பாஜக தலைவர்கள் மீதான உத்திர பிரதேச கலவர வழக்குகளை திரும்பப் பெரும் யோகி அரசு

0

தன் மீதான குற்ற வழக்குகளை யோகி அதித்யநாத் தானே ரத்து செய்த நிலையில் தற்போது பாஜக தலைவர்கள் மீதான கலவர வழக்குகளையும் யோகி அரசு ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் 60 பேர் கொலை செய்யப்பட்ட 2013  முசப்பர்நகர் கலவர வழக்கில் மக்களின் உணர்சிகளை தூண்டும் விதத்தில் பேசியவர்கள் மற்றும் கலவரம் நிகழ்த்திய பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய யோகி அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு முசப்பநகர் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி, இந்த வழக்குகளில் பாஜக தலைவர்களின் நிலை குறித்து விளக்கம் கேட்டுள்ளது.

முன்னதாக ஆட்சியில் இருந்த அகிலேஷ் யாதவ் அரசு, பாஜக மூத்த தலைவர்களான மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியன், பாஜக எம்எல்ஏ உமேஷ் மாலிக் மற்றும் சுரேஷ் ரானா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது. இவர்கள் அரசு பணியாளர்களை தங்களின் பணிகளை செய்வதில் இருந்து தடுத்ததாகவும் தடை உத்தரவை மீறியதற்காகவும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுளளது.

இது குறித்து கருத்து தெரிவித்த முசாப்பர்நகரை சேர்ந்த மூத்த அரசு அதிகாரி சியாராம் மொஹ்ரே, “எங்களுக்கு ஒன்பது வழக்குகளின் எண்கள் குறிப்பிடப்பட்டு அவற்றை குறித்த தகவல்களை தருமாறு கேட்கப்பட்டுள்ளது. குறிப்பட்ட அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அது விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்கின்றோம். அதன் பின் அந்த தகவல்கள் லக்னோவிற்கு அனுப்பப்படும்.” என்று கூறியுள்ளார்.

இந்தக் கடிதம் அரசியல்வாதிகள் மீதான 20000 வழக்குகளை ரத்து செய்யக் கோரிய சட்டத்தில் ஆளுநர் ராம் நாயக் கையெழுத்திடுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் அனுப்பபட்டுள்ளது. மேலும் இந்த வழக்குகள் மோசமான வழக்குகள் அல்ல என்றும் அவை பல நாட்களாக நிலுவையில் உள்ளது என்றும் அதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவிக்கையில், அதித்யநாத் கூறுவது போன்று இவை சாதாரண வழக்குகளா அல்லது மோசமான வழக்குகளா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த கடிதம் குறித்து தகவல் எதையும் தெரிவிக்க லக்னோ அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்த உத்திர பிரதேச உள்துறை செயலாளர் மற்றும் மாநில காவல்துறை பொறுப்பாளர் அர்விந்த் குமார், இந்த கடிதத்தில் வழக்கத்திற்கு மாறாக எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். “ஒருவர் தன் மீதான வழக்கு போலியானது என்று கருதி அது திரும்பப் பெறவேண்டும் என்று கருதி விண்ணப்பம் அளித்தால் அவரது விண்ணப்பத்தை மாநில அரசு மாவட்ட நிர்வாதிற்கு அனுப்பி அது தொடர்பாக பதிலை பெரும்.” என்றும் இது மிகவும் கடுமையான செயல்முறை என்றும் அரசு என்ன நினைத்தாலும் இறுதி முடிவு நீதிமன்றத்தினுடையது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யோகி அரசின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள உமேஷ் மாலிக், தன் மீதான வழக்கு மற்றும் மேலும் பல பாஜக தலைவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் லாபம் கருதி பதிவு செய்யப்பட்டது என்றும் அப்பாவி மக்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது என்றும் இந்த வழக்குகள் போலியானதா என்று விசாரித்து அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று அரசிற்கு தான் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.