பதவியில் இருந்து விலகும் முன் ஃபலஸ்தீனை அங்கீகரித்துவிடுங்கள்: ஒபாமாவிற்கு ஜிம்மி கார்டர்

0

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. இந்த மாதம் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றுக்கொள்வார். அப்படி இருக்க ஒபாமா பதவியில் இருக்கும்போதே ஃபலஸ்தீனை அங்கீகரித்து விடுமாறு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் கூறியுள்ளார்.

டிரம்ப் பதவியேற்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் இஸ்ரேல் ஃபலஸ்தீன் உடனான பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்குமாரும் ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரிக்குமாறும் ஜிம்மி கார்டர் ஒபாமாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஜனாதிபதி மாற்றத்திற்கு முன்னதாக இஸ்ரேல் – ஃபலஸ்தீன் எதிர்காலத்தை அமேரிக்கா வடிவமைக்க முடியும் என்று நான் நம்புகிறேன், ஆனால் காலம் மிக குறைவாக உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார். “அமெரிக்க நிர்வாகம் எடுக்கவேண்டிய சாதாரண ஆனால் அதி முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்னவெனில், ஏற்கனவே 137 நாடுகள் அங்கீகரித்தது போன்று ஜனவரி 20 இல் ஒபாமா ஆட்சி முடிவதற்குள் ஃபலஸ்தீன் தேசத்திற்கான அமெரிக்காவின் அங்கீகாரத்தை வழங்குவது மற்றும் ஐக்கிய நாடுகள் அவையில் முழு உறுப்பினர் பதவி வழங்குவது தான்.” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இஸ்ரேல் மேலும் மேலும் ஆக்கிரமிப்புகளை நடத்தி சட்ட விரோத குடியிருப்புகளை ஃபலஸ்தீன பகுதிகளில் கட்டி வருகிறது என்றும் இதனால் ஃபாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.