பத்ரிபல் போலி என்கெளவுண்டர் : 17 வருடங்களாக தொடரும் நீதிக்கான போராட்டம்

0

2000 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்னக் பகுதியில் நடைபெற்ற சித்திசிங்புரா படுகொலையில் 36 சீக்கியர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. இந்த படுகொலை நடந்து ஐந்து நாட்களில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கூறி பாதுகாப்பு படையினர் ஐந்து பேரை என்கெளவுண்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.

இந்த என்கெளவுண்டர் போலியானது என்றும் பொது விமர்சனத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும் அந்தப்பகுதியில் தங்களின் கட்டுப்பாட்டை உறுதி செய்யவுமே இந்த என்கெளவுண்டர் நடத்தப்பட்டது என்றும் இதில் கொலை செய்யப்பட்டவர்களில் எவரும் பாதுகாப்பு படையினர் கூறியது போன்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் இவர்கள் அனைவரும் கஷ்மீரை சேர்ந்தவர்கள் என்றும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கூறினர்.

17 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த போலி என்கெளவுண்டர் மீது CBI விசாரணை நடத்தப்பட்டு விசாரணை முடிவும் இது போலி என்கெளவுண்டர் தான் என்பதை உறுதி செய்தது. ஆனால் இந்த போலி என்கெளவுண்டரில் ஈடுபட்ட ஐந்து பாதுகாப்பு படையினர் மீதான வழக்கு விசாரணையை  போதிய ஆதாரங்கள் இல்லை என்று கைவிடுவதாக இராணுவம் முடிவு செய்தது. இதனை ஜம்மு கஷ்மீர் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில் இந்த முடிவை எதிர்த்து போலி என்கெளவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் உறவினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு, ஜம்மு கஷ்மீர் மாநில அரசு, இந்திய இராணுவம், மற்றும் சிபிஐ க்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக இவர்கள் பதிலளிக்க ஆறு வாரங்கள் அவகாசமும் கொடுத்துள்ளது.

மனுதாரர்களின் புகார்
மனுதாரர்கள் இந்த என்கெளவுண்டர் போலியானது என்று சிபிஐ விசாரணை உறுதி படுத்தியுள்ளது என்று தங்கள் மனுவில் கூறியுள்ளனர். மேலும் தங்களது உறவினர்களை இரக்கமின்றி ராஷ்டிரிய ரைஃபில் பிரிவை சேர்ந்த ஐந்து வீரர்கள் கொலை செய்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது என்றும் அரசு ஆய்வகம் நடத்திய தடவியல் சோதனைகளிலும் கொல்லப்பட்டவர்களின் DNA அப்பகுதி மக்களின் DNA உடன் ஒத்து போகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் இராணுவம் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறியது போன்று அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அல்ல என்று நிறுவப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். இன்னும் இராணுவம் மற்றும் அரசு இந்த DNA சோதனையை சிதைத்து இக்குற்றத்தை மறைக்க முயற்ச்சிகள் செய்ததையும் தடவியல் சோதனையில் தெரியவந்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

போலி என்கெளவுண்டர்
இந்த போலி என்கெளவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் உடல் 2000 ஆண்டு மாதச் மாதம் 26  ஆம் தேதி பஞ்சல்தான் காடுகளில் வைத்து ஐந்து தனித்தனி சாட்சியங்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து கொல்லப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்தவர்களின் அடையாளம் சந்தேகத்திற்கிடமின்றி நிருபணமாகியுள்ளது. மேலும் கொல்லப்பட்டவர்களை இராணுவத்தினர் கடத்திச்சென்று சட்டவிரோத காவலில் வைத்தது தொடர்பாக நேரடி ஆதாரங்களும் கிராமத்தினரின் வாக்குமூலங்களும் மார்ச் 26 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட FIR எண்: 16/2000 அடிப்படையில் தெரியவருகிறது.

நேரில் கண்ட சாட்சியங்களின் கூற்றில் இருந்து, இந்த தாக்குதல் அதிகாலை 5:45 மணியில் இருந்து 9:30 மணியளவில் மார்ச் 25 ஆம் தேதி 2000 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்போது பஞ்சல்தான் காட்டில் உள்ள சூனிடங்கிரி மலை உச்சியில் இருந்து இராணுவத்தினர் சுடுவதை மக்கள் கண்டுள்ளனர். மேலும் இராணுவத்தினர் வெள்ளை நிற கேன்களில் எண்ணெய் போன்ற ஏதோ ஒன்றை சம்பவ இடத்திற்கு எடுத்துச் செல்வதையும் அப்பகுதியினர் கண்டுள்ளனர்.

இந்த நிகழ்வை அடுத்து இறந்தவர்களின் தீயில் கருகிய உடலை காவல்துறையிடம் இராணுவம் வழங்கியுள்ளது. பின்னர் இந்த என்கெளவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் இராணுவம் கூறியுள்ளது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தான் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் சம்பவம் நடைபெற்ற தினத்தில் இருந்து இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக காணாமல் போனவர்கள் என்ற செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது.

விசாரணை
இறந்தவர்களின் உறவினர் மனு ஒன்றை அளிக்கவே ஆனந்த்னக் பகுதி தலைமை மாஜிஸ்திரேட் இது தொடர்பாக விசாரணை நடத்த ஆனந்த்னக் காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் உடல் ஏப்ரல் மாதம் 6, 7 ஆம் தேதிகளில் தோண்டி எடுக்கப்பட்டன. அடையாளம் காண முடியாதபடி எரிக்கப்பட்ட அந்த உடல்களை அவர்களின் உடை மற்றும் சில அடையாளங்களை கொண்டு கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளங்கண்டனர். மேலும் அந்த உடல்களின் DNA மாதிரிகளும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் DNA மாதிரிகளும் எடுக்கப்பட்டு சோதனைக்காக CDFD ஹைதராபாத் மற்றும் CFSL  கொல்கத்தாவிற்கு அனுப்பட்டது.

பின்னர் 2000, ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி DSP அப்துல் ரஹ்மான் ஷேக் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த என்கெளவுண்டர்  போலியானது என்றும் இதில் கொல்லப்பட்டவர்கள் அப்பகுதியை சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் என்றும் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதி காவல்துறையை கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யக் கூறிய மாஜிஸ்திரேட் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.

CBI விசாரணை மற்றும் கொலைக்கான ஆதாரங்கள்
CBI விசாரணையின் போது DNA சோதனைக்காக ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகள் சேதப்படுத்தபட்டது கண்டறியப்பட்டது. இந்த வழக்கு CBI க்கு மாற்றப்பட்டதால் இந்த இரு ஆய்வகங்களில் இருந்தும் நிபுணர்கள் ஆனந்த்னக் மாவட்டத்திற்கு நேரில் சென்று மீண்டுமொருமுறை DNA  மாதிரிகளை சேகரித்தனர். இந்த மாதிரிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் உயிரிழந்தவர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.

CBI யின் விசாரணையில் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு துப்பாக்கிச் சூடு காயங்களுடன் உடலில் 98%  தீக்காயங்களும் ஏற்ப்பட்டுள்ளது என்றும் ஆனால் இவர்கள் இந்த தாக்குதலின் போது மறைந்திருந்ததாக கூறப்பட்ட இடம் அவ்வளவாக எறிந்திருக்கவில்லை என்று கண்டறியப்பட்டது. உண்மையான ஒரு என்கெளவுண்டரில் இவ்வாறு நடைபெற்றிருக்க வாய்ப்புகள் இல்லை என்று CBI தெரிவித்தது.

இது தொடர்பாக CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தை நாடினர். கணிசமான தாமதத்திற்குப் பிறகு 2012 ஆண்டு மே மாதம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை குற்றவியல் நீதிமன்றத்திலா அல்லது இராணுவ நீதிமன்றத்திலா என்று இராணுவ அதிகாரிகள் 8 மாதத்திற்குள் முடிவு செய்து தங்கள் முடிவை தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இராணுவ விசாரணை – கண்துடைப்பு
இதனையடுத்து இராணுவ நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெறும் என்று கூறிய இராணுவம் ஒரு விசாரணை அமர்வு நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான அனைத்து குற்றங்களுக்கும் ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுவித்து வழக்கை முடிவு செய்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பான எந்த ஒரு ஆவணமும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களிடம் வழங்கப்படவில்லை. இந்த வழக்கு முடிவுற்றதே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு இராணுவத் தரப்பில் இருந்து தகவல் கொடுக்கப்பட்ட போது தான் தெரியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அரசியல் சாசனப்பிரிவு 226 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மூலம் இராணுவத்தின் இந்த முடிவை ரத்து செய்து குற்றவாளி இராணுவத்தினரை வழமையான கிரிமினல் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.

இத்துணை தெளிவான ஆதாரங்கள் இருந்தும் இராணுவம் இந்த வழக்கை போதுமான ஆதாரங்கள் இல்லை என்று புறந்தள்ளி இருப்பதும் அதனை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த என்கெளவுண்டர் போலியானது என்று CBIயின் தெளிவான விவரமான  விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இது தொடர்பாக மறு விசாரணைக்கு அனுமதி இல்லை, ஆனால் இது தொடர்பாக இராணுவம் என்ன செய்தது என்பது குறித்து போதுமான ஆதாரங்கள் எதுவும் இராணுவத்தால் வழங்கப்படவில்லை. மேலும் தற்போது இராணுவம் செய்திருப்பது வாழ்வதற்கான உரிமை மறுத்திருப்பது என்று கூறிய மனுதாரர்கள் இந்த அநீதியை உச்ச நீதிமன்றம் சரி செய்ய வேண்டும் என்று தங்கள் மனுவில் கூறியுள்ளனர். 17 ஆண்டுகளுக்குப் பிறகு அநியாயமாக கொலை செய்யப்பட்ட தங்களது உறவினர்களுக்கு நியாயம் கேட்கும் இந்தவழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன் ஆஜராகியுள்ளார்.

Comments are closed.