பலவீனமடையும் ஜனநாயகத்தின் மூன்றாவது தூண்!

0

பலவீனமடையும் ஜனநாயகத்தின் மூன்றாவது தூண்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சி.ஏ.ஏ.) எதிராக பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் தாக்கல் செய்த அறுபது மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் கடந்த 18-ம் தேதி

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மத்திய அரசின் நிலைப்பாட்டை அறியாமல், எந்த கருத்தையும் கூறவோ, முடிவு செய்யவோ இயலாது என்றும், விளக்கம் கோரி மத்திய

அரசுக்கு நோட்டீஸ் அனுப்பலாம் என்றும் கூறி நீதிபதிகள் இந்த விவகாரத்திலிருந்து நழுவுவதிலேயே முனைப்பாக இருந்தனர். சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வரும் சூழலிலும் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு இரண்டு வாரகால

அவகாசத்தை அளித்ததோடு சட்டத்திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜாமிஆ மில்லியா இஸ்லாமியாவிலும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையின் அடக்குமுறையை குறித்தும், கல்வி வளாகங்களில் காவல்துறையின் அத்துமீறல்களை குறித்தும் நீதிமன்றம், முன்னாள் நீதிபதிகள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவின்

விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை

விசாரணைக்கு எடுக்காமல் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது உச்சநீதிமன்றம். டெல்லி உயர்நீதிமன்றமோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கைது நடவடிக்கையிலிருந்து விலக்கு உள்ளிட்ட எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க மறுத்துவிட்டது. நீதிபதிகள் தீர்ப்பை

வாசிக்கும்போது அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்களும் மனுதாரர்களும் நீதிமன்றத்துக்கு உள்ளேயே ‘அவமானம்.. அவமானம்’ எனக் கோஷங்களை எழுப்பினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் அரசின் அனைத்து கணக்குகளையும் தகர்த்து அடக்குமுறைகளை எதிர்கொண்டு அன்றாடம் தீவிரமடைந்து வருகிறது. மத அடிப்படையிலான குடியுரிமை சட்டம் சர்வதேச அளவில் கடுமையான

விமர்சனங்களை பெற்று வருகிறது. எனினும், நீதிமன்றம் அதற்கு எதிரான மனப்பான்மையோடு நடந்து கொள்கிறது. ஜனநாயகம் ஆபத்தில் சிக்கும்போதும், அரசியல் சாசன தத்துவங்கள் சீர்குலைக்கப்படும் போதும் நீதிமன்றங்களால் எவ்வாறு வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்க முடிகிறது?

அரசியலமைப்பின் பாதுகாவலராகவும், விளக்கமளிப்பவராகவும் செயல்படுவது

நீதித்துறையின் கடமையாகும். நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் இயற்றும் சட்டங்களும், அரசு நடைமுறைப்படுத்தும் சட்டங்களும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணக்கமானதா என்பதை ஆராயும் பொறுப்பு நீதித்துறைக்கு உள்ளது. இதற்கு முன்னர் அரசியலமைப்பின் சட்டகத்திலிருந்து அரசுகள் விலகிச் செல்லும்போது, நீதிமன்றங்கள் எச்சரித்ததோடு,

சட்டப்பூர்வமான மற்றும் வெளிப்படையான வழியை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளன. தற்போது நீதிமன்றங்கள் பெரும்பாலும் அரசாங்கத்திற்கு உதவும் வகையிலேயே பிரச்சனைகளை அணுகி உத்தரவுகளை பிறப்பிக்கின்றன.

அடிப்படை கொள்கையிலிருந்து நீதிமன்றங்கள் விலகிச் செல்வது ஆபத்தான போக்காகும். இது, ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்ற நீதித்துறையின் சிறப்பு தகுதியை இழக்கச் செய்வதோடு, ஜனநாயக அமைப்பு முறைக்கே முடிவு கட்டி விடும். ஆகவே, இந்திய

நீதித்துறை பிழையான மனப்பதிவுகளையும், பாரபட்சமான போக்குகளையும் கைவிட்டு அரசியல் சாசன விழுமியங்களை பாதுகாக்கும் அரணாக செயல்படுவது இக்காலக்கட்டத்தில் அவசிய தேவையாகும்.

Comments are closed.