பல போலி என்கெளவுண்டர்களில் பங்கெடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட மணிப்பூர் காவல்துறை அதிகாரி

0

மனிபூரின் மிகவும் அச்சத்திற்குரிய என்கெளவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று கருதப்பட்ட தலைமைக் காவலர் ஹீரோஜித் சிங் என்பவர் தான் 2003 முதல் 2009 ஆம் ஆண்டு வரை பல போலி என்கெளவுண்டர்களில் பங்கெடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்த ஹீரோஜித், இந்த அனைத்து போலி என்கெளவுண்டர்களும் தனது உயர் அதிகாரிகளின் நேரடி உத்தரவின் கீழ் தான் நடைபெற்றது என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இந்த ஆறு ஆண்டுகளில் மணிப்பூரின் முக்கிய என்கெளவுண்டர் கமாண்டோக்களில் சிங்கும் முக்கியமானவர்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தகவலின்படி 2008-09 ஆண்டுகளில் மணிப்பூரில் மட்டும் மிக அதிகப்படியான போலி என்கெளவுண்டர்கள் நடத்தப்பட்டு அம்மாநிலம் தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் இருந்தது என்று தெரிவித்துள்ளது. முதல் இடத்தில் உத்திர பிரதேசம் இருந்தது.

PLA போராளி சஞ்சித் மெய்தெய் என்பவரை சுட்டுக் கொன்று ஆறு வருடங்கள் கழித்து 2016 ஆம் ஆண்டு அவரை சுட்டுக் கொன்றதை ஹீரோஜித் ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் மெய்தெய்யை தான் 9mm துப்பாக்கியால் அவரது நெஞ்சில் சுட்டுக் கொன்றதாகவும் இந்த கொலை குறித்து மணிபூர் டிஜிபி மற்றும் முதல்வருக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2009  ஜூலை மாதம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் நிராயுதபாணியாக காவல்துறையினரிடம் சரணடைந்த சஞ்சித்தை காவல்துறையினர் சுட்டுக் கொன்றது மாநிலம் முழுவதும் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது.  முன்னதாக விசாரணை நீதிமன்றத்தில் இது தொடர்பாக தான் அஃபிடவிட் தாக்கல் செய்கையில் தனது வழக்கறிஞர்கள் தன்னை கைவிட்டுவிட்டனர் என்றும் தனக்கு வழக்கறிஞர் இல்லாத நிலை ஏற்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே ஒரு முறை அவரை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மிகச் சாதாராமாகவும் தொடர்ச்சியாகவும் எந்தவித தயக்கமும் இன்றி சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகளை செய்ய உத்தரவிட்ட அணைத்து அதிகாரிகளுக்கும் தான் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அதனாலேயே தனக்கும் அத்தகைய முடிவு ஏற்படலாம் என்று தான் அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தனது அஃபிடவிட்டில் தனக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலை உத்தரவுகளை கொடுத்த உயர் அதிகாரிகளின் பெயர்களை தான் கூறத் தயார் என்றும் தனது வாக்கு மூலத்தை மாஜிஸ்திரேட் ஒருவர் முன்னிலையில் பெற்றுக்கொள்ளுமாறு தான் சிபிஐ இடம் கூறிய போதும் சிபிஐ இதில் எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை என்றும் அதற்கு மாறாக இந்த குற்றங்களை மூடி மறைக்கவே அது முயற்சித்தது என்றும் ஹீரோஜித் தெரிவித்துள்ளார்.

இத்துடன் தான் பங்கு கொண்ட என்கெளவுண்டர்களில் கொல்லப்பட்டவர்களின் பெயர், வயது, பெற்றோர்கள், முகவரி, எங்கு வைத்து என்கெளவுண்டர் செய்யப்பட்டது, என்கெளவுண்டர் செய்யப்பட்ட தினம், என்கெளவுண்டர்களின் முடிவு விபரம், என்கெளவுண்டர் உத்தரவை கொடுத்த அதிகாரிகளின் விபரம் ஆகியன வரிசைப்படி குறிப்பிடப்பட்டிருந்த தனது மூன்று முதல் நான்கு டைரிகளை சிபிஐ அபகரித்துக் கொண்டுள்ளது என்றும் அவற்றை திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்றும் ஹீரோஜித் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் குறிப்பிட்ட அந்த டைரிகளை சிபிஐ அழிக்கவோ அல்லது மறைக்கவோ முயலும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் பல போலி என்கெளவுண்டர்களில் பங்கெடுத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைக்கு தான் ஒத்துழைப்பதாகவும், எந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்தினாலும் தான் அங்கு அதனை கூறத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹீரோஜித்தின் இந்த முடிவை Human Rights Alert அமைப்பு நிர்வாக இயக்குனர் பப்லூ லோய்டங்பம் வரவேற்றுள்ளதோடு, இது தைரியமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்று கூறியுள்ளார், இந்த வழக்கு, ஒரு கொலை எந்திரமாக மாறியுள்ள மணிப்பூர் படைகளை தகர்க்க உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் மணிப்பூரில் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற சுமார் 98 போலி என்கெளவுண்டர்கள் குறித்து விசாரிக்க சிபிஐ ஐ உத்தரவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சுமார் 1528 போலி என்கெளவுண்டர்கள் நடைபெற்றுள்ளது என்ற EEVFAM (Extra Judicial Execution Victim Families Association) அமைப்பின் ரிட் மனுவின் மீதான விசாரணையின் போது இதனை நீதிபதி மதன் B லோகுர், மற்றும் நீதிபதி உதய் U லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது. இதற்கென ஐந்து அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அதன் விசாரணை அறிக்கையை 2018 ஜனவரி மாதத்திற்குள் சமர்பிக்கவேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.