பலி கொடுக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்?

0

பதான்கோட் இராணுவ விமான தளத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவியதாக கூறப்பட்டு நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் அங்கு தீவிரவாதிகள் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டு விட்டனரா அல்லது தப்பி சென்றனரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. சனிக்கிழமை ஆரம்பித்த இந்த தாக்குதலில் ஏழு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இருபதிற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்த பின்னரும் மிகவும் எளிதாக முடிக்கப்பட வேண்டிய வேலை எப்படி இவ்வளவு சிக்கல் ஆனது? இத்தனை இராணுவத்தினர் எப்படி கொலை செய்யப்பட்டனர் அல்லது பலி கொடுக்கப்பட்டனர்? கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்க, பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் இதழில் அஜய் சுக்லா எழுதிய கட்டுரை பதான்கோட் விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவலின் தோல்விகளை பட்டியலிடுகின்றன. அஜய் சுக்லா முன்னாள் இராணுவ கர்னல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கட்டுரையின் முக்கிய பகுதிகளை வாசகர்களுக்கு தமிழில் வழங்குகிறோம்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 1) அன்றே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் உளவுத்துறையினருக்கு கிடைத்தது. அதனை அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு அனுப்பி வைத்தனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு போதியளவு கால அவகாசம் இருக்கத்தான் செய்தது. பதான்கோட் விமான தளத்திற்கு அருகிலேயே ஏறத்தாழ ஐம்பதாயிரம் படையினர் அருகிலுள்ள பதான்கோட் இராணுவ முகாமில் இருந்ததால் விமான தளத்திற்கு உடனடியாக பாதுகாப்பை கொடுத்திருக்கலாம். ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தலைமையிடம் வெறும் ஐம்பது படையினரை மட்டுமே கேட்டுள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட தீவிரவாத குழுகள் இருக்கலாம் என்பதை உணர தவறிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவல், டெல்லியில் இருந்து 150-160 தேசிய பாதுகாப்பு படையினரை (என்.எஸ்.ஜி.) வரவழைத்தார். இராணுவம் இரண்டாம் கட்ட நிலைக்கு தள்ளப்பட்டது.
தீவிரவாதிகள் பதான்கோட் விமான தளத்திற்கு அருகில் உள்ளதை உணர்ந்த போதும் விமான தளத்தின் பாதுகாப்பை பாதுகாப்பு படை ஜவான்கள் (டி.எஸ்.சி.), விமான படையின் கருடா கமாண்டோ படையின் சில வீரர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசாகர் ஒப்படைத்தார். இதில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. டி.எஸ்.பி.படை பிரிவு என்பது ஓய்வு பெற்ற இராணுவத்தினரை கொண்ட பிரிவு. நவீன ஆயுதங்களை கொண்ட தீவிரவாதிகளை இவர்கள் எதிர்கொள்வது என்பது கடினமான காரியம். வீடுகளில் உள்ள தீவிரவாதிகளை எதிர்கொள்வது, பிணைக்கைதிகளை மீட்பது ஆகியவற்றில்தான் தேசிய பாதுகாப்பு படையினர் தேர்ச்சி பெற்றவர்கள். பரந்துவிரிந்த விமான தளம் போன்ற இடங்களில் அவர்களின் சேவையை முதலாவதாக எடுத்துக் கொள்ள முடியாது. கருடா கமாண்டோகளை பொறுத்தவரை அவர்கள் எதற்காக உள்ளார்கள் என்பதை விமான படை கூட இதுவரை தெளிவாக தெரிவிக்கவில்லை. ஜம்மு கஷ்மீரின் பெரிய காடுகளில் தீவிரவாதிகளை எதிர்கொள்வதில் தேர்ச்சி பெற்ற இராணுவத்தினர் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலைமை கையை மீற செல்வதை உணர்ந்த பின்தான் அதிகமான இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். ஏறத்தாழ 150 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்ட போதும் பதான்கோட் நடவடிக்கைகளில் கட்டளையிடும் அதிகாரம் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
பதான்கோட்டில் கொலை செய்யப்பட்ட படையினரில் ஒருவர் கூட இராணுவத்தை சார்ந்தவர் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலுக்கு பதான்கோட் ஆபரேஷன் முடிவதற்கு முன்னரே பாராட்டு மாலைகள் சூடப்பட்டன. தோவலுக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் அவரை புகழ்ந்து தள்ளினர். இதனை தொடர்ந்து சனிக்கிழமை மாலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு படையினரை பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டார். அன்றிரவு பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிகரும் பிரதமர் மோடியும் தங்கள் பங்கிற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் டிவிட்டரில் பதிவு செய்தனர்.
ஆனால் மறுதினம் மீண்டும் கேட்ட துப்பாக்கி சத்தம் அனைத்து பாராட்டுகளையும் மங்கச் செய்தது. ‘ஆயுதங்களை பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு படையினருக்கு காயம் ஏற்படத்தான் செய்யும்’ என்ற உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் நடைபெறவில்லை என்று தன் பங்கிற்கு கூறினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் ஆகவுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடைபெற்றால் இந்தியா பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக் கொள்ளாது என்பதை நன்குணர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தியா இதனை உணர்ந்து பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும். தனக்கு அதிகம் பரிட்சயம் இல்லாத அன்றாட உளவுத்துறை தகவல்களில் தலையிடுவதை தோவல் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நன்றி: Business Standard

Comments are closed.