பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

0

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி உள்ளிட்டடோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அத்வானி உள்ளிட்ட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அந்த இடத்தில் போடப்பட்டிருந்த மேடையில் கூடியிருந்த பாஜக வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் கல்யாண் சிங், உமா பாரதி உள்ளிட்ட 20 முக்கிய தலைவர்கள் மீது ஒரு வழக்கும், சர்ச்சைக்குரிய இடத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மீது மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அத்வானி மற்றும் இதர தலைவர்களுக்கு எதிரான வழக்கை 2001 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. எனினும், கரசேவகர்கள் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், அத்வானி மற்றும் இதர தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் சி.கே.பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பாஜக மூத்த தலைவர் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 9 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் 4 வார காலத்திற்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ க்கு உத்தரவிட்டனர்.

Comments are closed.