பல குழந்தைகளின் உயிரை பாதுகாத்த கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானிற்கு பிணை

0

பல குழந்தைகளின் உயிரை பாதுகாத்த கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானிற்கு பிணை

உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரின் பாபா ரகுபர் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் மருத்துவர் கஃபீல் கான். 2017 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி இரவு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் பல குழந்தைகள் உயிரிழந்தனர். அப்போது நிலைமை மேலும் மோசமாவதை தடுக்கும் வகையில் மிக குறுகிய காலகட்டத்தில் 250க்கும் மேற்ப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை தனது சொந்த பணத்தை கொண்டு ஏற்பாடு செய்து பல குழந்தைகளின் உயிரை பாதுகாத்தார் டாக்டர் கஃபீல் கான்.

இவரின் இந்த செயலுக்கு பரிசாக யோகி அதித்யநாத் அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இவர் மீது ஊழல் புகார் சுமத்தியும் குழந்தைகளின் மரணத்திற்கு இவர்தான் காரணம் என்று கூறி கொலை முயற்சி குற்றமும் இவர் மீது சுமத்தப்பட்டது. அன்றில் இருந்து குழந்தைகளின் உயிரை பாதுகாத்த குற்றத்திற்காக (?) சிறையில் வாடி வரும் கஃபீல் கானை வெளியில் எடுக்க அவரது உறவினர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். கஃபீல் கானின் தாயார் கடத்த 2017 டிசம்பர் மாதம் அதித்யனாத்தை சந்தித்து தனது மகனிர்காக நீதி வேண்டி முறையிட்டார்.

மேலும் சிறையில் உள்ள மருத்துவர் கஃபீல் கானின் உடல் நிலை மோசமடைந்து வருவதாகவும் அவரை லக்னோவிற்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்த போதிலும் சிறை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றது என்றும் கஃபீல் கானின் மனைவி தெரிவித்தார். மேலும் தான் தனது கணவரின் உயிருக்கு அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் மருத்துவர் கஃபீல் கானிற்கு புதன் கிழமை பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவரது வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்ட காரணத்தால் அவரை சிறையில் அடைத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறையில் இருந்த கஃபீல் கான் ஒரு வாரத்திற்கு முன்னதாக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “2017 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி எனக்கு நடப்பவை குறித்த செய்தி வந்ததும் ஒரு மருத்துவராக, ஒரு தந்தையாக, ஒரு பொறுப்புள்ள குடிமகனாக ஒருவர் என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் நான் செய்தேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆபத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் நான் பாதுகாக்க முயற்சித்தேன். சில நேரங்களில் நான் குற்றவாளியா என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். அப்படி கேட்கும் தருணங்களில் எனது ஆள் மனதில் இருந்து இல்லை என்ற மிகப்பெரிய விடை பதிலாகக் கிடைக்கிறது. இந்த விவகாரம் ஊடகத்தில் எப்படி வெளிவந்தது என்பது குறித்து யோகி கோபத்தில் உள்ளார். நான் இறைவன் மீது ஆணையிடுகிறேன், அன்று இரவு நான் எந்த ஒரு ஊடகங்களுக்கும் தகவல் அளிக்கவில்லை. அவர்கள் இரவு முதலே அங்கு இருந்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்திய மருத்துவ சங்கம், மருத்துவர் கஃபீல் கானை சதித்திட்டத்தால் பாதிக்கப்பட்டவர் என்று அழைத்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர், மருத்துவர் R.P.சுக்லா கருத்து தெரிவிக்கையில், ஆக்சிஜன் குறைபாடு என்பது நிர்வாக குறைபாடு மற்றும் ஊழலினால் ஏற்பட்டது. இதற்கு கோரபூரில் இருந்து லக்னோ வரை உள்ள அதிகாரிகளே குற்றம் சுமத்தப்பட வேண்டுமே அல்லாது மருத்துவர்கள் இல்லை. இந்த நிலையை தடுக்க மாநில அரசிடம் அனைத்து வழிமுறைகளும் இருந்தும் அதனால் இதனை தடுக்க முடியவில்லை.  ஆனால் தன்னால் இந்த நிலையை தடுக்க சக்தி பெறாத மருத்துவரை அவர்கள் கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர் கஃபீல் கான் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று காவல்துறை அதனை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.