பாபரி மஸ்ஜித்:ஏமாற்றத்தின் 23 ஆண்டுகள்!

0

 

 

ஓ.எம்.ஏ.ஸலாம்(தேசிய செயற்குழு உறுப்பினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா)

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றான பாபரி மஸ்ஜிதின் இரத்த சாட்சியத்திற்கு அரசியல், சமூக ரீதியான பல முக்கியத்துவம் வாய்ந்த காரணிகள் உண்டு.இரத்தம் சிந்திய தொடர் வன்முறைகள் மூலம் பாபரி மஸ்ஜிதையும், அதன் மூலம் இந்தியாவின் பாரம்பரியத்தை இடித்து தள்ளியவர்கள் இன்று நாட்டின் அதிகாரத்தை கையாளுகின்றனர்.நிரபராதிகளின் இரத்தத்தின் மூலம் ஹோலியை கொண்டாடிய துயரங்களுக்கு வாய்ப்பை உருவாக்கிய ரதயாத்திரையின் நாயகன் எல்.கே.அத்வானி, அரசியலில் செல்லாக்காசாக ஆக்கப்பட்டபோதிலும், அத்வானியை விட தீவிர இந்துத்துவத்திற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய நரேந்திரமோடிதான் இந்தியாவின் பிரதமராக உள்ளார்.பாபரி மஸ்ஜிதை நினைவலைகளில் எல்லாம் கொடிய சதிகள்தாம் நிறைந்துள்ளன.

கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இந்தியா என்ற பூங்காவனத்தில் விஷ வித்துக்களை விதைத்த இந்துத்துவத்தின் எழுச்சி, இந்தியாவின் ஆன்மாவோடு பாபரிக்கும் ரணத்தை ஏற்படுத்தியது.1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி நள்ளிரவில் மஸ்ஜிதிற்குள் சிலையை வைத்தது முதல் கொடிய சதிகளின் தேரோட்டம் துவங்குகிறது.செய்தியை கேட்ட உடனே மஸ்ஜிதில் இருந்து சிலைகளை அகற்ற பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவிடுமளவிற்கு இந்தியாவின் ஜனநாயக-மதச்சார்பற்ற விழுமியங்கள் அன்று உயிர்ப்போடு இருந்தது.அதேவேளையில், நேருவின் உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு இந்துத்துவ வகுப்புவாதமும் வலுவாக இருந்தது.

நேரு அன்றைய உ.பி. முதல்வர் கோவிந்த பலாஹ் பந்துவிற்கு சிலையை அகற்றவேண்டும் என்று உத்தரவிட்டு எழுதிய அவசரக் கடிதத்தில் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்:”மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்”.நேரு கூறியது முற்றிலும் சரியே.அந்த ஆபத்திலிருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற நேருவாலோ, அவரது கட்சியாலோ இயலவில்லை.மேலும், நேருவின் வழித்தோன்றல்கள் அபாயகரமான புதிய முயற்சிகளுக்கு கடி வாளம் பிடித்தனர்.உயர்சாதியினர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் சங்க்பரிவாரத்திற்கு எக்காலத்திலும் துருப்புச்சீட்டாக அமைந்தது வன்முறையின் அடிப்படையிலான இந்துத்துவ உணர்வும், பிற மதங்களின் மீதான துவேசமும்.குறிப்பாக முஸ்லிம்கள் மீதான துவேசம்.இந்து தர்மத்துடனோ, அதன் நம்பிக்கைகளுடனோ பிடிப்புள்ளதாக சங்க்பரிவாரம் இதுவரை நிரூபிக்கவில்லை.பாபரி மஸ்ஜித் அவர்களுக்கு நல்லதொரு இரையாக மாறியது.

தொடர்ந்து பொய்களை பரப்புரைச் செய்தும், கலவரங்களை ஏற்படுத்தியும், ரதயாத்திரைகளை நடத்தியும் முன்னேறியது இந்துத்துவாவினர் என்றால், அரசும், மதச்சார்பற்ற கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவோ, மெளனமான பார்வையாளராகவோ இருந்து வந்தனர்.பிரதமரின் உத்தரவு வந்த பிறகும் பாபரி மஸ்ஜிதில் இருந்து சிலைகள் அகற்றப்படவில்லை.அங்கே முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, வக்ஃப் நிலத்தில் பூஜைக்கான வசதியும் செய்து தரப்பட்டது.

மிதவாத இந்துத்துவம் கைவசம் இருப்பது நல்லதுதான் என்று தவறாக புரிந்துகொண்ட ராஜீவ் காந்தி, 1986-ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜிதின் வாசல்களை பூஜைக்காக திறந்துவிட்டார்.அதன்பிறகு நடந்த தொடர் கலவரங்களும்,இந்திய அரசியல் சாசனத்திற்கும், சட்டங்களுக்கும் சவால் விடுத்து ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் சேர்ந்து பாபரி மஸ்ஜிதை முற்றிலுமாக இடித்துத்தள்ளியது வரலாறு.அங்கே தகர்க்கப்பட்டது ஒரு கட்டிடம் மட்டுமல்ல.இந்தியாவின் மதச்சார்பின்மை, அரசு மற்றும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையும்தான் தகர்க்கப்பட்டது.அதிகாரிகளின் வாக்குறுதிகளும், நீதிமன்றங்களின் எச்சரிக்கைகளும் வீணாயின.பாபரி மஸ்ஜித் அது நிலைப்பெற்றிருந்த இடத்திலேயே புனர் நிர்மாணிக்கப்படும் என்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவின் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல், கொடிய சதிகளின் ஏடுகளில் முக்கிய அத்தியாயமாக உள்ளது.

நாட்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் எல்லாம் சிறையில் தள்ளப்பட்டன.மஸ்ஜிதை இடித்தவர்கள் யார்? என்ற கேள்விக்கு அன்று வாழ்ந்த சின்னஞ்சிறு குழந்தை உள்பட மனநிலை பாதிக்காத அனைத்து இந்தியர்களுக்கு பதில் தெரிந்திருந்தது.எனினும், சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய தீவிரதாக்குதலில் ஈடுபட்ட எந்தவொரு குற்றவாளியும் விசாரணைச் செய்யப்படவில்லை, சிறையிலும் அடைக்கப்படவில்லை.

ஆறு மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்ட லிபர்ஹான் கமிஷன், 17 வருடங்களை எடுத்துக்கொண்டு இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.அதுவோ, இதுவரை வெளிச்சம் காணாமல் இருண்ட பீரோவுக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறது.வழக்கை விசாரித்த சி.பி.ஐயோ சங்க்பரிவார் தலைவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவதில் ஆர்வம் காட்டியது.வக்ஃப் நிலம் தொடர்பான நில மூல உரிமைக் குறித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் தீர்ப்போ இந்திய நீதித்துறை வரலாற்றில் விசித்திரமானதாக அமைந்தது.உண்மையான உரிமையாளருக்கும், வன்முறையின் மூலம் நிலத்தை அபகரித்தவனுக்கும், பார்வையாளனாக நின்றவனுக்கும் நிலத்தை சம அளவில் பகிர்ந்து அளித்தது.

ஒரு ஜனநாயகதேசத்தில் வாழும் குடிமக்களுக்கு தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற உணர்வு, நாட்டின் இருப்போடு தொடர்புடையது.’நாங்கள் பாதுகாப்பாக இல்லை.தற்போதைய கட்டமைப்புகளில் நீதி கிடைக்காது.’ போன்ற சிந்தனைகள் மக்களின் நிம்மதியை இழக்கச் செய்துவிடும்.இந்த பாதுகாப்பற்ற சூழல் நாட்டை பலகீனப்படுத்திவிடும்.பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நாட்டு நலனை முன் நிறுத்தி செயல்பட எந்த அரசால்தான் முடிந்துள்ளது?என்பது மீளாய்வுச் செய்யப்படவேண்டிய விஷயம்.இதர கட்டமைப்புகளெல்லாம் தோல்வியை தழுவியபோது மக்களின் நம்பிக்கை வைத்திருப்பது நீதிமன்றங்களின் மீது.பாபரி விவகாரத்தில் அதுவும் தோல்வியையே தழுவியதுதான் துயரமானது.

நாட்டின் சுதந்திரமும், ஜனநாயக விழுமியங்களும் நீடிக்கவேண்டும், ஒரு உன்னதமான குடிமக்களை கொண்ட சமூகம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதை ஆத்மார்த்தமாக விரும்பும் எவரும் இச்சூழலை மிக கவனமாக அணுகவேண்டியதுள்ளது.காரணம், ஏதோ ஒரு உரையைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் எதேச்சையாக இடித்து தள்ளியதல்ல பாபரி மஸ்ஜித்.1984-ஆம் ஆண்டு சீக்கிய படுகொலையைப் போலவே மிகவும் திட்டம் தீட்டி நடத்தப்பட்ட சம்பவம்.அச்சுறுத்தி கீழ்படியவைத்து அடிமைகளாக மாற்றும் பிராமண ஆதிக்க சங்க்பரிவார செயல்திட்டத்தின் நீண்டகால திட்டங்களில் ஒரு அத்தியாயம் மட்டுமே பாபரி மஸ்ஜித் இடிப்பு.அந்த பட்டியல் நீண்டது.காந்தி படுகொலையும், பாபரி இடிப்பும், குஜராத் இனப்படுகொலையும் அந்த செயல்திட்டங்களில் அடங்கியவை.இந்துத்துவ மயமாக்கலும், காவிமயமாக்கலும் நடந்துகொண்டிருக்கிறது.இனியும் திறக்கப்படாத மாபெரும் துயரங்களின் அத்தியாயங்கள் என்னவெல்லாம் உள்ளனவோ?

பாபரிக்கு பிந்தைய இந்திய முஸ்லிம்களின் வரலாறு மிகவும் நிராசையானது.ஒன்றாக இணைந்து விடுதலைக்காகவும், சக்திபடுத்துதலுக்காகவும் போராடவேண்டிய சமூகம், மேலும், மேலும் பிளவுப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.மத அமைப்புகள் வணக்கவழிபாடுகள் தொடர்பான கருத்துவேறுபாடுகளில் கூடுதலாக வேறுபட்டுக்கொண்டிருக்கின்றன.அவை சமுதாயத்திற்கு முன்னேற்றத்திற்கான பாதையை காட்டுவதில் முற்றிலும் தோல்வியை சந்தித்துள்ளன.சமுதாயம் மேலும் மேலும் ஒடுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டும் வருவதை அவர்கள் கண்டும் காணாததுபோல் உள்ளனர்.ஆட்சியாளர்களுடனான தொடர்பும், அது மூலம் கிடைக்கும் ஆதாயங்களும் அவர்களுக்கு உயிர்மூச்சாக மாறிவிட்டது.ஒரு பள்ளிக்கூடம் நடத்துவதற்கு நிலம் கிடைத்தால், பிரதமர் கட்டி அணைத்தால் அவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.அதன் மூலம் அவர்களது கொள்கைகள் வீரியத்தை இழந்துவிடும்.எதிர்ப்புகளின் சுரம் மிதப்படுத்தப்படும்.நீதிக்கான குரல்கள் கூட அவர்களின் காதுகளில் நங்கூரமாக மாறிவிடுகிறது.நமது அடையாளங்கள், உரிமைகள், வாய்ப்புகள், சவால்கள் குறித்த விழிப்புணர்வே கண்ணியமான வாழ்வுக்கு அச்சாணி.அதனை இழக்கும் சமுதாயம் கண்ணியத்தை இழந்துவிடும்.மோடியை புகழ்த்தியும், போராட்ட வரலாறுகளை மறந்தும் பெருநாள் குத்பாக்களை நிகழ்த்துபவர்கள், புதிய அடிமைத்துவ இலக்கியங்களை எழுதுகிறார்கள்.அதற்கு முக்கிய ஊடகங்களிலெல்லாம் ஸ்பெஷல் கவரேஜ் கிடைக்கும்போது பிரச்சாரகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துவிடுகின்றார்கள்.அடிமைகள் தங்களை பிணைத்திருக்கும் சங்கிலிகள் மின்னும்போது அடையும் மகிழ்ச்சியைப் போல.

விழிப்புணர்வு நமக்கு மங்காத நினைவுகளை சமர்ப்பிக்கிறது.மக்கள் தங்களது அபிமான வெற்றிகளை மறக்காமல் பாதுகாக்கின்றனர்.அந்த வெற்றிகளை நீடிக்கச் செய்யவும், மேலும் அதிகரிக்கவும், துயரங்களையும் அவர்கள் நினைவுக் கூர்கின்றார்கள்.அதில் பாடங்களை கற்றுக்கொள்ளவும், மீண்டும் அந்த துயரங்கள் நிகழாமல் இருக்கவும்தான்.துயரங்களை மறந்துவிடுபவர்கள், அவை மீண்டும் நிகழுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துகின்றார்கள்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு, ஒருபோதும் மறக்கமுடியாத ஒரு மாபெரும் துயரமாகும்.ஒரு நாட்டையும், அதன் விழுமியங்களையும் மீட்டெடுப்பதற்கு நம்மை தயார்படுத்தும் நினைவு;மனித உள்ளங்களில் நேசமும், நல்லிணக்கமும், உரிமையை மீட்டெடுப்பதற்கான உணர்வை அலங்கரிக்கும் நினைவு;தீமைகளுக்கு எதிராக போராட்ட வீரியத்தை பகரும் நினைவு;பாபரி மஸ்ஜித், அது நிலைப் பெற்றிருந்த இடத்திலேயே புனர் நிர்மாணிக்கப்பட்டால் மட்டுமே தேசத்தின்  உடலுக்கு ஏற்பட்ட காயங்கள் உலரும் என்பதை அதிகாரிகளை தைரியப்படுத்தும் நினைவு.

நினைவுகூர்வோம்!நினைவில் நிறுத்துவதே போராட்டத்தின் முதல் நிலை!

Comments are closed.