பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட கெடு விதிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்

0

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட கெடு விதிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு பாராளுமன்றத்தில் இவ்வருட இறுதிக்குள் அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கெடு வித்திதுள்ளது.

ராம ஜன்ம பூமியின் தற்காலிக தலைவர் மக்ந்த் நீரித்ய கோபால் தாஸ் தலைமையில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷ்த் உயர்மட்ட கூட்டத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட பாராளுமன்றத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த பல கோவில் சீர்கள் தங்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீமானத்தின் பிரதியை அவரிடம் அளித்தனர். மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றித்தாருமாறும் ஜனாதிப்தியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கருத்தை தெரிவித்த விஹச்பி இன் தலைவர் அலோக் குமார், தங்களது தீர்மானத்தை அரசு நிறைவேற்ற இவ்வருட இறுதி வரை அரசுக்கு தாங்கள் கெடு விதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு ராமபக்தர்கள் என்றும் அவர்கள் நாட்டின் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை மதித்து தங்களது கோரிக்கையை 2018 இறுதிக்குள் நிறைவேற்றுவார்கள் என்று தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்படி அது நடக்கவில்லை என்றால் அதனை நிறைவேற்ற அனைத்து வழிகளும் தங்கள் முன் திறந்தே உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் மேற்படி நடவடிக்கைகள் குறித்து அடுத்தவருடம் ஜனவரி 31- பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் அலகாபாத்தில் நடக்கவுள்ள மகா கும்பமேளாவில் நடைபெறும் தரம் சண்சாதில் முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இன்னும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோவில் மட்டுமே கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தங்களது கோரிக்கையை பூணூல் அணிந்து தற்போது கோவில்களுக்கு சென்று வரும் தலைவர்களும் ஆதரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டு அவர் கூறியுள்ளார்.

பாபர் மசூதி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதே என்று பத்திரிகையாளர்கள் அலோக் குமாரிடம் கேள்வி எழுப்பியதற்கு, நீதிமன்றத்தின் முடிவு தற்போது வருவது போன்று தெரியவில்லை என்று கூறிய அவர், “உச்ச நீதிமன்றம் தன் கடமையில் இருந்து தவறிவிட்டது. நாங்கள் நெடுங்காலமாக காத்திருந்துவிட்டோம். இனியும் காலம் தாழ்த்த இயலாது.” என்று அவர் கூறியுள்ளார். வரும் காலங்களில் ராமர் கோவிலை விரைந்து கட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுத்தி நாடெங்கிலும் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். வருகின்ற 2019 பாராளுமன்ற தேர்தல் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.