பாபரி மஸ்ஜித்தை இடித்த இடத்தில் கட்டக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம்

0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 23.11.2015 அன்று திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில்  மாநில தலைவர் M.முகம்மது இஸ்மாயீல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய தலைவர் K.M.ஷரீஃப் அவர்கள் கலந்து கொண்டார்கள். இச்செயற்குழுவில்  கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:

தீர்மானம் 1 : பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் – தேசிய அளவிலான பிரச்சாரம்

நானூறு ஆண்டுகால வரலாற்று பாரம்பரியமும் முஸ்லிம்களின் வழிபாட்டு தளமுமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 23 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் அந்த மாபாதக செயலில் ஈடுபட்டவர்கள் இன்று அரசாங்க உயர் பதவிகளை அலங்கரிக்கும் அவலம் நடந்துள்ளது. பாபரி மஸ்ஜித் குறித்த விழிப்புணர்வை மக்கள் மன்றத்தில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த வருடம் டிசம்பர் 1 முதல் 10 வரை தேசிய அளவிலான பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் திட்டமிட்டுள்ளது.

இதில் போஸ்டர் பிரச்சாரம், துண்டுபிரசுரம் விநியோகித்தல், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் என பல்வேறு வகையிலான பிரச்சாரங்கள் நடைபெறும். பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட  தினமான டிசம்பர் 6 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டக் கோரியும், லிபரஹான் கமிஷன் அறிக்கையில் குற்றவாளிகளாக கூறப்பட்டுள்ளவர்களை தண்டிக்க வலியுறுத்தியும் “பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்”  என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தவும் தீர்மானித்துள்ளது.

பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டிக் கொடுப்பதன் மூலம்தான் நாட்டின் மதச்சார்பின்மையையும், இறையாண்மையையும் நிலைநாட்ட முடியும் என்பதை உணர்ந்து அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2 : திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு , வேலூரில் திப்பு சுல்தான் பொதுக்கூட்டத்திற்கு தமிழக அரசு விதித்த தடை கவலை அளிக்கிறது

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை எழுதும் போது அதன் முதல் பக்கங்களில் இடம் பிடிக்கும் ‘மைசூர் வேங்கை’ தீரன் திப்பு சுல்தானை குறித்து தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வரும் இந்துத்துவ சக்திகளை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சுதந்திர போராட்டத்தின் போது சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்தவர்கள் மற்றும் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு திப்பு சுல்தானின் பெயர் நடுக்கத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துவது நியாயம் தான்.

ஆனால் இந்த சிறு கூட்டத்தினரின் அச்சுறுத்தலுக்கு செவிசாய்த்து திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களை தமிழகத்தில் தடை செய்திருப்பது மற்றும் வேலூரில் திப்பு சுல்தான் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருப்பது  கவலை அளிக்கிறது. தமிழக அரசு மதவாத சக்திகளுக்கு துனைபோகின்றதோ ? என்ற  கேள்வியை மக்கள் மன்றத்தில் எழச் செய்துள்ளது.

சுதந்திர போராட்ட விடிவெள்ளி திப்புவின் வரலாற்றை அனைவருக்கும் அறிய செய்வதும் அதன் ஓர் அங்கமாக திகழும் அவரின் பிறந்தநாளை கொண்டாட அனுமதி வழங்குவதும் அரசுகளின் கடமையாகும். தனது தந்தை ஹைதர் அலீயின் படையில் படைத்தளபதியாக இருந்த திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை பொலியலூர் போரில் தோற்கடித்தது இதே தமிழக மண்ணில் என்பதால்  தமிழக அரசுக்கு இதில் அதிகப்படியான கடமையும் உள்ளது.

எனவே ஆங்கிலேய ஏகாதிபத்திய சக்திகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வீரமரணம் அடைந்திட்ட போராளியும், இந்திய சுதந்திர போராட்டத்தின் விடிவெள்ளியும், மதச்சார்பின்மையின் முன்னோடியுமான தீரன் திப்பு சுல்தான் அவர்களின்  வரலாற்றை திரித்துக் கூறிக் கொண்டிருக்கும் மதவாத இந்துத்துவ சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கவும்,  திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி அவர்களுக்கு மணிமண்டபம் கட்டும் பணியை துரிதப்படுத்தவும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

மேலும் திப்பு சுல்தானின் உண்மை வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லிடும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியாவின் சார்பாக திப்பு சுல்தான் குறித்த மாபெரும் கருத்தரங்கம் டிசம்பர் 10 அன்று சென்னையில் நடத்தவும், டிசம்பர் மாதத்தில் தொடர்  பிரச்சாரம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தவும் இச்செயற்குழு தீர்மானித்துள்ளது.

தீர்மானம் 3 : மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு –  தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்

தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் –ன் தலைவர்களும், செயல் வீரர்களும் நேரடியாக  களத்திற்கு சென்று தேவையான நிவாரண மற்றும் மீட்பு பணிகளை  தன்னால் இயன்ற அளவில்  தொடர்ந்து செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழைகால நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதுபோல் சேத மடைந்த வீடுகளுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினர்க்கும் தகுந்த நிவாரணத் தொகையை வழங்க வேண்டுமெனவும் இச்செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4 : தமிழகத்தில் ஐ.எஸ். பெயர்ப் பட்டியலை இல.கணேசன் வெளியிட வேண்டும்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. இதுப்போன்ற ஐ.எஸ். இயக்கத்தினரின் செயல்பாடுகள் எந்த சமூகத்திற்கும் எவ்வித பலனையும் வழங்காது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.

அதே சமயத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இந்தியாவில் மக்களை பிளவுபடுத்தும் வேலைகளை சிலர் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ‘தமிழகத்தில் 150 நபர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் இருப்பதாக’ பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன் கூறியிருப்பது இந்த ரகத்தை சேர்ந்ததுதான். இல.கணேசனின் இக்கூற்றை வன்மையாக கண்டிப்பதுடன் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் வேலைகளை பா.ஜ.க.வினர் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் தமிழகத்தில் ஐ.எஸ் இயக்கத்தில் இருக்கும் 150 நபர்களின் பெயர்களை  வெளியிட வேண்டும் இல்லாதபட்சத்தில் அமைதிப்பூங்காவான தமிழகத்தின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் கருத்து வெளியிட்டுள்ள  இல.கணேசன் மீது உரிய வழக்கினை பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

 

இப்படிக்கு

M.முஹம்மது சேக் அன்சாரி

மாநில பொதுச் செயலாளர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

 

Comments are closed.