பாபரி மஸ்ஜித்: தேவை நீதி!

0

பாபரி மஸ்ஜித்: தேவை நீதி!

பாபரி மஸ்ஜித் இரண்டு நபர்கள் இடையேயான சச்சரவு அல்ல. மதச்சார்பற்ற இந்தியாவின் மதவாத பாசிஸ்டுகளால் தகர்க்கப்பட்ட வரலாற்றுச் சின்னம். பாபரி மஸ்ஜித்தின் இடிப்பு மூலம் இந்தியாவின் அரசியல் சாசனத்தை சங்பரிவார பாசிஸ்டுகள் தகர்த்தெறிந்தனர். இந்த வழக்கில் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியது. மத்தியஸ்தம் என்பது பண்டைய காலம் தொட்டே நடந்து வரும் ஒரு நடைமுறையாகும். ஆனால், அது நாட்டின் நீதிக்கட்டமைப்புக்கு சவால் விடுக்கும் வகையிலோ, சட்டம்- மற்றும் நீதியின் அனைத்து வரம்புகளையும், தகர்த்தவர்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையிலோ அமைந்து விடக்கூடாது. பாபரி மஸ்ஜித்திற்கான தங்கள் உரிமையை முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அயோத்திக்கு வெளியில் மஸ்ஜித் கட்டுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் ரவிசங்கரை மத்தியஸ்தர் குழுவில் நியமித்ததன் மூலம் மத்தியஸ்தம் நியாயமாக நடக்கும் என்பதை எதிர்பார்க்க முடியுமா?

பாபரி மஸ்ஜித் வழக்கு நில உரிமையியல் வழக்காக மாறிவிட்டது. பாபரி ஒரு வரலாற்று உண்மையாகும். ராமன் என்பது ஐதீகம். ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்து விட்டு மஸ்ஜித்தை கட்டியதாக இதுவரை எந்த ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை. பாபரி மட்டுமல்ல, எந்தவொரு மஸ்ஜித்தும் பிறரிடமிருந்து அபகரிக்கப்பட்டிருந்தால் அதனை திருப்பிக்கொடுக்கும் கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது. ஆனால், ஊகங்கள் மற்றும் துவேஷத்தின் பெயரால் அதனை இடித்து தள்ளுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. உரிமை குறித்த கேள்வி எழும்போது அதனை ஆவணங்கள், உண்மைகளின் அடிப்படையில் தீர்த்து வைப்பது நீதிமன்றங்களின் கடமை. நீதிமன்றத்தில் இப்பிரச்சனை வழக்காக இருக்கும் போதுதான் பாசிச சக்திகள் பாபரியை இடித்து தள்ளினர் என்பதை மறந்துவிடக்கூடாது. மஸ்ஜித்தை இடித்த எந்தவொரு குற்றவாளியும் தண்டிக்கப்படவில்லை என்பது நாட்டின் நீதித்துறைக்கே அவமானமாகும். மஸ்ஜித்தை இடித்தவர்கள் இன்றும் புனிதர்களாக நடமாடுகிறார்கள்.

நம்பிக்கையை, சட்டத்தால் அளவிட முடியாது என்பது உண்மை. அதேவேளையில் மத நம்பிக்கையாளர்களின் உரிமையை சட்டம் பாதுகாக்க வேண்டும். இடிப்பதற்கான ஏராளமான பள்ளிவாசல்களின் பட்டியலை சட்டைப் பையில் வைத்துக்கொண்டு அலைகிறது சங்பரிவாரம். நம்பிக்கையின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொல்லும் நாட்டில் அது ஒரு புதிய செய்தி அல்ல. ஒரு சமூகத்தை அச்சுறுத்தி அடிபணிய வைக்க வேண்டும் என்பதே அதன் பின்னணியில் உள்ள உத்தேசம். அந்த உத்தேசம் நமது அரசியல் சாசனம் மற்றும் சட்டங்களின் உதவியால் தோற்கடித்தால் மட்டுமே நாட்டின் ஜனநாயகமும் மதச் சார்பின்மையும் முழுமை பெறும்.

பாபரி மஸ்ஜித் என்பது முஸ்லிம்களுக்கும் -இந்துக்களுக்கும் இடையேயான பிரச்சனை அல்ல. மாறாக, அக்கிரமக்காரர்களுக்கும்- அரசியல் சாசனத்திற்கும் இடையேயான பிரச்சனையாகும். அக்கிரமக்காரர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் எந்த செய்தியும் நீதித்துறையில் இருந்து வெளிப்படுவது கூடாது.

சங்பரிவாருக்கு ராமன் ஒரு தேர்தல் ஆயுதம் மட்டுமே. அதிகாரத்தை தக்கவைப்பதற்கான ஆயுதம். ராமர் கோயிலை கட்டுவது என்பது நம்பிக்கையை விட உணர்ச்சிக்கான முதலீடாகும். இந்த விவகாரம் முடிவுற்றுவிடக்கூடாது என்றுதான் சங்பரிவாரம் விரும்புகிறது. சட்ட ரீதியான வழியில் தோல்வி ஏற்படும் என்று சங்பரிவாரம் பயப்படுகிறது. அதனால் அவர்கள் அச்சுறுத்தலை கையிலெடுக்கின்றனர். சங்பரிவாரின் அச்சுறுத்தல்களுக்கு நாட்டின் அரசியல் சாசன நிறுவனங்கள் அடிபணிந்துவிடக்கூடாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதே அரசியல் சாசன அமைப்பு முறைக்கு கிடைக்கும் வெற்றியாகும்!

Comments are closed.