பல்லப்கார்க் வன்முறை: வீடுகளை விட்டு வெளியேறிய முஸ்லிம்கள்

0

ஹரியாணா மாநிலத்தின் பல்லப்கார்க் என்ற இடத்தில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டும் வெளியேறியுள்ளனர். மே 25 அன்று ஒரு மணிநேரம் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் முஸ்லிம்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மஸ்ஜித் ஒன்றை கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையே கலவரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
மஸ்ஜித் கட்டுவதற்காக விதிக்கப்பட்ட தடை கடந்த ஆறு வருடங்களான அமலில் உள்ளது. தற்போது நீதிமன்றத்தில் முறையான அனுமதியை பெற்றே மஸ்ஜித்தை கட்டுவதாக முஸ்லிம்கள் தெரிவித்தனர். முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜாட் சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். சமீப நாட்களாக வட இந்தியாவில் ஜாட் சமூகத்தினர் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை நடத்துவது அதிகரித்துள்ளது.
இந்த கலவரத்திலும் முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. மஸ்ஜித் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள தெருவில் மொத்தம் இருபது வீடுகள் உள்ளன. இதில் பதினேழு வீடுகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானவை. கலவரத்தின் போது இந்த பதினேழு வீடுகளும் தாக்கப்பட்டன. சம்பவ இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடையும் தாக்கப்பட்டுள்ளது.
வீடுகளை விட்டும் வெளியேறியுள்ள முஸ்லிம்கள் தற்போதைய சூழலில் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் மனநிலையில் தாங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
கலவரம் நடைபெற்று 36 மணிநேரம் கழிந்த பிறகும் காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Comments are closed.