன்ற தலைவர்களுக்கு எதிராக செய்திகள் வெளியிடுவதோடு பாஜக வின் அருண் ஜெட்லி, மனோஜ் சின்ஹா வருண் காந்தி, மேனகா காந்தி ஆகியோருக்கு எதிரான செய்திகளை வெளியிடவும் இந்த நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்ததாக தெரியவந்துள்ளது. பணத்திற்காக செய்திகளை வெளியிட ஒப்புக்கொண்டதாக கோப்ரா போஸ்ட் தெரிவித்த செய்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியா டிவி, கோப்ரா போஸ்ட்டின் செய்தியில் உண்மை இல்லை என்றும், அது போன்ற செய்திகள் எதையும் இந்தியா டிவி வெளியிடவில்லை என்றும் தங்களைது பிரதிநிதி ஒருவர் விளம்பரத்தை வெளியிட ஒப்புக்கொண்ட காட்சியை கோப்ரா போஸ்ட் திரித்து வெளியிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக கோப்ரா போஸ்ட் மீது தாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அது தெரிவித்துள்ளது.

மற்றொரு செய்தி நிறுவனமாக டைனிக் ஜாக்ரன் நிறுவனம், தங்களது நிறுவனம் சார்பில் செய்திகளுக்கு பணம் பெற ஒப்புக்கொண்ட நபர் செய்திகள் வெளியிடுவது குறித்து உத்திரவாதம் தர அதிகாரம் பெறாதவர் என்றும் கோப்ரா போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் உண்மை இருப்பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களை தவிர்த்து, ஹிந்தி தர்பார் தொலைகாட்சி, SAB Group தொலைக்காட்சி, ஆங்கில செய்தித்தாள் DNA, அமர் உஜாலா, UNI, 9X Tashan, சமாச்சார் ப்ளஸ், HNN 24×7, பஞ்சாப் கேசரி, ச்வந்தந்திர பாரத், ScoopWhoop இணையதளம், Rediff  இணையதளம், உள்ளிட்ட பல நிறுவனங்களின் பெயர்களும் கோப்ரா போஸ்ட் நடத்திய புலனாய்வில் சிக்கிக்கொண்டுள்ளன.

Comments are closed.