பாபர் மசூதி இடிப்பு வழக்கை முதலில் விசாரித்துவிட்டு நிலம் யாருக்கு என்பதை விசாரிக்க வேண்டும்: நீதிபதி லிபரான்

0

பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கின் இறுதி கட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 5 நடைபெற்றது. இதில் பாபர் மசூதி நிலம் தொடர்பான  வழக்கை அவசர வழக்காக நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்திர பிரதேச அரசு சார்பாக கேட்டுக்ககொள்ளப்பட்டது. ஆனால் இவ்வழக்கை தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கூடாது என்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுற்ற பின்னரே நடத்த வண்டும் என்றும் சுன்னி வஃப் வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் கூறினார். மேலும் இந்த வழக்கை ஐந்து அல்லது ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பென்ச் விசாரணை செய்ய வேண்டும் என்றும் வஃப் வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் இந்த சிறிய பிரச்சனை ஏன் ஏழு நீதிபதிகள் அடங்கிய பென்சினால் விசாரிக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதி அடங்கிய பென்ச் மூவருக்கு இருவர் பெரும்பான்மையில் பாபர் மசூதி இருந்த இடத்தை சுன்னி வஃபு வாரியம், நிர்மோஹி அகரா மற்றும் ராம் லல்லா ஆகிய மூன்று பிரிவினருக்கு சரி சமமாக பிரித்து கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இது தொடர்பான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல இந்த வழக்கை தற்போது விசாரிக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி S.A.நஜீப் மற்றும் நீதிபதி அசோக் பூஷன் அடங்கிய பென்ச், இந்த வழக்கு விசாரணை அடுத்த வருடம் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அதற்குள் அனைத்து ஆவணங்களும் முறையே மொழிபெயர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி லிபரான், பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை விசாரிப்பதற்கு முன்னதாக பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூரியுள்ளார். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “டிசம்பர் ஐந்தாம் தேதியில் இருந்து தினசரி அடிப்படையில் அயோத்யா நில உரிமை பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாக கூறுவது பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை வெகுவாக பாதிக்கும். இப்படி செய்வதன் நோக்கம் என்ன? இது வக்ஃப் வாரிய சொத்து என்று தீர்ப்பு வெளியானால் இதில் ஒரு தரப்பினர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளாவர், அதேபோல் இந்து தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு அமைந்தால் இழந்த தங்கள் நிலத்தை மீட்க என்று கூறப்பட்டு பாபரி மசூதி இடிப்பு நியாயப்படுத்தப்பட்டுவிடும். பாபரி மசூதி இடிப்பு என்பது தற்போதுள்ள மக்களுக்கு தெரிந்த விஷயம். அது குறித்து முதலில் விசாரிக்க வேண்டும். அதற்கு சில வாரங்களோ அல்லது சில மாதங்களோ மட்டுமே ஆகும்.” என்று கூறியுள்ளார். மேலும் தற்போதுள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி, இரண்டு தரப்புமே பாபரி மசூதி இடிப்பு விஷயத்தில் ஓர மாதிரியான மனநிலையில் உள்ளனர். இருவரும் அதனை தங்களின் நோக்கங்களுக்கு பயன்படுத்த முயல்கின்றனர். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மதசார்பற்ற சமூகம் என்ற கருத்து ஸ்லோகங்களோடு முடிந்துவிடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இவர் கூறும் இந்த பாபரி மசூதி இடிப்பு வழக்கு லக்னோவில் அத்வானி, ஜோஷி, உமா பாரதி மற்றும் பலருக்கு எதிராக நடைபெற்று வருகிறது. முன்னதாக அலஹாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர் அலஹாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த பிரச்னைக்கு தீர்வாகாது. நிலம் யாருக்கு சொந்தம் என்று தீர்ப்பளிக்க வேண்டிய இடத்தில் அந்த நிலம் பங்கிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் “நீதித்துறை மீதான முஸ்லிம் நம்பிக்கை மீட்கப்பட வேண்டும். ஆனால் இதில் பிரச்சனை என்னவெனில் அதனை வெகு சில பொது சமூக இயக்கங்களே செய்து வருகின்றனர்.” என்று கூறியுள்ளார்.

முத்தலாக் விவகாரம் குறித்தும் தனது கருத்தை தெரிவித்த நீதிபதி லிபரான், தனியார் சட்டங்கள், பழக்கங்கள், வழிபாட்டு முறைகளில் தலையிட உச்ச நீடிமன்றதிற்கு என்ன உரிமை உள்ளது? இது போன்றே ஒரு சீக்கியர் மற்றும் பார்சி ஆகியோர் தனிவாழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் முடிவு செய்வது குறித்தும் நான் எதிராக உள்ளேன்.” என்று கூறியுள்ளார். “நீதி மன்றங்கள் தங்களது கட்டுப்பாட்டில் இல்லாத மற்றும் தாங்கள் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில்  எல்லாம் தலையிடுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.