பாஜகவால் இந்தியாவிற்கு 12 லட்சம் கோடி இழப்பு: வீரப்ப மொய்லி

0

சரக்கு மற்றும் சேவை வரிக்கான நான்கு துணை மசோதாக்கள் மக்களைவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த GST வரி விதிப்பு வருகிற ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடன் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புது வருடம், புது சட்டம், புதிய இந்தியா” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த GST வரிவிதிப்பை முந்தைய காங்கிரஸ் அரசு நிறைவேற்ற முனைந்த போது அதனை அப்போது எதிர்கட்சியாக இருந்த பாஜக கடுமையாக எதிர்த்தது. இது குறித்து மக்களவையில், பாஜக வின் இந்த செயலால் இந்திய நாட்டிற்கு 12 லட்சம் கோடி ரூபாய்க்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

மேலும் பாஜக தற்போது கொண்டு வந்திருப்பது புரட்சிகரமான திட்டம் ஒன்றும் இல்லை என்றும் இது ஒரு சிறிய அடி தான் என்றும் அவர் கூறியுள்ளார். இன்னும் இந்த மசோதாக்களில் உள்ள பல குறைகளை சுட்டிக்காட்டிய மொய்லி, இதனை அமல்படுத்துவது என்பது பெரும் தொழில்நுட்ப சவால் என்றும் இதில் உள்ள லாபமீட்டு எதிர்ப்பு விதிகள் கொடுமையானது என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு GST மசோதாவை நிறைவேற்ற முயன்று 7 இல் இருந்து 8 வருடங்கள் ஆகிறது என்றும் அப்போது சில கட்சிகள் அவர்களுடைய சொந்த லாபத்திற்காக அந்த மசோதாவை நிறைவேற்ற தடை விதித்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தாமதத்தினால் இந்தியாவிற்கு வருடத்திற்கு சுமார் 1.5 லட்சம் கோடிகள் இழப்பு என்றும் மொத்தமாக 12 லட்சம்  கோடி ரூபாய்க்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இந்தகைய இழப்பீடை யார் சரி செய்வார் என்று கேள்வி எழுப்பிய மொய்லி, இவர்களின் இந்த அழிவு ஏற்படுத்தும் அரசியல் சூதாட்டத்தால் இந்த நாட்டிற்கு வர வேண்டிய பொருளாதார நன்மைகளை தடுத்துவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போதுள்ள இந்த GST அமைப்பில் அதிகப்பட்சமான வரிகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இன்னும் இதில் உள்ள சில விதிகள் பிற்போக்காக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதிகப்படியான கருப்பு பணம் புரளும் ரியல் எஸ்டேட் தொழில் இந்த GST வரிவிதிப்பின் கீழ் கொண்டு வரப்படாதது வருத்தமே என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.