பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் கோட்சேவை பெருமை படுத்தும் நாடகம்: மாணவர்கள் புகார்

0

பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் இவ்வாரம் நடைபெற்ற கலாச்சார விழா ஒன்றில் காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவை பெருமை படுத்தும் விதமாகவும், தேசப்பிரிவினைக்கு காந்தி தான் காரணம் என்பது போன்ற நாடகம் ஒன்று நடத்தப்பட்டதாக மாணவர்களில் சிலர் புகாரளித்துள்ளனர்.

இந்த நாடகம், சர்ச்சைக்குரிய “நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்” என்ற மராத்தி நாடகத்தை தழுவி நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மாணவர்கள், “அரசியல் சாசன விழுமியங்களை பாதிக்கும் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? இது பெரிய ஒரு சதித்திட்டம் நடைபெற்றிருப்பதை காட்டுகிறது. இந்திய நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட தீவிரவாதி கோட்சேவை புகழ்பாடும் இந்த செயல் இந்தியாவின் ஒற்றுமையையும் பெருமையையும் சீர்குலைக்கின்றது. இது தேசவிரோத செயலுக்கு சற்றும் குறைந்ததல்ல. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மாணவர்களின் புகாரை தான் பெற்றுக்கொண்டதாக காவல்துறை அதிகாரி சஞ்சீவ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்த புகார், குறிப்பிட்ட இந்த நாடகத்தின் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், “இந்த நாடகத்தின் வீடியோ காட்சியை நாங்கள் கேட்டுள்ளோம். அது எங்களிடம் கிடைத்தவுடன் நாங்கள் அது குறித்து விசாரிப்போம்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் “பனாரஸ் இந்து பல்கலைகழக போர்டுக்கும் இது தொடர்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நூல்களை அடிப்படையாக வைத்து இந்த நாடகம் நடைபெற்றது தொடர்பாகவும் நாங்கள் விசாரணை செய்து வருகின்றோம்” என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த பனாரஸ் இந்து பல்கலைகழக இந்தி பேராசிரியர் மற்றும் டீன், ஸ்ரீனிவாஸ் பாண்டே, “இந்த நிகழ்வு குறித்து நான் விசாரிக்க வேண்டும். இது குறித்து இதுவரை எனக்கு எந்த செய்தியும் கிடைக்கவில்லை. மேலும் இது போன்ற நாடகங்களிலும் எந்தவித தவறும் இல்லை. அனைவரும் மதிக்கப்பட்டு அன்பு செலுத்தப்பட வேண்டும். இவர்கள் நம் மகாபுருஷர்கள். அவர்களை நாம் மதிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Comments are closed.