பாபர் மஸ்ஜித் வழக்கு: ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா- வழக்கறிஞர் சுஷில் ஜெயின்!

0

பாபர் மஸ்ஜித் நில வழக்கில் ஆவணங்கள் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா தான் என அந்த அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சுஷில் ஜெயின் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாபர் மஸ்ஜித் நிலத்தை பிரிப்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் 11வது நாளான நேற்று நிர்மோகி அகாரா என்ற இந்து அமைப்பு வாதங்கள் தொடங்கியது. அதன் சார்பில் வழக்கறிஞர் சுஷில் ஜெயின் வாதாடியதாவது:-

அயோத்தி பிரச்சினைக்குரிய பகுதி வரலாற்று ஆவணங்களில் உள்ள ஒரே இந்து அமைப்பு நிர்மோகி அகாரா தான். 1934ஆம் ஆண்டு முதல் அந்த இடம் அகாரா வசம் இருந்தது. அகாரா அந்த நிலத்தின் உரிமையை கோரவில்லை. இந்த வழக்கில் உள்ள மற்ற தரப்புகளும் அகாராவை ஆதரிக்க வேண்டும். அந்த இடம் வக்பு சொத்து என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் வக்பு என்பது இந்து வக்பு.

இதற்கு நீதிபதிகள்: “நீங்கள் அகாராவின் உரிமைகள் தொடர்பான ஆதாரங்களை காட்ட வேண்டும். இதற்கான ஆதாரங்கள் நீங்கள் ஆவணங்களாக காட்டுகிறீர்களா? அல்லது வாய்வழி சாட்சியங்களாக கூறுகிறீர்களா?

வக்கீல் சுஷில் ஜெயின்: “என்னிடம் வாய்வழி சாட்சியங்கள் உள்ளன. அகாராவின் ஆவணங்கள் கொள்ளை சம்பவத்தில் காணாமல் போய்விட்டன” என்றார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், தொடர்ந்து திங்கட்கிழமை காலையும் அகாரா தரப்பு வாதங்கள் தொடரும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

Comments are closed.