பாஜக அரசில் ஒட்டு மொத்த இந்திய மக்களின் ஆதார் தகவல் 500 ரூபாய்க்கு விற்பனை

0

வெறும் 500 ரூபாய்க்கு ஒட்டு மொத்த இந்திய மக்களின் ஆதார் தகவல்களை வெறும் பத்தே நிமிடங்களில் பெறலாம் என்று தி டிரிபுன் செய்தி நிறுவனம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தங்களை ஆதார் திட்டத்தில் பதிவு செய்துள்ள இந்தியாவின் எந்த ஒரு குடிமகனின் தகவலையும் ஒருவாரால் பார்க்க முடியும் என்றும் இன்னும் கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் செலுத்தினால் எந்த ஒரு குடிமகனின் ஆதார் அட்டையை அச்சிடக்கூட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் ஆதார் தகவல்கள் கசிந்த போதும் கிளிப்பிள்ளை போல ஆதார் பாதுகாப்பானது என்று மட்டும் மீண்டும் மீண்டும் கூறி வரும் UIDAI கடந்த நவம்பரில் மாதத்திலும் ஆதார் மிகப் பாதுகாப்பானது என்றும் அது எந்த ஒரு தகவல் கசிவில் இருந்தும் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியது. இந்நிலையில் இந்த செய்தி இந்திய குடிமக்களின் தகவல்களை கையாளும் UIDAI தகுதி குறித்து அறிவிக்கும் வகையில் உள்ளது.

வெறும் 500 ரூபாயை, மோடியின் புகைப்படத்துடன் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் முழுப்பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்ட PayTm சேவை மூலம் குறிப்பிட்ட நபருக்கு செலுத்தினால் பத்தே நிமிடங்களில் அனைத்து இந்தியர்களின் ஆதார் தகவல்களை பெரும் சேவைக்கான மென்பொருளும் அதற்கான ID மற்றும் பாஸ்வோர்ட்களும் வழங்கப்படுகிறது. இன்னும் இந்த சட்டவிரோத சேவையை இதுவரை ஒரு லட்சம் நபர்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் தி டிரிபியுன் தெரிவித்துள்ளது. கூடுதல் கட்டணமாக செலுத்தப்படும் 300 ரூபாய்க்கு எந்த ஒரு நபரின் ஆதார் அட்டையை அச்சிடக்கூடிய மென்பொருளும் வழங்கப்படுகிறது என்று டிரிபியுன் தெரிவித்துள்ளது.

இது UIDAI அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டவுடன் அவர்கள் இது குறித்து தங்களின் பெரும் அதிர்ச்சியை தெரிவித்தோடு இது மிகப்பெரிய தேசிய அளவிலான பாதுகாப்பு அத்துமீறல் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் தாங்கள் இதனை உடனடியாக பெங்களூருவில் உள்ள தங்களது தொழில்நுட்ப ஆலோசகர்களிடம் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

சண்டிகார் பகுதி UIDAI யின் கூடுதல் டைரக்டர் ஜெனெரல் சஞ்சய் ஜிண்டால், டைரக்டர் ஜெனெரல் மற்றும் தன்னைத் தவிர வேறு எவருக்கும் ஆதார் விபரங்களை பார்க்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தங்களை தவிர்த்து வேறு எவருக்கு அந்த அனுமதி கிடைத்தாலும் அது சட்ட விரோதமானது என்றும் அது மிகப்பெரிய தேசிய பாதுகாப்பு எல்லை மீறல் என்று கூறியுள்ளார்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னதாக இந்த சட்ட விரோத சேவை தொடங்கப்பட்டதாகவும் இந்த சேவையை வழங்குபவர்கள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் Common Service Centers Scheme  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட கிராம அளவிலான நிறுவனங்களை (VLE) தங்கள் இலக்காக கொண்டுள்ளனர் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த CSCS ஆப்பரேட்டர்கள் இந்தியா முழுவதும் ஆதார் அட்டை உருவாகும் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். பின்னர் பாதுகாப்பு காரணங்களை கணக்கில் கொண்டு இவர்களிடம் இருந்து அந்த பணி மாற்றப்பட்டு அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளிடம் கடந்த வருடம் நவம்பர் மாதம் வழங்கப்பட்டது.

தற்போது இந்த சட்டவிரோத ஆதார் சேவையை நடத்தி வருபவர்கள் இந்த தகவல்களை பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் அரசு இணையதளம் மூலம் பெறுவதாக தெரியவந்துள்ளது. இது இவர்கள் தரும் மென்பொருள் aadhaar.rajsthaan.gov.in தளம் மூலம் ஆதார் தகவல்களை அணுகியதில் இருந்து தெரியவந்துள்ளது. ஆனால் இது குறித்து தற்போது எந்த முடிவிற்கும் வந்துவிட முடியாது என்றும் முறையான தொழில்நுட்ப விசாரணை நடைபெற்ற பிறகே இதன் விபரம் தெரியவரும் என்று சஞ்சய் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள Citizens Forum for Civil Liberties அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபால் கிருஷ்ணன் பாதுகாப்பு சோதனையில் ஆதார் தோல்வியுற்றுள்ளது என்று கூறியுள்ளார். “இந்த ஆதார் தகவல் கசிவு, ஆதார் திட்டம் தனியுரிமை பாதுகாப்பு சோதனையில் தோற்றுவிட்டதை தெரியப்படுத்துகின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த உலக வர்த்தக அமைப்பின் 11வது மாநாட்டில் இணய வர்த்தக பேரத்தில் அமேரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் இந்திய மக்களின் தகவல்களை இலவசமாக தரவேண்டும் என்று கோரினர். இதற்கு இந்தியா எழுத்து பூர்வமாக மறுப்பு தெரிவித்தது.” என்று கூரிய கோபால் கிருஷ்ணன், ஆனால் தற்போதையை இந்த தகவல் கசிவு இந்த விண்ணப்பத்தையும் அதன் மீதான எதிர்ப்பையும் அர்த்தமற்றதாக்கிவிட்டது என்றும் மாநில அரசுகள் உடனியாக தங்களை இதில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தாங்கள் UIDAI இடம் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தி திரிபுண் தரப்பில் இந்த ஆதார் தகவல்கள் வெறும் பத்து நிமிடங்களில் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கூற்றுப்படி, மதியம் 12:30 மணியளவில் டிரிபியுன் செய்தியாளர் அனாமிகா என்கிற பெயரில் ஒருவரை வாட்ஸ்அப் செயலி மூலம் 7610063464 எண்ணில் தொடர்பு கொண்டு ஆதார் தகவல்களுக்கான அனுமதி கோரியுள்ளார். தன்னை அணில் குமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர் 12:32 இற்கு செய்தியாளரை தொடர்பு கொண்டு அவரது பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை கேட்டு 500 ரூபாயை அவரது கணக்கில் PayTm மூலம் செலுத்துமாறு கூறியுள்ளார். 12:35 மணியளவில் செய்தியாளர் aadharjalandhar@gmail.com என்கிற பெயரில் மின்னஞ்சல் முகவரி உருவாக்கி ஒரு தொலைபேசி எண்ணையும் ஆதார் ஏஜண்டிற்கு அனுப்பியுள்ளார். 12:48 மணியளவில் அவர் கேட்ட 500 ரூபாய் பணமும் PayTm செயலி மூலம் செலுத்தப்பட 12:49 மணிக்கு “You have been enrolled as Enrolment Agency Administrator for ‘CSC SPV’. Your Enrolment Agency Administrator ID is ‘Anamika_6677’” என்ற செய்தியாளருக்கு ஆதார் தகவல்களை அணுகும் அனுமதி கிடைத்தது குறித்த செய்தி மின்னஞ்சலில் கிடைத்துள்ளது. மேலும் இதற்கான பாஸ்வோர்ட் தனி மின்னஞ்சலில் அனுப்பப்படும் என்று கூறப்பட்டு அதுவும் பின்னர் அனுப்பப்பட்டுள்ளது. 12:50 மணியளவில் தங்களை ஆதாரில் இணைத்துக் கொண்ட இந்திய குடிமக்கள் அனைவரின் தகவலும் செய்தியாளருக்கு காணக் கிடைத்துள்ளதாக தி டிரிபியுன் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த செய்தியாளர் அணில் குமார் என்ற நபரை மீண்டும் அணுகி ஆதார் அட்டையை அச்சிடும் சேவை வேண்டும் என கேட்க 8107888008 என்கிற எண்ணுக்கு 300 ரூபாய் PayTm மூலமாக அனுப்பும்படி கூறப்பட்டுள்ளது. அதுவும் அனுப்பப்படவே 7976243548 எண்ணில் இருந்து ராஜ் என்ற நபர் தொடர்பு கொண்டு செய்தியாளரின் கணினியில் Team Viewer மென்பொருள் மூலமாக ஆதார் அச்சிடும் மென்பொருளை நிறுவியுள்ளார். அந்த மென்பொருள் நிறுவப்பட்டதும் அது தொடர்பான அனைத்து கோப்புகளையும் அந்த நபர் அழித்துவிட்டதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஜலந்தரில் வேறொருவர் வங்கிக் கணக்கில் இருந்து போலியான ஆதார் அட்டை மூலம் பணம் எடுத்ததாக கூறி ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. தற்போது இந்த தகவல்கள் அனைத்தும் 500 ரூபாய்க்கு விற்பனைக்கு கிடைக்க போலியான பெயர்களில் வங்கிக் கணக்கு தொடங்குவதும் மொபைல் சிம் கார்டுகள் பெறுவதும் மிக எளிதாகிவிடும்.

தற்போதைய இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து செய்தி வெளியானதும் பல ஆரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை மத்திய அரசிற்கு தெரிவித்துள்ளனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சீதாராம் எச்சூரி, “ஆதாரை கட்டாயமாக்குதல் மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கும் படி மோடி அரசு கூறிவருவதன் ஆபத்து கண்முன்னே காணக் கிடைகிறது. இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த இதைவிட வேறு ஆதாரங்கள் வேண்டுமா?” என்று கேள்வி எழுபியுள்ளார்.

ரந்தீப் சுர்ஜவாலா, மேலும் ஒரு தகவல் கசிவு என்று இதனை கூறி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடிமகனின் தகவல்கள் ஹாக்கர்களிடம் கிடைக்கும் நிலையில் தனியுரிமையை கேலி செய்யும் மோடி அரசோ இதனால் சற்றும் கவலை கொள்ளாமல் உள்ளது என்று கூறியுள்ளார்.

பாஜக ஆட்சியில் இந்திய குடிமக்களின் தகவலகளை திருட வெறும் 500 ரூபாய் போதுமானதாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

ஆதார் தகவலை பயன்படுத்தி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிலையில் இப்படி ஒரு தகவல் கசிவு மூலம் ஆதாரில் தங்களை இணைத்துக் கொண்ட இந்திய மக்களுக்கு வேறென்னென்ன கஷ்டங்கள் காத்திருக்கின்றனவோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

ஆதார் குறித்த மேலும் பல செய்திகள் 2018 ஜனவரி புதியவிடியலில் ஆதார் களவாணிகள் என்ற கட்டுரையில் உள்ளது.

Comments are closed.