பத்திரிகையாளரை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படை தளபதி: பாராமுகம் காட்டும் தேசிய பத்திரிகைகள்

0

திரிபுராவில் பத்திரிகையாளர் சுதிப் தத்தா பௌமிக் என்பவர் திரிபுரா ஸ்டேட் ரைஃபில் பிரிவு தளபதியான தபான் தெப்பர்மா என்பவரது உத்தரவின் பேரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர் ஒருவர் பாத்துகாப்பு படை தளபதி ஒருவராலேயே கொலை செய்யப்பட்டது குறித்து தேசிய ஊடகங்கள் எதுவும் சற்றும் கண்டுகொள்ளவில்லை என்பது குறித்து திரிபுரா பத்திரிகைகள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளன. இதனையடுத்து இந்த கொலைக்கு தங்களது கண்டனங்களை தெரிவிக்கும் வகையில்  தலையங்கத்தில் எந்த செய்தியும் வெளியிடாமால் வெறும் காலி பெட்டியை செய்தியாக வெளியிட்டு திரிபுரா பத்திரிகைகள் தங்களது எதிர்ப்புகளை காட்டியுள்ளன.

இது குறித்து திரிபுரா பத்திரிகையாளர் சங்க தலைவர் செய்யத் சஜ்ஜாத் அலி கூறுகையில், ‘துரதிர்ஷ்ட வசமாக இந்த கொலை தேசிய  ஊடகங்களில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த கொலைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதற்கு அந்த ஊடகங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் சில வடகிழக்கு ஊடகங்கள் கூட இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றது என்று கூறியுள்ளார்.

“வடகிழக்கில் உள்ள எங்கள் ஊடக நண்பர்கள் சிலர், ஊடகங்களுக்கு எதிரான இந்த கொலையை, இந்த அநீதியை, இந்த வெறித்தனத்தை பெரிய பிரச்சனையாக்கி அதற்கு எதிராக கடுமையான கோரிக்கை வைக்க மனமில்லாமல் உள்ளனர்.” என்று அவர் கூறியுள்ளார்.

அகர்தலா பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சுஜித் சக்ரபோர்த்தியும் அலி கூறுவதை வழிமொழிகிறார். “சுதிப்பின் கொலை தேசிய ஊடகங்களால் கண்டுகொள்ளப்படவில்லை. இது குறித்து சில செய்தித் துணுக்குகளே வெளியாகின. இப்படி ஒரு கொடும் குற்றத்தை அவர்கள் புறக்கணித்துவிட்டனர். இது முக்கிய நகரங்களில் நடைபெற்றிருந்தால் தேசிய ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் மிக பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “ஊடகங்கள் மட்டுமல்ல தேசிய தலைவர்கள் கூட இந்த கொலைக்கு எதிராக தங்களது கருத்தை தெரிவிக்கவில்லை.” என்று சக்ரபோர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த கொலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் அப்பகுதி வட்டார செய்தித்தாள் ஒன்றில் ஆசிரியருமான தபாஸ் தே, சகிப்பின்மையின் விளைவாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது என்று ஆளும் மாணிக் சர்கார் தலைமையிலான அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “அரசு மற்றும் நிர்வாகத் தரப்பின் சகிப்பின்மையின் விளைவாகவே சுதிப் கொலை செய்யப்பட்டுள்ளார். ஊடகங்கள் அரசின் ஊழல்களை பற்றி செய்தி வெளியிடுவதை அவர்கள் விரும்பவில்லை. அத்தகைய செய்திகளை எதிர்கொள்வதைக் காட்டிலும் அரசு ஆதரவில் செய்தி வெளியிடுபவரை கொலை செய்வது எளிது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ஊடகத்தினருக்கு போதிய பாதுகப்பு வழங்காததற்கு அரசே பொறுப்பு. தங்களை குறித்து மோசமான செய்தி வெளியாவதை தடுக்க தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் புது யுக்தி தான் பத்திரிகையாளர்களை கொலை செய்வது. ஊழல் நிர்வாக மயமாகிவிட்டது. முதலில் ஊடகங்களை விலைக்கு வாங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது தோற்ற பட்சத்தில் அவர்களுக்கு மரணம் பரிசளிக்கப்பட்டுள்ளது.“ என்று தபாஸ் தே கூறியுள்ளார்.

49 வயதான பௌமிக் மாநில மொழியில் வெளியாகும் ஸ்யந்தான் பத்ரிகா என்ற தினசரியில் பணியாற்றி வந்தவர். இவர் மேலும் அப்பகுதி செய்தி தொலைக்காட்சியான நியுஸ் வான்கார்ட் என்ற தொலைக்காட்சிக்கும் செய்தி அளித்து வந்துள்ளார். சுத்திப் தான் பணியாற்றிய ஸ்யந்தான் பதிரிகாவில் திரிபுரா ஸ்டேட் ரைஃபில்ஸ் பிரவில் நடைபெற்ற மிகப்பெரிய நிதி முறைகேடுகள் குறித்து 11 கட்டுரைகளை எழுதியுள்ளார். இதன் பின்னணியில் தான் சுதிப்பின் கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

“சுதிப், திரிபுரா ஸ்டேட் ரைஃபில்ஸ் இரண்டாவது பட்டாலியனின் படைத்தளபதியான தபான் தெப்பர்மா வை சந்திக்க சென்றுள்ளார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் அவர் உயிர் பிழைக்க முடியாதாபடி சுடப்பட்டுள்ளார். மேலும் திரிபுரா ஸ்டேட் ரைஃபில்ஸ் படையினர் இந்த கொலையின் ஆதாரங்களை மறைக்க பௌமிக்கின் உடலை தொலைவான இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் பௌமிக் தன்னுடன் வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் எரித்தும் உள்ளனர். பௌமிக் வைத்திருந்த மொபைல் போன்களும் காணவில்லை.” என்று அலி கூறியுள்ளார்.

பாதுகாப்பு படையினரால் பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்படுவது இதுவே முதன் முறை என்று அலி தெரிவித்துள்ளார். “மணிப்பூர் மற்றும் அஸ்ஸாமில் பத்திரியாயாளர்கள் கொல்லப்படுவதும் நிகழ்ந்துள்ளது. ஆனால் அவை தீவிரவாதிகளாலும் சமூக விரோதிகளாலும் செய்யப்பட்டது. ஆனால் சுதிப் பௌமிக் கொலையோ, பாதுகாப்பு படையினரால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொலையை பாதுகாப்பு படையின் தளபதியே செய்துள்ளார். அவரது உத்தரவின் பேரிலேயே பாதுகாப்பு படையினர் சுதிப்பின் மீது துப்பாக்கிச்க் சூடு நடத்தியுள்ளனர்.” என்று அலி கூறியுள்ளார்.

மேலும் தங்கள் சங்கத்திற்கு மாநில அரசு ஏற்படுத்தியிருக்கும் CID விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும் CID யும் மாநில காவல்துறையின் ஒரு பிரிவு என்பதால் அவர்களின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ள குற்றத்தை அவர்களால் விசாரிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த கொலை தொடர்பாக தபான் தெப்பர்மாவின் மெய்க்காப்பாளர் நந்தலால் கைது செய்யப்பட்டிருந்தார். தபான் தெப்பார்மாவின் உத்தரவின் பேரிலேயே அவர் சுதிப்பை சுட்டார் என்கிற காரணத்தால் தற்போது தபான் தெப்பர்மாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இருவர் மீதும் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 302, 109 மற்றும்  27 ஆகிய பிரிவுளும் ஆயுதச் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திரிபுரா தலைமை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு 10 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த விசாரணையை நடத்தி வரும் CID யின் விசாரணைக்காக நகர காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் சுதிப்பின் கொலை தபானின் அறையில் நடைபெற்றது என்று சுதிப்பை சுட்ட நந்தலால் தெரிவித்துள்ளார். முதலில் தான் அந்த செயலை செய்ய தயங்கி நின்ற போதும் உயர் அதிகாரி தன்னை கட்டாயப்படுத்தி சுட வைத்தார் என்று நந்தலால் தெரிவித்துள்ளார்.

தனது AK 47 துப்பாக்கியால் ஒரு முறை சுதிப்பை சுட்டதும் நந்தலால் பதற்றத்தில் அந்த அறையில் இருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளார். பின்னர் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சுதிப்பிற்கு மருத்துவம் எதுவும் செய்யாமல் அங்கேயே சாக விட்டுள்ளார் பாதுகாப்புப் படை தளபதி தபான் பௌமிக்.

Comments are closed.