பத்மாவதி திரைப்பட எதிர்ப்பு  வன்முறை: கர்ணி சேனா அமைப்பு தலைவர் கைது.

0

பத்மாவதி திரைப்படத்தில் ராணி பத்மாவதியை மோசமாக சித்தரித்துள்ளனர் என்று கூறி அப்படத்தை வெளியிடக்கூடாது என்று ராஜ்புத் இனத்தவர் பல போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த வன்முறை செயல்களுக்கு மூலக்காரணமான ஸ்ரீ கர்ணி சேனா அமைப்பின் தேசிய செயலாளரும் பாஜக தலைவருமான சூரஜ் பால் அமு காவல்துறையால் கைது செய்யப்பட்டு நான்குநாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன் கிழமை, குர்கோனில் ராஜ்புத் வன்முறை கும்பல் ஒன்று பள்ளி குழந்தைகள் சென்ற பேருந்து மேல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. GD கோயங்கா பள்ளியின் பேருந்து மாலை மூன்று மணியளவில் பள்ளி விட்டு குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வேலையில் அதன் மீது ராஜ்புத் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்போது அதில் இருந்த குழந்தைகள் அச்சத்தில் அலறினர். இன்னும் சில குழந்தைகள் அச்சத்தில் தங்களின் வாய்களை கைகளால் பொத்தியவாறு பேருந்தின் தரையில் அமர்ந்தனர்.

பேருந்தின் மீது வீசப்படும் கற்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் பேருந்து இருக்கைகளுக்கு இடையில் அமர்ந்து செல்வது வீடியோ காட்சி ஒன்றில் பதிவாகியுள்ளது. இந்த பேருந்திற்கு முன் சென்ற அரசு பேருந்து ராஜ்புத் வன்முறை கும்பலால் தீவைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வன்முறை சம்பவத்தின் போது அப்பகுதியில் காவல்துறையினர் இருந்த போதும் அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் இந்த தாக்குதலை அவர்கள் தடுக்கவில்லை என்றும் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த குர்கோன் காவல்துறை இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. ஆனால் இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கர்ணி சேனா அமைப்பின் பெயரை காவல்துறை குறிப்பிடவில்லை. தற்போது சூரஜ் பால் அமு மீது அவர் நகரத்தின் அமைதிக்கு கேடு விளைவித்தார் என்று கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்புத் வன்முறை கும்பலால் பள்ளி பேருந்து தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த டில்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவால், இது ஒரு வெட்கக்கேடானா சம்வம் என்றும் இதை தடுக்க இயலாத ஹரியானா பாஜக அரசின் செயல் அருவருக்கத்தக்கது என்றும் கண்டித்துள்ளார்.

Comments are closed.