பயனாளர்களின் மின்னஞ்சலை உளவு பார்க்கும் யாஹூ

0

அமெரிக்க அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, NSA மற்றும் FBI க்காக தனது பயனாளர்களின் மின்னஞ்சல்கள் அனைத்தையும் உளவு பார்க்கும் மென்பொருளை வடிவமைத்துள்ளது என்று அதன் முன்னால் பணியாளர்கள் மூன்று பேர் கூறியுள்ளனர். இந்த மென்பொருளை கடந்த வருடம் யாஹூ உருவாக்கியதாக தெரிகிறது.

முதல் முறையாக அமெரிக்க அரசுக்காக தங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனைத்தையும் ஒரு நிறுவனம் சோதிகின்றது என்ற தகவல் இதன் மூலம் தெரியவந்துள்ளது. இது வரை சந்தேகத்திற்குரிய குறிப்பிட்ட நபர்களின் மின்னஞ்சல்களை மட்டும் அரசு வேண்டுகோளுக்கு இணங்க உளவு துறையினருக்கு பிரபல நிறுவனங்கள் வழங்கி வந்தன.

இந்த மென்பொருள் மூலமாக உளவு அமைப்புகள் என்னென்ன தகவல்களை குறித்து தேடினார்கள் என்பது தெரியவில்லை. மேலும் யாஹூ போன்று வேறு எந்தெந்த நிறுவனங்கள் உளவு நிறுவனங்களுக்கு உதவி வருகிறது என்றும் இதுவரை தெரியவில்லை.

யாஹூ வின் முன்னாள் பணியாளர்களின் கூற்றுப்படி யாஹூ நிறுவனத்தின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது யாஹூவில் பல முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிகிறது.

யாஹூ மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு குறித்து அந்நிறுவனம், “யாஹூ சட்டங்களை மதிக்கும் நிறுவனம்” என்று மட்டும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வேறு எந்த கருத்துக்களையும் அது கூற விரும்பவில்லை. இந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்காவின் NSA வும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

அமெரிக்க ஐ.டி. மற்றும் மொபைல் நிறுவனங்கள் அமெரிக்க அரசிற்கு தங்களது பயனாளர்களின் தகவல்களை வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இது இவ்வளவு பெரிய அளவில் நிகழ்கிறது என்பதும் அதுவும் இது போன்று உடனுக்குடன்  தகவல்களை உளவு நிறுவனங்களுடன் பகிர்வது என்பது இதுவரை வெளிவராத செய்தி.

இது குறித்து கணினி பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகையில், உளவுத்துறையினர் யாஹூ நிறுவனத்தை இது போன்று ஒரு விஷயத்திற்காக அணுகியிருக்கிறார்கள் என்றால் வேறு மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்களையும் அவர்கள் இது போன்ற வேண்டுகோள்களுடன் அனுகியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளனர்.

யாஹூ போன்று மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்களின் முக்கிய பெரும் நிறுவனங்களான கூகிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் தாங்கள் இது போன்ற எந்த ஒரு செயலுக்கும் அரசுக்கு உதவவில்லை என்று கூறியுள்ளது. இது குறித்து கூகிளின் செய்தித்தொடர்பாளர் , “எங்களுக்கு இது போன்று எந்த ஒரு வேண்டுகோள்களும் வரவில்லை என்றும், அப்படி வந்தாலும் எங்களால் முடியாது என்று கூறிவிடுவோம்” என்று கூறியுள்ளார்.

மைக்ரோசாஃட் நிறுவனம், “யாஹூ செய்தது போன்று தங்கள் பயனாளர்களின் மின்னஞ்சல்களை தாங்கள் சோதிக்கவில்லை” என்று கூறியுள்ளது. ஆனால் யாஹூவை உளவு நிறுவனங்கள் அணுகியது போல மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை உளவு நிறுவனங்கள் அணுகியதா என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

யாஹூவின் இந்த செயல் பலருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. உளவு நிறுவனங்களின் இத்தகைய வேண்டுகோள்களை யாகூ தனது பயனாளர்களின் நலன்களுக்காக நிராகரித்திருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க உளவு நிறுவனங்கள் எந்த அளவிற்கு உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது எட்வர்ட் ஸ்நோடன் வெயிட்ட தகவல்கள் மூலம் வெளியுலகத்திற்கு தெரியவந்தது. தற்போதைய இந்த நிகழ்வு உளவு நிறுவனங்கள் இன்னும் தீவிர உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டே வருகின்றன என்றும் அதற்கு பிரபல நிறுவனங்களும் உடந்தையாக இருக்கின்றன என்றும் உறுதி படுத்துகின்றது. பயனாளர்கள் தங்களது தகவல்களின் பாதுகாப்பை பிறரிடம் ஒப்படைப்பதால் ஏற்படும் விளைவு தான் தற்போது வெளிவந்துளால் இந்த செய்தி.

Comments are closed.