பல்லப்கார்க்: வீடுகளுக்கு திரும்பும் முஸ்லிம்கள்

0

 

ஹரியாணாவின் பல்லப்கார்க் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தற்போது தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இப்பகுதியில் மே 25 அன்று நடைபெற்ற கலவரத்தில் 15 முஸ்லிம்கள் காயமடைந்தனர். ஏராளமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட 150 முஸ்லிம் குடும்பங்கள் காவல் நிலையத்தில் அடைக்கலம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாததை தொடர்ந்து தங்கள் வீடுகளுக்கு திரும்புவதில்லை என்று இவர்கள் தெரிவித்து வந்தனர். இதனிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நேற்று (ஜூன் 3) தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

முஸ்லிம்கள் வீடுகளுக்கு திரும்புவதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அடாலி கிராமத்தில் அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் பொருட்கள் ஏதும் மிஞ்சவில்லை என்றும் முஸ்லிம்கள் தெரிவித்தனர். கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த மஸ்ஜித் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மஸ்ஜித் அனுமதியின்றி கட்டப்படுகிறது என்று காரணம் கூறியே ஜாட் சமூகத்தினர் இக்கலவரத்தை நடத்தினர். ஆனால் மஸ்ஜித்தை கட்டுவதற்கான முறையான அனுமதி முஸ்லிம்களிடம் உள்ளது. ரமலான் தொடங்குவதற்கு முன்னர் மஸ்ஜித்தின் சுவர்களை கட்ட உள்ளதாக முஸ்லிம்கள் தெரிவித்தனர்.

(புகைப்பட உதவி: அனிருத்தா கோஸல்)

Comments are closed.