பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலை தடுக்க காஷ்மீர் முழுவதும் குண்டு வீச வேண்டும்: தொகாடியா

0

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவின் தொகாடியா, காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க காஷ்மீர் முழுவதும் குண்டு வீச வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “உரி மற்றும் குப்வாரா பகுதியில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல்களை தடுக்க காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் குண்டுகளை வீச வேண்டும். இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கல் எறிதல் ஆகியவற்றை போர் செயலாக கருதி, அப்பகுதிகளில் அரசு குண்டு வீச வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவராக கருதப்படும் தொகாடியா, இராணுவத்தின் மீது போர் தொடுப்பவர்களை அரசு ஒடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கஷ்மீர் மக்கள் மற்றும் இராணுவத்தினர் இடையேயான மோதல் கஷ்மீரில் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் மீது எந்தவித கருணையும் காட்டாமல் குண்டு வீச வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பிற மாநிலங்களுக்குப் பரவி நாட்டை பிளவுபடுத்திவிடுவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

ஜம்மு கஷ்மீர் முன்னேற்றத்திற்கு என்று 2015 ஆம் ஆண்டு மோடியால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிதியான ரூபாய் 80000 கோடி குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு பதிலாக இந்த நிதியை விவசாயிகளுக்கு தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.