பாசிசத்தை வீழ்த்தும் கடமை அனைவருக்கும் இருக்கிறது

0

பாசிசத்தை வீழ்த்தும் கடமை அனைவருக்கும் இருக்கிறது

நாடாளுமன்ற தேர்தல் நாட்டில் நடைபெறவுள்ள நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. ஃபைஸி அவர்கள் விடியலுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டி

நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்வைக்கும் அரசியல் எது?

எதிர்வரும் மக்களவை தேர்தலில், “உண்மையான மாற்று அரசியலுக்கு எஸ்.டி.பி.ஐ.க்கு வாக்களியுங்கள்” என்ற முழக்கத்தை கட்சி முன்வைக்கிறது. ஒருபுறம் வகுப்புவாத பாசிஸ்டுகளான பா.ஜ.க., மறுபுறம் மதச்சார்பற்ற கட்சிகள். ஆனால், இவை இரண்டுக்குமிடையே ஒரு மக்கள் சார்பு அரசியல் மறக்கடிக்கப்படுகிறது. பா.ஜ.க. மிகப்பெரிய அபாயங்களை நாட்டிற்கு வரவழைத்துள்ளதால் மக்கள் சார்பு அரசியல் மறக்கடிக்கப்படுகிறது. ஊழல், வேலையின்மை அதிகரித்துள்ளது, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்றாட பொருட்களின் விலை உயர்வை கூட கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த அரசுதான் மத்தியில் ஆட்சி புரிகிறது. அவர்களின் பொருளாதார கொள்கையும் வெளிநாட்டு கொள்கையும் ஒரு அபாயகரமான சூழலுக்கு மாறிவிட்டது. மிக முக்கியமாக இந்துத்துவ அரசியலின் அடித்தளத்தில் இருந்து கொண்டுதான் அவர்கள் ஆட்சி புரிகின்றனர். நாட்டின் அனைத்து அமைப்பு முறைகளையும் காவிமயமாக்குவதற்கான முயற்சிகளை செய்கின்றனர். அனைத்திற்கும் மேலாக நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையே தகர்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், மறுபுறம் மதச்சார்பற்ற சக்திகள் பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என்ற ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தைதான் முன்வைக்கின்றன. பா.ஜ.க.வின் பொருளாதார கொள்கைக்கு மாற்றீடான ஒரு பொருளாதார கொள்கையை அவர்களால் முன்வைக்க இயலவில்லை. வேலையின்மை, விலைவாசி உயர்வு, அனைத்து துறைகளின் வளர்ச்சி குன்றிய நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் எதையும் இந்த மதச் சார்பற்ற கட்சிகள் மக்கள் முன் வைக்கவில்லை. பொருளாதார கொள்கையில் பா.ஜ.க.வையே  பின்பற்றுகிறார்கள். அவர்களின் வெளிநாட்டுக் கொள்கையும் பா.ஜ.க.வின் கொள்கையை ஒத்ததாகத்தான் இருக்கும். நாட்டின் வேலையின்மை இதுபோலவே தொடரும். நாட்டின் பல துறைகளிலும் நீடிக்கும் வளர்ச்சி குன்றிய நிலை மாறப்போவதில்லை. அதனால்தான் இது உண்மையான மாற்று அல்ல என்று நாங்கள் கூறுகிறோம்.

மக்களை முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்லும் திட்டங்களை முன் வைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவேண்டும். விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும். காங்கிரஸ் ஆட்சி செய்த காலக்கட்டத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்தனர்.பா.ஜ.க ஆட்சி காலத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். எந்த ஆட்சி காலத்தில் அதிகம் விவசாயிகள் தற்கொலை செய்தார்கள் என்பதுதான் இங்கு வேறுபாடாக இருக்கிறது. மாறாக, விவசாயிகள் தற்கொலைச் செய்வதற்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து அதை ஒழிப்பதற்கான திட்டங்கள் இவர்களிடம் இல்லை.

மதச்சார்பற்ற கட்சிகளில் பலரும் பா.ஜ.க. முன்வைக்கும் இந்துத்துவ செயல்திட்டத்திற்கு அனுகூலமாக எதிர்வினையாற்றுவதில் போட்டியிடுகிறார்கள் என்பது மற்றொரு அபாயமாகும். அதன் மிகப்பெரிய உதாரணம் தான் மதச் சார்பற்ற கட்சிகளில் மிகவும் முன்னணியில் நிற்கும் காங்கிரஸ் கட்சி, பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் மிக மோசமான கருத்துக்களை தெரிவிப்பது. அதன் ஒரு தலைவர் மட்டுமல்ல, பலரும் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர்கோயிலை கட்டுவோம்’ என்று அறிக்கை வெளியிடுகிறார்கள். பா.ஜ.க. அல்லது ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் உருவாக்கிய இந்துத்துவ பொது மனசாட்சியின் அடித்தளத்தில் நின்று கொண்டுதான் காங்கிரஸ் பேசுகிறது. பொருளாதாரம் உள்ளிட்ட இதர கொள்கைகளிலும் காங்கிரஸுக்கு மாறுபட்ட நிலைப்பாடு கிடையாது என்பதுடன் பா.ஜ.க. முன்வைக்கும் இந்துத்துவ அரசியல் விவகாரத்திலும் மாறுபட்ட கருத்து தங்களுக்கு கிடையாது என்பதை தெளிவுப்படுத்துகிறது அக்கட்சியின் ராமர்கோயில் நிலைப்பாடு. இது ஆபத்தானது. அதற்கு பதிலாக நாட்டை பாதுகாக்க மக்கள் சார்பு அரசியல் வளர்ந்து வரவேண்டும். அதைத்தான் எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்த தேர்தலில் முன்வைக்கிறது.

பா.ஜ.க.வையும், காங்கிரஸையும் அதிகாரத்திலிருந்து அகற்றவேண்டும் என்று கூறுகின்றீர்களா? அதற்கு உங்களிடம் உள்ள மாற்று என்ன?

பா.ஜ.க.வை அகற்ற வேண்டும். அதற்கு மாற்றாக காங்கிரஸ் கட்சியோ இதர கட்சிகளோ இருந்தாலும் சரி. இதில் காங்கிரஸ் மட்டுமே குற்றவாளிகள் இதர மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் நல்லவர்கள் என்றும் நாங்கள் கூறவில்லை. சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகளும் இதே நிலையில்தான் உள்ளனர். தலித்களிடமும் சிறுபான்மை மக்களிடமும் பாசிசத்தை சுட்டிக் காட்டி, இந்த கட்சிகளுக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்று கூறி இதர அரசியல் விவாதிக்கப்படாமல் போவதைத்தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். வெறுமனே பாசிசத்தை ஒழிக்கவேண்டும், பாசிசத்தை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என்று கூறி சிறுபான்மையினர், தலித்கள், விவசாயிகள் ஆகியோர் அவர்களின் உரிமைகளை குறித்து கேட்கக்கூடாது, அவர்களின் அரசியல் விவாதிக்கப்படக்கூடாது, என்றதொரு ஆபத்தான சூழலை நோக்கி தள்ளுகிறார்கள். இதனை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து இறக்குவது என்பது நாட்டின் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மட்டுமான கடமையல்ல. அதற்காக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் பாடுபடவேண்டும். எல்லோரும் அதற்காக தியாகத்தை செய்ய வேண்டும். சிறுபான்மையினர் மட்டுமே அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு மதச்சார்பற்ற கட்சிகளை வெற்றியடையச் செய்யவேண்டும் என்று கூறுவதைத்தான் எஸ்.டி.பி.ஐ. கேள்வி எழுப்புகிறது. மதச்சார்பற்ற கட்சிகள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பொது மனசாட்சியிலிருந்து அரசியல் பேசுவதற்கு பதிலாக சிறுபான்மையினர், தலித்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியலையும் விவாதிக்க வேண்டும் என்றுதான் எஸ்.டி.பி.ஐ. கூறுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் கட்டுப்பாட்டில் உள்ள பா.ஜ.க. அரசை அதிகாரத்திலிருந்து கீழே இறக்கவேண்டியது நாட்டின் சிறுபான்மையினர், தலித்களின் பொறுப்பு என்ற நிலையிலா நாட்டின் சூழல் உள்ளது?

அத்தகையதொரு உணர்வை நாட்டின் முஸ்லிம் சமுதாயத்தின் மீது திணிப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அதனை நாங்கள் திருத்துகிறோம். பாசிசத்தை எதிர்க்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. நாடு அபாயத்தை நோக்கி செல்கிறது என்றால் அதன் விளைவுகளை அனைவரும் அனுபவிக்க நேரிடும். ஒரு பிரிவினர் மட்டுமே அனைத்தையும் தியாகம் செய்யவேண்டும், பிறர் எதுவும் தியாகம் செய்ய தயாராகாமல் இருக்கவேண்டும் என்று கூறுவது சரியல்ல. நாடு ஆபத்தை சந்தித்தால் அதனை அனைவரும் ஒருங்கிணைந்து தடுக்கவேண்டும். அங்கு அனைவரது அரசியலும் விவாதிக்கப்படவேண்டும். எல்லோருடைய வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்படவேண்டும். சிறுபான்மையினர் மட்டுமன்றி, விவசாயிகளின் பிரச்சனைகள், தொழிலாளர்களின் பிரச்சனைகள் என அனைத்து பிரிவினர்களின் பிரச்சனைகளும் விவாதிக்கப்படவேண்டும்.

இந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது?

மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர  பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்சி போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் (அமமுக) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதர மாநிலங்களில் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. ஒருவேளை இதர கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம், இல்லையெனில் தனித்து போட்டியிடுவோம். நாங்கள் போட்டியிடும் இடங்களிலும், போட்டியிடாத இடங்களிலும் இந்த அரசியலை விவாதத்திற்கு வைக்கிறோம். சில இடங்களில் இந்த அரசியலின் பிரதிநிதிகளாக எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுகிறது. இதர இடங்களில் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு மத்தியில் இந்த அரசியல் விவாதிக்கப்படவேண்டும் என்ற உத்தேசத்துடன் நாடு முழுவதும் பிரச்சாரத்தை இந்த தேர்தலில் நடத்துவோம். இந்த தேர்தலில் நாங்கள் முன்வைப்பது போட்டியை மட்டுமல்ல.

எஸ்.டி.பி.ஐ. தேர்தலில் போட்டியிடும்போது மதச்சார்பற்ற வாக்குகள் பிரிந்து அது பா.ஜ.க.வுக்கு கூடுதல் பலனை தரும் அல்லவா?

நான் ஏற்கனவே கூறியதைப் போல, பா.ஜ.க.வை தோற்கடிக்கும் பொறுப்பு சிறுபான்மை யினருக்கோ, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கோ அல்லது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கோ மட்டும் கிடையாது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மதச் சார்பற்ற கட்சிகள் பரஸ்பரம் எதிர்த்துப் போட்டியிட்டன. மேற்கு வங்காளத்திலும் எதிர்த்து போட்டியிட்டன. பல மாநிலங்களில் பரஸ்பரம் எதிர்த்து போட்டியிடுகின்றார்கள்.

ஆனால், சிறுபான்மையினரிடம் ‘நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது. நீங்கள் வேறு எதுவும் சிந்திக்காமல் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று கூறுகிறார்கள். இதுவே ஒரு கபட நாடகமாகும். அனைத்து மதச் சார்பற்ற கட்சிகளும் அவர்களின் ஈகோக்களை ஒதுக்கி விட்டு ஒன்றாக இணைந்து இந்நாட்டை பாதுகாக்க முயற்சிக்கவேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். அத்தகையதொரு விசாலமான கூட்டணி நாட்டில் உருவானால் அதனை தோற்கடிக்கும் வகையிலான எந்தவொரு பணியையும் நாங்கள் செய்யமாட்டோம்.

பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அதன் அரசியலை முன்வைத்து, அதன் அரசியல் விவாதிக்கப்படுவதற்காக, அதன் பிரதிநிதிகளை போட்டியிட வைக்கும். சில பகுதிகளில் பா.ஜ.க. மட்டுமே வெற்றி பெறும் தொகுதிகள் உள்ளன. அத்தகைய பகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் சாத்தியமிருந்தால் அங்கும் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும். இதுதான் இந்த தேர்தலில் நாங்கள் கடைப்பிடிக்கும் ஒரு கொள்கையாகும். இது அனைத்து காலத்திற்குமான கொள்கை அல்ல. இது இந்த தேர்தலில் தற்காலிகமாக கடைப்பிடிக்கும் கொள்கை. எங்களுடைய பணிகளின் காரணமாக மதச் சார்பற்ற கட்சிகள் தோற்கும் ஒரு சூழல் உருவாகாது.

கேரளாவில் முஸ்லிம் லீக் பாரம்பரியமாக வெற்றிப் பெற்று வரும் இரண்டு மக்களவை தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடுகிறது.முஸ்லிம் லீக்கின் அரசியல் போதுமானதாக இல்லை என்பதாலா போட்டியிடுகிறீர்கள்?

முஸ்லிம் லீக் என்ற கட்சியின் அரசியலுக்கு அங்கு முக்கியத்துவம் கிடையாது. முஸ்லிம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய ஜனநாயக முன்னணிதான் அங்கு போட்டியிடுகிறது. அதாவது காங்கிரஸ் வரையும் கோட்டிற்கு அப்பால் முஸ்லிம் லீக்கால் சொந்தமாக எந்த நிலைப்பாடும் எடுக்க முடியாது. பொருளாதார கொள்கையாக இருந்தாலும், வெளிநாட்டுக்கொள்கையாக இருந்தாலும் , நாட்டின் வளர்ச்சியாக இருந்தாலும் காங்கிரஸிலிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டை முஸ்லிம் லீக் எடுத்ததாக நாம் அறியவில்லை. அதனால், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் எஸ்.டிபி.ஐ. போட்டியிடுவதைப் போலத்தான் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடுகிறோம். காரணம், அவர்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்தான் போட்டியிடுகின்றனர்.

கடந்த ஐந்தாண்டு நரேந்திரமோடி அரசின் செயல்பாடுகளை எவ்வாறு மதிப்பீடு செய்கின்றீர்கள்?

அனைத்து துறைகளிலும் நாட்டை பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ளது பா.ஜ.க. அரசு. நாட்டின் பெருமையை உலக நாடுகளுக்கு முன்னால் ஒழித்துக்கட்டும் பணிகளில் மோடி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் ஈடுபட்டது. ராஜதந்திரத்திற்கு பதிலாக அரசின் அணுகுமுறை வீதி பேச்சாக இருந்தது. பிரதமர் ஒரு கருத்தை கூறுகிறார், அமைச்சர்கள் இன்னொரு கருத்தை கூறுகின்றனர். இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை உலகம் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு இவர்களின் பேச்சுகளும் செயல்பாடுகளும் உள்ளன.

அறிவியல் உண்மைகள் அனைத்தையும் எள்ளி நகையாடினர். ஐதீகங்கள், புராணங்களின் பின்னால் சென்று ஏதோ ஒரு யுகத்தில் வாழும் சமூகமாக இந்திய மக்களை உலகின் முன்னால் காட்டும் ஒரு அணுகுமுறை பா.ஜ.க. முதல்வர்கள், அமைச்சர்களிடமிருந்து வெளிப்படுகிறது. பசுவின் பெயரால் மனிதர்களை படுகொலை செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் உச்சநிலையை அடைந்துள்ளது. இவையெல்லாம் நாட்டை ஒரு ஆபத்தான சூழலை நோக்கி அழைத்துச் செல்கின்றன. போர் நடக்காமலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரை தியாகம் செய்யும் நிலை கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டது. இதனை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூட ஒப்புக் கொண்டுள்ளார். நாட்டில் ஒரு கூட்டு பொறுப்புடைய அரசு இல்லாமல் போய்விட்டது. இது அனைத்து துறைகளிலும் அதன் தோல்வியை வெளியே கொண்டு வந்துள்ளது.

பொருளாதார இட ஒதுக்கீட்டில் கட்சியின் நிலைப்பாடு என்ன?

இட ஒதுக்கீடு என்பது நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அரசியல் சாசனம் வழங்கும் ஒரு உரிமையாகும். அது நாட்டில் பட்டினியை ஒழிக்கும் ஒரு திட்டமல்ல. அதனால்தான் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அது பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கானது. இதுநாள்வரை இட ஒதுக்கீடு என்ற கொள்கையையே எதிர்த்து வந்த சமூகம் தற்போது இடஒதுக்கீட்டின் சலுகையை பறிப்பதற்காக முயற்சிக்கிறது. வெளிப்படையாக பார்த்தால் இது அழகான ஒரு நிலைப்பாடாக தோன்றும். ஏழைகளுக்கு தானே கொடுக்கிறோம் என்பார்கள். ஆனால்,ஏழைகளை வலிமைப்படுத்த இதர திட்டங்களைத்தான் வகுக்கவேண்டுமே தவிர இட ஒதுக்கீடு அதற்கு தீர்வாகாது. காரணம், பொருளாதார நிலை மாறக்கூடியது. இன்றைய பணக்காரர் நாளை ஏழையாக மாறலாம். இன்றைய ஏழை நாளை பணக்காரராக மாறலாம். ஆனால், சாதிய மற்றும் பிற்படுத்தப்பட்ட நிலை என்பது ஒரு போதும் மாறக்கூடியதல்ல.

ஏழை மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். அதனை செய்வதற்கு பதிலாக இட ஒதுக்கீட்டை வழங்குவது ஆபத்தானது. அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மேலும், அரசியல் சாசனத்தின் பல அடிப்படை தத்துவங்களையும் மாற்ற முடியாது என்று நம்பும் ஒரு சமூகத்தின் முன்னால் அதனை மாற்றிக்காட்டவே பா.ஜ.க. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘அரசியல் சாசன தத்துவங்களை மாற்ற முடியும். அதனை பா.ஜ.க இன்று செய்து காட்டியுள்ளது’ என்று அக்கட்சியின் தலைவர்கள் தேசிய ஊடகங்களில் கூறினர். அறிந்தோ அறியாமலோ சி.பி.எம். உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சிகளும் இதற்கு ஆதரவளித்தது துரதிர்ஷ்டவசமானது. இந்திய அரசியல் சாசனத்தை அழிக்க பா.ஜ.க, சங்பரிவார் செய்யும் முயற்சிகளுக்கு இவர்களும் துணை போகின்றனர். இது இந்நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு இவர்கள் செய்த கொடிய துரோகமாகும். அதனை ஏழை மக்களுடனான நேசம் என்று கூறி நியாயப்படுத்த முடியாது.

நாங்கள் இந்த பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம். அதற்கு பதிலாக அவர்களை முன்னேற்றுவதற்கு இதர திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். இதனை பொருளாதார ரீதியான ஒதுக்கீடு என்று கூட அழைக்க இயலாது. இது ஒரு உயர்சாதி இடஒதுக்கீடாகும். இது நாட்டின் சமூக நீதிக்கும் எதிரானதாகும்.

பேட்டி: சித்தீக் காப்பன்

தமிழில்: செய்யது அலி

Comments are closed.