பல்கலைகழகங்களில் ஒடுக்கப்படும் ஜனநாயகம்

0

கடந்த வெள்ளிக்கிழமை IIT மெட்ராஸில் நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒன்று அதில் பங்குபெற இருக்கும் பேச்சாளர்கள் சர்ச்சைகுரியவர்கள் என்று காரணம் கூறப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமூக சமத்துவம் குறித்து செப்டெம்பர் மாதம் 23 ஆம் தேதி மெட்ராஸ் IIT யில் நடக்கவிருந்த இந்த நிகழ்ச்சியில் ஆவணப்பட இயக்குனர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான K.ஸ்டாலின், டில்லி பொருளாதாரப் பள்ளியின் சமூகவியல் பேராசிரியர் நந்தினி சுந்தர் மற்றும் Borderless World Foundation என்ற தன்னார்வ தொண்டுநிறுவன நிறுவனர் அதிக் கதம் ஆகியோர் உரையாற்ற இருந்தனர்.

இந்த நிகழ்ச்சி எதிர்பாராத சந்தர்பங்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டது என்று IIT மெட்ராஸ் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. ஆனால் IIT மெட்ராஸின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியோ தனக்கு இந்த நிகழ்வு குறித்து எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இது போன்றே ஜாமியா மிலியா பல்கலைகழகத்தில் வியாழக்கிழமை நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு அதில் பங்குபெறவிருக்கும் பேச்சாளர்கள் வெளியில் இருந்து வருபவர்கள் என்று கூறி அனுமது மறுக்கப்பட்டுள்ளது. இதில் நகைமுரண் என்னவெனில் இந்த நிகழ்ச்சி பல்கலைகழகங்களில் குறைந்துவரும் ஜனநாயக தளம் குறித்ததாகும் என்பது தான்.

பல்கலைகழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இருவர் இந்த தலைப்பு குறித்தும் அந்த தலைப்பில் உரையாற்ற இருக்கும் நபர்களின் பட்டியல் குறித்தும் கடந்த செப்டெம்பர் 12 ஆம் தேதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அனுமதி கோரியுள்ளனர். இதற்கு முதலில் தங்களுக்கு அனுமதி வழங்கி பின்னர் வியாழக்கிழமை அந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அது போன்று எதுவும் இல்லை என்று கூறிய பல்கலைகழக நிர்வாகம் மாணவர்கள் இது போன்ற சூழ்நிலையில் பின்பற்றவேண்டிய சட்டதிட்டங்கள் சில உள்ளது என்றும் அதனை பின்பற்றி நடக்கவே அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜவஹர்லால் நேரு பல்கலைகழத்தின் மாணவர்கள் உமர் காலித் மற்றும் ஷேஹ்லா ரஷித் ஆகியோர் ராம்ஜாஸ் கல்லூரியில் உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து டில்லி பல்கலைகழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.