பாபா ராம்தேவ் சிறப்பு விருந்தாளர்: IIT மெட்ராஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அமெரிக்க ஆய்வு நிறுவனம்

0

மெட்ராஸ் IIT இன் புற்றுநோய் மாநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பாபா ராம்தேவ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதால் அந்த நிகழ்ச்சியில் இருந்து MD ஆண்டர்சன் புற்றுநோய் மையம் தன்னை விளக்கிக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை மையமாக கொண்டு இயங்கும் இந்த புற்று நோய் ஆய்வு நிறுவனம், தங்களது ட்விட்டர் பக்கத்தில் தாங்கள்  IIT மெட்ராஸில் நடக்க இருந்த சர்வதேச புற்றுநோய் ஆய்வு மாநாட்டில் பங்குகொள்ளவில்லை என்றும் தங்களது பெயர் மற்றும் லோகோ தங்களது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த வருடங்களில் இந்த நிகழ்வுக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்து வந்ததாகவும் இவ்வருடம் இந்த நிகழ்விற்கு தாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் தாங்கள் அதில் பங்குபெறவில்லை என்றும் தங்களது பெயர் IIT மெட்ராஸால் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

மேலும் அதில் பங்கு பெரும் தங்களது ஊழியர்கள் அவர்களது சொந்த நேரத்தில் அதில் பங்கு பெறுகிறார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக MD ஆண்டர்சன் நிறுவனத்தை சேர்ந்த வர்ஷா காந்தி மற்றும் சென் பதக் ஆகியோரின் பெயர் பட்டியலிடப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதன் பின்னணி இந்நிகழ்ச்சிக்கு பாபா ராம்தேவ் சிறப்பு விருந்தினராக பங்கு பெறுவதுதான் என்று கூறப்படுகிறது. கடந்த 2017  நவம்பர் மாதம், அஸ்ஸாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “ஒருவர் முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் தான் புற்றுநோய் வருவதற்கு காரணம்” என்று கூறியிருந்தார். இவரது இந்த கருத்தை பாபா ராம்தேவ் ஆமோதித்திருந்தது குறிபிடத்தக்கது. மேலும் யோகா புற்று நோயை குணப்படுத்தும் என்றும் ராம்தேவ் தெரிவித்திருந்தார்.

Comments are closed.