பல்கிஸ் பானு வழக்கு: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

0

2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட மிருக வெறி தாக்குதல்களில் குழந்தைகள் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டும் பெண்கள் கற்பழிக்கப்பட்டும் முஸ்லிம்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டும் அவர்கள் தங்களின் வீடுகளில் இருந்து விரட்டியும் அடிக்கப்பட்டனர். இந்த கலவர கொடூரங்களில் வெகு சில சம்பவங்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த வெகு சில வழக்குகளில் பல்கிஸ் பானு வழக்கும் ஒன்று.

2002, பிப்ரவரி 27 ஆம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டதில் இருந்து கலவரக்காரர்களிடம் இருந்து தப்ப பல்கிஸ் பானுவின் குடும்பத்தினர் ஒவ்வோர் இடமாக தப்பி ஓடினர். கொலைவெறிக் கும்பலிடம் இருந்து தங்களது உயிரைக் காப்பாற்ற இவர்கள் ஓடிக் கொண்டிருந்த போதே 9 மாத கர்ப்பிணியான ஷமீம் என்பவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பல்கிஸ் பானுவின் தாய், அவரது இரு சகோதரிகள், அவரது மாமா, இரு சகோதரர்கள், அவர் தந்தையின் சகோதரி, அவரது கணவர் மற்றும் மூன்று சகோதரிகள் ஆகியோர் அடங்கிய குழு தங்கள் உயிரை காக்க குத்ரா கிராமத்தில் உள்ள பழன்குடியினர்களிடம் தஞ்சம் புகுந்தது. முஸ்லிம்கள் அடைக்கலம் தேடிய இடமெல்லாம் அவர்களை தேடிச் சென்று கொலை செய்த கும்பல்  பல்கிஸ் பானு குடும்பத்தினர் சென்ற குத்ரா கிராமத்திற்கும் சென்று அங்குள்ள பழங்குடியினரை மிரட்டியுள்ளது.

வேறு வழியின்றி அங்கிருந்து சப்ரவாத் கிராமத்திற்கு சில பழங்குடியினரின் உதவியுடன் அவர்கள் சென்றனர். மொத்தம் நான்கு ஆண்கள் 8 பெண்கள் மீதம் குழந்தைகள் இருந்த கூட்டத்தை கண்டதும்

“முஸ்லிம்கள் இங்கிருக்கிறார்கள், அவர்களை கொல்லுங்கள், அவர்களை கொல்லுங்கள்”

என்று கூறியவாறு 25 பேர் கொண்ட கும்பல் டாட்டா சுமோவில் அவர்களை விரட்டியுள்ளது.

அவர்களின் முதல் தாக்குதலுக்கு பல்கிஸ் பானுவின் மாமா உள்ளாகியுள்ளார். கூட்டத்தில் இருந்த ஆண்களை அடித்துக் கொன்ற அவர்கள் அங்கிருந்த பெண்களை மானபங்கப்படுத்த தொடங்கினர். அந்த பெண்களை நிர்வாணமாக்கி அனைவரின் முன்னிலையிலும் கூட்டாக கற்பழித்துள்ளனர். இவர்களின் வெறிக்கு, பிறந்து இரண்டு நாட்களான ஷமீமின் குழந்தை கூட தப்பவில்லை. அந்த பச்சிளம் குழந்தையையும் மிருகத்தனமாக அடித்துக் கொலை செய்துள்ளது அந்தக் கும்பல். பெண்களை கூட்டாக கற்பளித்தப் பின் அவர்கள் அனைவரையும் கொலை செய்துள்ளனர். இவை அனைத்தின் போதும் வெளியே கூற வாய் கூசக் கூடிய ஆபாச வார்த்தைகளை கூறிக்கொண்டே இந்த கொடுமைகளை அவர்கள் செய்துள்ளனர்.

பல்கிஸ் பானுவின் குழந்தையை பாறையில் தூக்கி எரிந்து கொலை செய்த அந்த கும்பல் அவரையும் கூட்டாக கற்பழித்துள்ளது. அதன் பிறகு அந்த கூட்டத்தில் ஒருவன் அவரது கழுத்தில் கால் வைத்து நசுக்கி அவரை தாக்கியுள்ளான். பின்னர் கற்களாலும், கட்டைகளாலும் தாக்கப்பட்ட பல்கிஸ் பானுவை அவர் மயக்கமுற்றதும் இறந்துவிட்டதாக கருதி புதர் ஒன்றில் எறிந்துள்ளனர். சில மணி நேரங்கள் கழித்து பல்கிஸ் பானுவிற்கு நினைவு திரும்பியுள்ளது. இந்த தாக்குதலின் போது பல்கிஸ் பானு 5  மாத கர்ப்பிணி என்பது குறிபிடத்தக்கது. அந்த கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான 17 பேர்களில் பல்கிஸ் பானு மற்றும் இரண்டு சிறுவர்களை சேர்த்து மூன்று பேர் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர்.

இவ்வளவு கொடுமைகளை சந்தித்த பல்கிஸ் பானு காவல்துறையினரிடம் நடந்ததை கூற அவர்கள் அதனை திரித்து எழுதி அவரையும் மிரட்டியுள்ளனர். இவ்வழக்கில் உண்மையுடன் வேண்டுமென்றே சேர்க்கப்பட்ட பல பொய்களும் கலக்கப்படுவிட்டது என்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூறியுள்ளது.

விசாரணையில் காவல்துறையின் தொய்வும், பிரேத பரிசோதனை அறிக்கையில் மருத்துவர்கள் காட்டிய தொய்வையும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இவ்வழக்கில் பல்கிஸ் பானு மீது நடத்தப்பட்ட கற்பழிப்பை காவல்துறை மறைக்க முயன்று குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது என்று கூறியுள்ளது. பல்கிஸ்பானு கூடுதலாக கூறிய வாக்குமூலங்களை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை என்றும் அவர்கள்

“(காவல்துறையினர்) பல்கிஸ் பானுவின் வாயை அடைத்து அவரது நீதிக்கான அழுகுரலை யார் காதிலும் விழாமல் பார்த்துக் கொண்டுள்ளனர்”

என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இன்னும் தன் மீது நடத்தப்பட்ட கொடுமைகளை காவல்துறையிடம் பல்கிஸ் பானு விவரித்தும் அவர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்படவில்லை என்றும் இது தொடர்பான ஆதாரங்களை மறைக்க அவர் ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு பின்னர் தான் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

“அவர் பாதிக்கப்பட்டவர், ஒரு சாட்சி, கொல்லப்பட்டவர்களின் உறவினர், ஆனால் அவரை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடல்களை அடையாளம் காண காவல்துறை அழைத்துச் செல்லவில்லை. அவர்களது நெருங்கிய உறவினர்கள் யாரும் கூட அங்கு அழைத்துச் செல்லப்படவில்லை.”

என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒரு வழக்கில் உடல்களை அடையாளம் காண்பதே முதற்கட்ட விசாரணை என்றும் ஆனால் “காவல்துறை பிரேத பரிசோதனையை அவசர அவசரமாக நடத்தி உப்பு மூட்டைகளுடன் அந்த உடல்கள் விரைவில் அழுகிப் போகும்படி புதைத்துள்ளது.” என்று நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் குறித்து கூறிய நீதிமன்றம், அவர்கள் பிரேத பரிசோதனை செய்ததில் அலட்சியமாக இருந்தது மட்டுமல்லாமல் அந்த பிரேத பரிசோதனையில் கிடைத்த ஆதாரங்களையும் அவர்கள் மறைத்துள்ளனர். மேலோட்டமான பார்வையில் மருத்துவ பரிசோதகர்கள் தங்களது பணியில் அலட்சியமாக இருந்ததாகவும் அதனால் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று ஒருவர் கருதக் கூடும், ஆனால் உண்மை அவ்வாறல்ல. இவ்வழக்கை தெளிவாக ஆராய்ந்தால் மருத்துவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து உடல்களுக்கும் பிரேத பரிசோதனை செய்வதில் முற்றிலுமாக தவறிவிட்டனர் என்பது விளங்கும் என்றும் தங்களது குறிப்பில் மறைவிடங்களில் உள்ள காயங்களை மட்டுமே அவர்கள் குறிப்பிட்டுளளனர். ஆனால் புகைப்பட ஆதாரங்களை வைத்து பார்க்கிற போது உயிரிழந்த பெண்கள் அனைவரும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு குறித்து காவல்துறையிடம் வழக்கு பதிவு செய்ய முடியாமல் போனதால் பல்கிஸ் பானு தேசிய மனித உரிமை ஆணையத்தை நாடியும் உச்ச நீதிமன்றத்திற்கும் மனு அளித்தார். உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க சிபிஐ இடம் உத்தரவிட்டது. இந்த வழக்கால் தங்களது குடும்பத்தினருக்கு அச்சுரத்தல் அதிகரித்ததால் இந்த வழக்கை குஜராத்திற்கு வெளியே மாற்றுமாறு அவரது குடும்பம் கேட்டுக் கொண்டது. இதனை அடுத்து இவ்வழக்கு மகாராஷ்டிர மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.

மும்பை விசாரணை நீதிமன்றத்தில் 19 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில் 11 பேருக்கு 2008 ஜனவரி மாதம் கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த குற்றவாளிகளில் ஜாஸ்வந்த்பாய் நாய், கொவிந்த்பாய் நாய் மற்றும் ரதேஷம் ஷா ஆகிய மூவருக்கு இந்த குற்றத்தை திட்டமிட்டு நடத்தியதற்காக மரண தண்டனை வழங்கக் கோரி சிபிஐ மேல் முறையீடு மனு அளித்தது.

ஆனால் இதனை மறுத்த நீதிமன்றம்,

“இந்த முழு சம்பவத்தை குஜராத் கலவரத்தின் பின்னணியிலும் முஸ்லிம் எதிர்ப்பு மனோபாவத்திலும் பார்க்க வேண்டும்”

என்று கூறிவிட்டது.  இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி மிருதுளா பட்கர் இதே போன்று ஒரு தீர்ப்பை புனேவை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் மொஹ்சின் சாதிக் ஷேக் கொலை வழக்கிலும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)

இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணையின் போது லிம்கேதா காவல்நிலைய காவல்துறையினர் அலட்சியமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் குற்றவாளிகளை பாதுகாத்தும் ஆதாரங்களை அழித்தும் குற்றவாளிகளை பாதுகாக்க போலியான தகவல்களை கொடுத்ததையும் சிபிஐ தனது விசாரணையில் கண்டுபிடித்தது.

இந்த குற்றவாளிகளான காவல்துறையினர் மட்டும் மருத்துவர்களான நர்பத் சிங், இத்ரிஸ் அப்துல் சையத், பிகபாய் படேல், ராம்சிங் பாபோர், ராமன்பாய் பாகொரா, மருத்துவர் அருண் குமார் பிரசாத், மற்றும் மருத்துவர் சங்கீதா குமார் பிரசாத் ஆகியோர் இந்த வழக்கு விசாரணையின் போது சிறையில் களித்த காலத்தை அவர்களது தண்டனை காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மேலும் இவர்கள் தலா 20000 ரூபாயை அபராதமாக எட்டு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Comments are closed.