பல டிசைன்களில் புதிய  ரூபாய் தாள்கள்?

0

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவித்த பிறகு புதிய 500 ரூபாய் தாள்கள் புழக்கத்திற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிறது, இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 500  ரூபாய் தாள்களில் பல வகையானவை மக்கள் மத்தியில் உலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி புதிய 500 ரூபாய் தாள்களை அவசரமாக அச்சிட்டமையால் அச்சுப்பிழை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 500  ரூபாய் தாள்  ஒன்றில் மகாத்மா காந்தியுடைய முகத்தின் நிழல் சற்று கூடுதலாக உள்ளது. அதோடு தேசிய சின்னத்தின் இடமும் சிறிது மாறியுள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு நிகழ்வில் தன்னுடைய புதிய 2000 ரூபாய் தாளுக்கு சில்லரை பெற்றவருக்கு அவர் வாங்கிய இரண்டு புதிய 500 ரூபாய் தாள்களும் வெவ்வேறு நிறத்தில் இருந்துள்ளன. இது குறித்து ரிசர்வ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா கூறுகையில், “இது போன்ற அச்சுப்பிழை கொண்ட ரூபாய் தாள்கள் வெளியானதற்கு காரணம் அவசரமாக ரூபாய் தாள்கள் அச்சிடப்படுவதால் தான் என்றும் மக்கள் அது போன்ற ரூபாய் தாள்களை பண பரிவர்த்தனையின் போது தாரளமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் இல்லை என்றால் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் இந்த பதில் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. முன்னதாக 2000 ரூபாய் தாள்களில் சாயம் போவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சாயம் போனால் தான் நல்ல நோட்டு என்றும் போகவில்லை என்றால் கள்ள நோட்டு என்று ரிசர்வ் வங்கி கூறியது குறிப்பிடத்தக்கது.

பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாதது என்ற அறிவிப்பிற்கு பா.ஜ.க அரசு கூறிய காரணங்களில் ஒன்று புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்கு என்பது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி அச்சிட்ட ரூபாய் நோட்டுகளிலேயே இத்துனை குழப்பங்கள் இருந்தால் கள்ள நோட்டுகளை மக்கள் மத்தியில் தேச விரோத சக்திகள் புகுத்துவது இலகுவாகிவிடும் என்றும் மக்களுக்கு எது நல்ல நோட்டு எது கள்ள நோட்டு என்று கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அஞ்சப்படுகிறது.

2013 ஜனவரி இல் இருந்து 2016 செப்டெம்பர் மாதம் வரை 155.11 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. இதில் 27.79 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் கைப்பற்றப் பட்டவை. கைப்பற்றப்பட்ட ரூபாய்களின் மதிப்பு பல நூறு கோடிகளாக இருந்தாலும் கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுக்களின் எணிக்கை வெறும் 31 லட்சம் தான். இவை அனைத்தும் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் என்றும் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்களில் இது வெறும் சொற்பத் தொகை தான் என்றும் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.