பணப்பிரச்சனை நடுவே IRF தடை செய்யப்பட்டது மக்களை திசை திருப்ப: டாக்டர் ஜாகிர் நாயக்

0

இந்தியா உட்பட பல நாடுகளில் இஸ்லாமிய அழைப்புப் பணியை செய்து வரும் டாக்டர் ஜாகிர் நாயகின் IRF இந்திய அரசால் UAPA சட்டத்தின் கீழ் ஐந்து வருடங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டாக்டர் ஜாகிர் நாயக் இந்திய மக்களுக்கு எழுதிய திறந்த மடலில், IRF ஐ தடை செய்வது குறித்து இந்திய அரசு பல மாதங்கள் முன்னரே திட்டமிட்டுள்ளது என்றும் அதனை தற்போதுள்ள பணப்பிரச்சனைகளுக்கு நடுவே அறிவித்திருப்பது மக்களை திசை திருப்பத்தான் என்று கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் இந்த முடிவு அமைதி, ஜனநாயகம், நீதி மற்றும் முஸ்லிம்கள் மீதான மத்திய அரசின் தாக்குதல் என்று அவர் தனது மடலில் கூறியுள்ளார்.

தங்களது அமைப்பின் மீது மத்திய அரசு வித்தித்துள்ள இந்த தடையினை எதிர்த்து சட்ட ரீதியில் போராடப்போவதாகவும் நீதித்துறை மத்திய அரசை அதன் திட்டத்தில் இருந்து தோற்கடித்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் தங்களது அமைப்பை தடை செய்ததினால் தனக்கு அதனை சட்டரீதியிலாக அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்றும் மத்திய அரசின் திட்டமே எவ்வழியிலாவது தன்னை  சிக்க வைத்து விட வேண்டும் என்பது தான் என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

IRF தடை செய்யப்பட்ட நேரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்த தடை உத்தரவே மக்களை நாட்டில் நிலவி வரும் பணக்குழப்பத்தில் இருந்து திசை திருப்பத்தான் என்று கூறியுள்ளார். செலவுக்கு பணமில்லாமல் வர்த்தகம் செய்ய முடியாமல்,அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் கஷ்டப்படும் மக்களிடம் இருந்து பெரியளவில் எதிர்ப்பை எதிர்பார்க்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

தன்னுடையதாக கூறப்படும் போலியான வீடியோ ஒன்றை வைத்து இந்த தடையை அறிவித்திருக்கும் மத்திய அரசு, ஏன் யோகி அதித்யானாந்த், சாத்வி பிராச்சி போன்றோகளின் வெறுப்புப் பேச்சுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “மக்களிடம் வெறுப்புப் பேச்சுகளை கூறி மத மோதல்களை உருவாக்கி அதில் அரசியல் ஆதாயம் தேடும் இது போன்றோர்களுக்கு சட்டம் பொருந்தாது போலும்” என்று கூறியுள்ள அவர் “இவர்களின் பேச்சுக்களுக்காக இவர்கள் மீது அரசு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதை விடுங்கள், இவர்களின் இந்த செயலை அரசு கண்டிக்கவும் இல்லை அவர்களை கைது செய்யவும் இல்லை. இந்த கொடுமையான சட்டம் முஸ்லிம்களுக்கு மேல் பயன்படுத்த மட்டும் தானா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அரசின் இந்த நடவடிக்கையை வெறுமனே தன் மீதான தாக்குதல் என்று மட்டும் கருதிவிட வேண்டாம் என்றும் இது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்கள் மீதான தாக்குதல் என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.