பதவிச் சண்டையும் தலைமுறை இடைவெளியும்…

0

 – ரிழா
தமிழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் திராவிட இயக்கத்துக்கு முக்கிய இடம் உண்டு. இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்து மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும், பெண்ணுரிமைக்கு ஆதரவாகவும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெருமை கொண்ட இந்த இயக்கத்தின் தற்போதைய நிலைமை, கவலைக்கிடமாக உள்ளது.

இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டு பட்டி தொட்டியெங்கும் பரவிய திராவிடர் கழகம், அதன் பின் திராவிட முன்னேற்ற கழகம், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என பிளவுபட்டு திராவிடம் என்ற கொள்கை கட்சியின் பெயரில் தான் ஒட்டிக் கொண்டிருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை என்ற நிலைமைக்கு வந்துள்ளது.

இதனுடன் தமிழகத்தில் செயல்பட்டு வரும் முஸ்லிம் அமைப்புகள்/ அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை வாசகர்கள் ஒப்பிட்டு நோக்கலாம்.

திராவிட கொள்கை பேசிய அமைப்புகளிலிருந்து இஸ்லாமிய இயக்கங்கள் பாரிய அளவில் வித்தியாசப்படுகின்றன. தன்னளவில் இந்த அமைப்புகள்/கட்சிகள் அனைத்தும் “இஸ்லாமிய விழுமியம் காப்பது, முஸ்லிம் நலன் காப்பது” என்பதை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளன. இருப்பினும் பிளவுகள், குறுங்குழு வாதம், அணி மாறுதல் என திராவிட இயக்கங்களுக்கு இணையாக இஸ்லாமிய அமைப்புகள்/கட்சிகளிடமும் பிளவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. பெயரளவில் தான் ‘முஸ்லிம்’ ‘லீக்’ ‘முன்னேற்றம்’ என்பதெல்லாம் இருக்கிறது.

இந்த நிலைதான் சர்வதேச அளவிலும் முஸ்லிம் அமைப்புகளிடம் காணப்படுகிறது. ரஷ்ய வல்லரசை துண்டு துண்டாக உடைத்து, அமெரிக்காவிற்கு ஒற்றை வல்லரசு அந்தஸ்தை பெற்றுத் தந்த ஆஃப்கானிஸ்தான் போராளிகள், பின்னாட்களில் அமெரிக்க ஏகாதிபத்திய சூழ்ச்சியில் சுருண்டனர்.

ஒரு அமைப்பு/இயக்கம் அதன் தொடக்க காலத்தில் வீரியத்துடன் செயல்படுவது, சில ஆண்டுகளுக்குப் பின் பாதை மாறி பதவிச் சண்டையில் ஈடுபடுவது என தொடர்வதால், முஸ்லிம்களின் முன்னேற்றம் சொல்லத்தக்க விதத்தில் இல்லை.

இளம் தொண்டர்கள் அமைப்புக்குள் வரும் போது, அவர்களுக்கு கொள்கை பயிற்சி அளித்து அவர்களின் தியாகத்தை பெற்றுக் கொள்ளும் அமைப்புகள்/கட்சிகள், அந்த இளம் செயல்வீரர்களை தலைவர்களாக்க தயங்குவது ஏன்?

தலைமுறை இடைவெளி ஏற்பட்டு, தலைமையை மூத்தவர்களே தக்க வைத்துக் கொள்ளும் போது அமைப்புகளின் செயல்பாடுகளில் வேகம் குறைகிறது. புதிய சிந்தனைகள், துரித வேலைத் திட்டங்கள் இன்றி ஒருவித தேக்க நிலையை அடைகின்றது. அமைப்புகளிடம் தலையாய பிரச்சினையாக இது உருவெடுக்கிறது. இந்தக் கட்டத்தில் சரியாக முடிவெடுத்து பொறுப்புக்களையும், பதவிகளையும் நிலை மாற்றிக் கொள்ளும் அமைப்புகள் வெற்றி நடை போடுகின்றன.

குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தலைமையை தீர்மானிப்பதற்கான தேர்வு முறைகளை ஜனநாயக முறைப்படி நடத்தினால் கூட தலைமுறை இடைவெளி குறைய வாய்ப்புள்ளது.

இளம் செயல் வீரர்களுக்கு போதிய அனுபவம் கிடையாது, பிரச்சினைகளை அணுகும் விதங்களில் பக்குவம் கிடையாது என தட்டிக் கழித்து, தலைமைப் பதவியை தக்க வைக்கும் போக்குதான் இயக்கங்கள்/அமைப்புகளில் நீடிக்கிறது.

குறைஷிகள், அவ்ஸ், கஸ்ரஜ் போன்ற இனக் குழுக்களிடையே இஸ்லாமிய இயக்கத்தை கட்டியெழுப்பிய இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்திலும் இந்த தலைமுறை இடைவெளி பிரச்சினை உருவானது.

மறுமை வரைக்கும் இஸ்லாமிய இயக்கத்தை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு உம்மத்துக்கு இருப்பதால், தலைமுறை இடைவெளியை இட்டு நிரப்பும் சாகசத்தையும் செம்மல் நபியவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

அது ஹிஜ்ரி 7-ம் ஆண்டு. மைஃபஆ என்ற இடத்திற்கு சிறிய படையொன்றை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இப்படையெடுப்பின் போது ‘நஹ்க் இப்னு மிர்தாஸ்’ என்பவரை உஸாமா இப்னு ஸைதும், மற்றொரு அன்ஸாரி தோழர் ஒருவரும் தாக்க முற்படுகின்றனர். அப்போது அவர் கலிமாவை மொழிகிறார். உடனடியாக அன்ஸாரி தோழர் தாக்குதலில் இருந்து பின் வாங்குகிறார். ஆனால் உஸாமா இப்னு ஸைது (ரழி) அவரை கொலை செய்து விடுகிறார்.

படை மதீனா வந்தடைந்ததும் இந்தச் செய்தி நபியவர்களுக்குத் தெரிய வரவே, ”லாயிலாஹஇல்லல்லாஹ் என்று கூறிய பின்னரா நீ அவரைக் கொலை செய்தாய்?” என உஸாமாவிடம் கோபத்துடன் கேட்டார்கள். தன்னுடைய பேரர்கள் ஹஸன், ஹுஸைனுக்கு ஈடாக உஸாமாவிடமும் அளவிடற்கரிய அன்பு செலுத்தி வந்த நபியவர்கள் இப்படி கேட்டவுடன் மற்ற தோழர்கள் வியப்புற்றனர்.

தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அவர் கலிமாவை மொழிந்ததாக உஸாமா (ரழி) பதிலளிக்க, ”அவர் உண்மையாளரா? பொய்யரா? என நீ அறிய அவரது உள்ளத்தை பிளந்து பார்த்தாயா?” என்று நபி (ஸல்) வன்மையாகக் கண்டித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அந்தப் பாவத்தைச் செய்த அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல், அதற்குப் பிறகு ஏற்று இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே! என்று கூட நினைத்தேன் என உஸாமா (ரழி) அவர்கள் சொல்லுமளவிற்கு நபிகளார் கண்டித்தார்கள். இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது உஸாமா (ரழி) அவர்களுக்கு 15 வயது தான்!

இதே உஸாமாவைதான், நபி (ஸல்) அவர்கள் தான் இறக்கும் தறுவாயில் படைக்கு தலைமை தாங்கும் படி பொறுப்பை கையளித்தார்கள். இரண்டே வருடங்களில் தலைமைப் பொறுப்பை வழங்க நபியவர்கள் தயங்கவில்லை.17 வயதான உஸாமாவின் தலைமைக்கு எதிராக அப்போதும் எதிர்ப்பு கிளம்பவே செய்தது.

உஸாமாவை விட மூத்தவர்கள் பலர் இருக்க, அவர் தலைமை தாங்குவது சரியல்லவென்று சிலர் அவரின் தலைமையைக் குறை கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “இவரின் தலைமையக் குறித்து நீங்கள் இப்போது குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதன்று;) இதற்கு முன்பு (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் தலைமையையும் தான் நீங்கள் குறை கூறிக்கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஆட்சியதிகாரத்திற்குத் தகுதியானவராகத்தாம் இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராகவும் இருந்தார். மேலும், அவருக்குப் பின் (அவரின் புதல்வரான) இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராவார்” என்று கூறினார்கள். – அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), ஸஹீஹ் புகாரி.

இந்தப் படை புறப்படும் தருணத்தில் நபி (ஸல்) மரணமடைய, மதீனாவில் ஒரு அசாதாரண சூழல் நிலவியது. அதனால் இந்தப் படையை அனுப்ப வேண்டாம் என்ற கருத்து நபித் தோழர்கள் மத்தியில் எழுந்த போது, அதனை திட்டவட்டமாக மறுத்த கலீஃபா அபூபக்கர் (ரழி) அவர்கள், “இது என்னுடைய உத்தரவன்று, நபியவர்களின் உத்தரவு” என பதிலளித்தார்கள். உஸாமா (ரழி) படை நடத்திச் செல்ல தயங்கிய போதும், அவர்களை தட்டிக் கொடுத்து வழியனுப்பினார்கள். சில அன்ஸாரி தோழர்கள், உஸாமாவுக்கு பதில், அனுபவம் வாய்ந்த ஒருவரை தளபதியாக நியமிக்கலாமே என்றனர். நபியவர்கள் நியமித்த ஒருவரை என்னை வைத்து நீக்க முயல்கிறீர்களா என அபூபக்கர் (ரழி) கோபத்துடன் கேள்வியெழுப்பினார்.

இறுதித்தூதரின் தீட்சண்யத்தை உணர்ந்த, அவரது உற்ற தோழர் அபூபக்கர்(ரழி) அவர்கள், இளம் தோழர் உஸாமாவை ‘வழிநடத்தும் பொறுப்பில்’அமர வைத்தார்கள்.

அண்ணல் நபியவர்கள் அப்போதே நமக்கு வழி காட்டி விட்டார்கள்.
இளைஞர்களுக்கு பதவிகளையும், பொறுப்புகளையும் கொடுத்து, மூத்த அனுபவசாலிகள் அவர்களுக்கு வழிகாட்டும் போதுதான் இஸ்லாமிய இயக்கம் புத்துணர்ச்சியோடு எழுச்ச்சியை சாத்தியமாக்கும். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) இயக்க அறிவியல் நமக்கு இப்படித்தான் வழிகாட்டுதல் வழங்குகிறது.

உஸாமாக்களை கண்டறியவும், அவர்களை பயிற்றுவிக்கவும் தவறுவதோடு, அவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்க தயங்குவதும் தான் முஸ்லிம் உலகின் சாபக்கேடாகும். சாபக்கேட்டை, அருட்கொடையாக மாற்றுவோமா?

Comments are closed.