பழங்குடியின பெண்களை கடத்திய வழக்கில் சாமியார் பாபா பாம்தேவிற்கு 10 வருட சிறை

0

தன்னை தானே சாமியார் என்று அறிவித்துக்கொண்ட பாபா பாம்தேவ் ராமிற்கு, பழங்குடியின பெண்களை கடத்தி விற்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித கடத்தல் தடுப்பு குழுவினர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்த பாபா பாம்தேவ் ராம் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சுமார் 8000 பழங்குடியின பெண்களை கடத்தி டில்லியில் உள்ள 400 க்கும் மேற்பட்டவர்களிடம் விற்றதாக கூறப்படுகிறது.

இவர் மீது ஆட்கடத்தல், கற்பழிப்பு, மோசமாக காயங்களை ஏற்படுத்துதல், அச்சுறுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை குறித்து ஜார்கண்டை சேர்ந்த ஒரு பெண் தன்னையும் தனது சகோதரனையும் பாபா பாம்தேவ் ராம் மற்றும் அடையாளம் தெரியாத அவரது உதவியாளர் கடத்தியதாக குற்றம் சாட்டியதை தொடர்ந்து இவர் செய்த குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து அப்பெண் காவல்துறையினரிடம் புகாரளிக்கையில், விஷ்ணு பூங்காவில் உள்ள தன்னை ஒரு கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அடைத்து வைத்து பலமுறை கற்பழித்து அதை சாமியார் பாம்தேவ் ராம் படம் பிடித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பாம்தவ் ராம் சொல்வதை கேட்டு நடக்காவிட்டால் தனது சகோதரனை கொலை செய்துவிடுவதாக பாம்தேவ் மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல் தடுப்பு ஆர்வலர்களின் கூற்றுப்படி, ராம்ஜி மகாராஜ் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பாம்தேவ் ராம் இது போன்று ஆட்கடத்தல் வேலைகளில் சுமார் 10 ஆண்டுகாலம் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். 40 வயதை நெருங்கும் இவர் லதேகர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த பத்து வருடங்களாக பழங்குடியின பெண்களை டெல்லிக்கு அழைத்து வந்து அங்கு அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியில் துன்புறுத்தி அவர்களிடம் வேலை வாங்கி வந்துள்ளார் என்றும் சமூக சேவை என்கிற போர்வையில் தன்னை சாமியார் என்றும் அவர் அறிவித்துள்ளார் என்றும் இவர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் என்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் ராஞ்சி, கும்லா, லதேகர், சிம்தேகா, லோஹர்டகா ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியின பெண்களை டெல்லியில் வேலை வாங்கி தருவதாக கூறி தனது வலையில் வீழ்த்தி கடத்தியதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜார்கண்டின் குந்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஒவ்வொரு வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி டில்லியில் ஆதிவாசி சம்மேளனத்தை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு மற்றும் மேம்பாடு என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான பழங்குடியின பெண்களை டெல்லிக்கு அழைத்து வருவதும் அங்கு வைத்து மிகப்பெரிய மனித வியாபாரத்தை அவர் நடத்தியதும் தெரியவந்துள்ளது. மேலும் இவரிடம் சிக்கி பணியாதவர்களை ஆபாசமாக படமெடுத்து அவர்களை பணிய வைத்ததாகவும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பாபா பாம்தேவ் ராமிற்கு பிரபல ஆட்கடத்தல் கும்பலை சேர்ந்த பன்னாலாலுடன் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பன்னாலால், சுமார் 20000 பெண்களை 250 நிறுவனங்களுக்கு விற்றதாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாபா பம்தேவ் ராம் தன்னை சாமியார் என்று அழைத்துக்கொண்டது மூலம் காவல்துறையினரிடம் இருந்தும் அரசியல்வாதிகளிடம் இருந்தும் பாதுகாப்பு பெற்றுள்ளார் என்று பச்பன் பச்சாவோ அந்தோலன் அமைப்பை சேர்ந்த ராகேஷ் சென்கர் கூறியுள்ளார். மேலும் பாம்தவிற்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும் ஆட்கடத்தல் விவகாரத்தை நீதித்துறை தீவிரமாக எடுத்துக்கொள்வது சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.