பாபரி மசூதி இடிப்பு வழக்கு: சதித்திட்டம் தீட்டியதற்காக விசாரிக்கப்படும் பாஜக தலைவர்கள்

0

பாஜக வின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பாபரி மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டியதற்காக விசாரிக்கப்பட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையை விரைந்து நடத்தி இரண்டு வருடங்களில் தீர்ப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மீது வன்முறையை தூண்டும் விதத்தில் உரையாற்றி லட்சக்கணக்கான வலது சாரி இந்துக்களை பழமை வாய்ந்த பாபரி மசூதியை இடிக்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ரேபரேலியில் நடைபெற்றது.

தற்போது இந்த பாஜக தலைவர்கள் மீதான இந்த வழக்கு விசாரணை லக்னோவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பாபரி மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய இருபது பேர் மீதான தனி வழக்குகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த இரண்டு விசாரணைகளையும் இணைத்து அதற்கான தீர்ப்பை இரண்டு வருடங்களுக்குள் வழங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பின் போது உத்திர பிரதேச முதல்வராக இருந்த கல்யான் சிங் தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநராக உள்ளார். அவர் பதவியில் இருக்கும் போது அவரை விசாரிக்கக் இயலாத காரணத்தினால் அவர் மீதான விசாரணை அவரது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு தொடங்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாபர் மசூதி அருகே வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய பாஜக தலைவர்கள் மிக மோசமான திட்டத்துடன் செயல்பட்டதற்கான ஆதாரங்கள், தங்களிடம் இருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. மசூதி இடிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் அத்வானி உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் சேர்ந்து கூடி பேசி மறுநாள் பாபர் மசூதியை இடிக்க திட்டம் தீட்டினர், இதன் மூலம் மசூதி இடிப்பதற்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளது என்று அது தெரிவித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு அலஹாபாத் உயர் நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டியது குறித்த சி.பி.ஐ. யின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்தது. தற்போது இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது சி.பி.ஐ.

லக்னோவில் வழக்குகளை ஒன்று சேர்த்து விசாரிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவை அத்வானி தரப்பு வழக்கறிஞர்கள், ஒவ்வொரு வழக்கும் ஓவ்வொரு கட்டத்தில் உள்ளன என்றும் இது பல பேர்களை உள்ளடக்கிய வழக்குகள் என்று கூறியும் அந்த முடிவை எதிர்த்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 2000 த்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.